×

காதல் – தி கோர்

நன்றி குங்குமம் தோழி

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தீகோய் கிராமத்தில் தன் மனைவி ஓமனா (ஜோதிகா), மகள் பெமி (அனகா மாயா ரவி) மற்றும் தந்தை தேவஸியுடன் வாழ்ந்து வருகிறார் ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கியின் முன்னாள் அதிகாரி மேத்யூ தேவஸி (மம்மூட்டி). கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் பிடித்தமானவராகவும் திருச்சபையிடம் நல்லப் பெயரை வாங்கியவராக இருக்கும் மேத்யூ அந்த கிராமத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட களமிறங்குகிறார். அதே நேரத்தில் மேத்யூ ஒரு தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் எனவும் தனக்கு விவாகரத்து வேண்டுமென மேத்யூவின் மனைவி ஓமனா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்கிறார். இந்த குற்றச்சாட்டை மேத்யூ எப்படி எதிர் கொண்டார்? இருவரும் இணைந்தார்களா? தேர்தலில் மேத்யூ வென்றாரா? என்பதுதான் படத்தின் கதை.

’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குநர் ஜோ பேபி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மிகவும் முற்போக்கானது என இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான மம்மூட்டி ஏற்கனவே கூறியிருந்தார். அவர் கூறியதை போலவே தன்பாலின ஈர்ப்பாளர்களின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இந்த படம். தன்பால் ஈர்ப்பாளர்களின் உலகம், அவர்களின் உணர்வுகள் மற்றும் பொதுச் சூழலில் அவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களை குறித்து நமக்குப் போதுமான புரிதல் கிடையாது. காரணம், அவர்களை நாம் சந்தித்து இருக்கமாட்டோம். அப்படியே எதிர்கொண்டிருந்தாலும் இது குறித்தான போதிய அறிவு நமக்கு இல்லாத காரணத்தால் கிண்டலோடு கடந்து போய் விடுகிறோம். இதை பற்றிய விழிப்புணர்வை தான் இந்த படம் பேசுகிறது.

மேத்யூவாக வரும் மம்மூட்டி சமூகத்தில் நல்ல மனிதர், பொறுப்பான தந்தை என சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற பிம்பங்களுக்குள் கட்டுப்பட்டவராக இருந்தாலும் தனக்குள் இருக்கும் தன்பாலின ஈர்ப்பு குறித்தும் அவருக்கு ஏற்படும் காதலுக்கு நேர்மையில்லாமல் இருக்கிறோம் என்பதற்காக மனதிற்குள் புழுங்கிகொண்டே இருக்கிறார். தன்னுடைய பெரிய மனிதர் என்கிற அங்கீகாரத்திற்கு, அவர் தன்பாலின ஈர்ப்பாளர் என தெரிந்தால் என்னவெல்லாம் சிக்கல்கள் வரும், தன் மகள் மீதான பார்வை எப்படிப்பட்டதாக இருக்கும் என பல மனப்போராட்டத்தில் இருக்கிறார். இந்த உணர்வுகளை எல்லாம் தன்னுடைய நடிப்புக் கலையின் மூலம் சாத்தியப்படுத்தி அவர்களுடைய வலிகளை எல்லாம் அப்படியே நம்மிடம் கடத்துகிறார்.

இவருடன் போட்டி போட்டுக் கொண்டு ஜோதிகாவும் முதிர்ந்ததொரு நடிப்பை வெளிப்படுத்தி பிரமிக்க வைத்திருக்கிறார். 20 ஆண்டு கால மணவாழ்க்கையில் தன் கணவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என தெரிந்து ஒரு பெண் எப்படியெல்லாம் மனம் புழுங்குவார். அவர் மீது கொண்ட அன்பும் அவருடைய விருப்பமும் தன்னுடைய விருப்பமும் எவ்வாறாக இருக்கிறது என்பதை பற்றி யோசித்து, இருவருக்குமான தேவை என்ன என்று சிந்தித்து தன்னுடைய கணவருக்கும் நியாயம் வேண்டிதான் நீதிமன்ற படி ஏறுகிறார் ஜோதிகா.

தன்னுடைய வாழ்தலின் மீதான ஏக்கத்தையும், அகஉணர்வுகளையும், வாழ்வின் மீதான காலம் தந்த பக்குவம் இவற்றையெல்லாம் ஒரு பெண் எப்படியெல்லாம் வெளிப்படுத்துவார் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மண வாழ்க்கை இப்படி இருக்கிறதே என வாழ்க்கையின் மீது விரக்தியினால் அளவாகவே பேசுகிறார்கள். அந்த அளவான வசனங்கள் அந்த வயதிற்கே உரிய முதிர்ச்சியின் வெளிப்பாடு எனலாம்.

படத்தின் கதையோட்டத்திற்கேற்ப சாலு கே.தாமஸின் ஒளிப்பதிவும், மேத்யூஸ் புலிக்கனின் இசையில் வரும் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு தேவையான வலியையும் அதற்கான ஆறுதலையும் தருகிறது. படத்தின் முதற்பாதி முழுவதும் கதையின் நாயகர்களை அறிமுகப்படுத்தி அவர்களுடைய ஒவ்வொருவரின் வாழ்வையும் காட்டியபடி மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் தன்பாலின ஈர்ப்பு குறித்து தெரிய வரவே குடும்பம் மற்றும் சமூகத்தின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதால் படம் வேகமெடுக்கிறது.

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் எழுதப்பட்ட விதமும் அந்த கதாப்பாத்திரம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கு பின்னால் உள்ள காரணமும் தெளிவாக காட்டப்பட்டிருப்பதால் படம் முடிந்த பிறகும் அந்த கதாப்பாத்திரங்கள் நம்முள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திகிறது. வழக்கமாக ‘நான்தான் உன்னுடைய வாழ்க்கையை கெடுத்துட்டேன்’ என மகளை பார்த்து அவருடைய அம்மா பேசுவாள். இதில் மேத்யூஸ் தன் தந்தையிடம் ‘‘கல்யாணம் ஆனா எல்லாம் சரி ஆகிடும்னு சொன்னீங்களே? 20 வருஷமா எதுவுமே மாறலயே’’ என்று சொல்லும் போது ‘‘நான்தான் உன்னுடைய வாழ்க்கையை கெடுத்துட்டேன்’’ என்று குற்றத்தை உணர்ந்து மகன் மீது சாய்ந்து தந்தை அழும் அக்காட்சி முற்போக்கு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்.

இறுதியில் ஆண்கள் வரிசை, பெண்கள் வரிசை என இரண்டு வரிசை இருக்க மேத்யூஸின் காதலன் வாக்கு செலுத்திவிட்டு இரண்டு வரிசைக்கும் நடுவில் நடந்து வருவார். அவரை மேத்யூஸின் தந்தையும், மனைவி ஓமனாவும் சந்தோஷமாக சிரித்து வழியனுப்பி வைப்பார்கள். இந்த சுதந்திரத்தைதான் எல்லோரும் கேட்கிறார்கள். மம்மூட்டி போன்ற ஒரு ஸ்டார் தன்பால் ஈர்ப்புள்ளவராக நடித்து ஒட்டு மொத்த எல்ஜிபிடி குழுவினரின் தேவையற்ற குற்ற உணர்வுகளை நீக்கி இருக்கிறார். மேலும் பொதுசமூகத்தில் பால் தேர்வு குறித்தான ஓர் அடிப்படை புரிதலையும் இந்தப் படம் உருவாக்கியிருக்கிறது.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post காதல் – தி கோர் appeared first on Dinakaran.

Tags : Kumkum Dodhi ,Deekoi ,Kottayam district ,Kerala ,Omana ,Jyothika ,Bemi ,Anaka Maya Ravi ,Devasi ,Mathew ,Love ,
× RELATED புளிய மரங்கள் சொல்லும் கதை!