×

காசிக்கு சென்றால், ராமேஸ்வரத்திற்கும் செல்ல வேண்டுமா?

காசிக்கு சென்றால், ராமேஸ்வரத்திற்கும் செல்ல வேண்டுமா?
– பார்வதி வைரமுத்து, இராயபுரம்.

அவசியம் செல்ல வேண்டும். காசி யாத்திரைக்கு ஒரு மரபு உண்டு. முதலில் ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்தக் கடலில் ஸ்நானம் செய்து அங்கிருந்து தீர்த்தம் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்தப் புனிதநீரை காசியில் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து தரிசனம் செய்யவேண்டும். பிறகு காசியிலிருந்து கங்கைநீரை எடுத்துக்கொண்டு மீண்டும் ராமேஸ்வரத்திற்கு வந்து 21 தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து கங்கை நீரை ராமநாத சுவாமிக்கு அபிஷேகிக்க வேண்டும்.

இவ்வாறு அர்ப்பணம் செய்த நீரானது கோடி தீர்த்தம் என்ற பெயரில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். வழியில் நீங்கள் சந்திக்கும் அனைத்து புனிதநதிகளில் இருந்தும் தீர்த்தத்தை சேகரித்துக் கொள்ள வேண்டும். யாத்திரை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் காசியிலிருந்து கொண்டு வரும் கங்கை நீர், ராமேஸ்வரத்தில் 21 தீர்த்தங்களிலும் சேகரிக்கும் நீர், கோடி தீர்த்தம், வழியில் சேகரிக்கும் அனைத்துப் புனிதநதிகளினுடைய நீர் இவையெல்லாவற்றையும் ஒன்றிணைத்து குடும்ப சாஸ்திரிகள் அல்லது புரோஹிதரின் துணையுடன் கங்கைபூஜை செய்து வழிபட வேண்டும்.

இந்த கங்கை பூஜைக்கு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைத்து எல்லோருக்கும் இந்த தீர்த்த பிரசாதத்தை வழங்க வேண்டும். இவ்வாறு தீர்த்தங்களை சேகரிக்கும் யாத்திரை என்பதாலேயே இதற்குத் தீர்த்த யாத்திரை என்று பெயர். ஆக, காசிக்கு செல்வதற்கு முன்னாலும், பின்னாலும் இருமுறையும் ராமேஸ்வரம் அவசியம் செல்ல வேண்டும். ராமேஸ்வரம் சென்று அங்கிருந்துதான் உங்கள் யாத்திரை ஆரம்பிக்கிறது. எங்கிருந்து புறப்படுகிறோமோ, அங்கே திரும்ப வந்து யாத்திரையை முடிக்க வேண்டும் என்பதால் மீண்டும் ராமேஸ்வரத்திற்கு அவசியம் செல்ல வேண்டும். அதன் பின்பே வீடு திரும்ப வேண்டும். அப்போதுதான் காசி யாத்திரை முழுமை பெறும்.

சுமங்கலிகள் மொட்டை அடிப்பது சரியல்ல என்பது எல்லா சமுதாயத்திலும் கடைப்பிடிக்கப்படும் விதி. எனினும் ஒருசில பெண்கள் மொட்டை அடிப்பது, நுனிமுடி தருவது எனச் செய்கிறார்களே, இது சரியா?
– சு. கௌரிபாய், பொன்னேரி.

சரியே. சுமங்கலிப் பெண்கள் மொட்டை அடிப்பது, நுனிமுடி தருவது எல்லாம் பிரார்த்தனையாகவே நிகழ்கின்றன. சுமங்கலிப் பெண்ணிற்கு தலைமுடி அதிமுக்கியம் எனத் தெரிந்தும் அதனைத் தியாகம் செய்யத் துணிகிறார்கள் என்றால் அவர்களின் பிரார்த்தனை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். எந்த ஒரு சுமங்கலிப் பெண்ணும் சாதாரணமான கோரிக்கையை முன்வைத்து இவ்வாறு வேண்டிக்கொள்வதில்லை. கணவர் மற்றும் பிள்ளைகள் நோய்நொடிகள் ஏதுமின்றி தீர்க்காயுளுடன் வாழவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கடுமையான பிரார்த்தனைகளை இறைவனிடம் முன்வைக்கிறார்கள், அதனை நிறைவேற்றவும் செய்கிறார்கள். பிரார்த்தனை என்று வரும்போது அந்த சம்பிரதாயத்தில் குறை காண இயலாது.

தொகுப்பு: அருள் ஜோதி

The post காசிக்கு சென்றால், ராமேஸ்வரத்திற்கும் செல்ல வேண்டுமா? appeared first on Dinakaran.

Tags : Kashi ,Rameswaram ,Parvathy Vairamuthu ,Rayapuram ,Kashi Yatra ,Agni Tirtha ocean ,Tirtha ,
× RELATED கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவான காதலன் காசியில் சடலமாக மீட்பு