×

திருமங்கலம் குண்டாற்றில் புதிய ஆறுகண் பாலப்பணிகள் துவக்கம்

திருமங்கலம், ஜன.29: கொல்லம் வரையிலான நான்கு வழிச்சாலை பணிகளுக்காக திருமங்கலம் நகரிலுள்ள குண்டாற்றில் புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி வழியாக கேரள மாநிலம் கொல்லம் வரையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 744 தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. திருமங்கலம்- ராஜபாளையம், ராஜபாளையம் – தென்காசி, தென்காசி – கொல்லம் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

தற்போது திருமங்கலம் தீயணைப்பு நிலையம் அருகேயிருந்து ஆலம்பட்டி கிராமம் வரையில் நான்கு வழிச்சாலை பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திருமங்கலம் – விருதுநகர் ரோட்டில் நகரின் எல்லையில் அமைந்துள்ள குண்டாறு மேம்பாலம் அதாவது நகர மக்களால் ஆறுகண்பாலம் எனப்படும் பாலத்தின் அருகே புதிய நான்கு வழிச்சாலைக்காக மற்றொரு மேம்பாலம் கட்டும் பணிகளை நெடுஞ்சாலைத்து றையினர் துவக்கியுள்ளனர். இதற்காக பழைய பாலம் அருகே குண்டாற்றில் புதிய பாலத்திற்கான பில்லர் அமைக்கும் பணிகளுக்காக ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு பள்ளம் தோண்டும் பணிகள் நடந்து வருகிறது.

தொடர்ந்து புதிய பாலம் அமைக்கப்படும். திருமங்கலம் – கொல்லம் நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வரும் போது புதிய குண்டாறு பாலமும் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர். அதே நேரத்தில் ஏற்கனவே இருக்கும் ஆறுகண் பாலமும் பலப்படுத்தப்படும் என தெரிவித்தனர். நகரில் புதிய பாலம் அமைக்கப்படுவதால் விருதுநகர் – மதுரை, ராஜபாளையம் – மதுரை பகுதிகளிலிருந்து வந்து செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எந்தவித நெரிசலும் இன்றி திருமங்கலம் நகரினை கடந்து செல்லும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

The post திருமங்கலம் குண்டாற்றில் புதிய ஆறுகண் பாலப்பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : New Arugan Foundations ,Thirumangalam Gundat ,Thirumangalam ,Kollam ,Kundat ,Thirumangala National Highway ,Kallupatti ,Thiruvilliputur ,Rajapaliam ,Tenkasi ,Kerala State ,Ararugan Palapani ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி