×

தமிழகத்தில் ஜவுளி தொழிலை பாதுகாத்திட நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பருத்தி நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் நவம்பர் 26ம் தேதி நடக்கும் ஒரு நாள் முழு அடைப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. பருத்தி நூல் விலை கடந்த நவம்பர் 1ம் தேதி கிலோவுக்கு ரூ.50 என்ற அளவில் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால் ஜவுளித் தொழில் துறை கடும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.  சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும், இதை சார்ந்த சமூகப் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. நூல் விலை உயர்வை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், பஞ்சு, நூல் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும் நிறுவனங்கள், பதுக்கல்காரர்களால் நூல் விலை அதிகரிக்கக்கூடிய ஆபத்தும் உள்ளது. இது ஜவுளித் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். தமிழகத்தில் ஜவுளித் தொழிலை பாதுகாக்க ஒன்றிய அரசு தலையிட வேண்டும். தமிழக அரசு அதற்கான கோரிக்கையை ஒன்றிய அரசிடம் வலியுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம். மேலும், ‘தமிழ்நாடு பருத்திக் கழகம்’ என்ற தனி நிறுவனத்தை தமிழக அரசு தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன….

The post தமிழகத்தில் ஜவுளி தொழிலை பாதுகாத்திட நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Marxist ,Communist ,Chennai ,executive committee ,Communist Party of India ,Madhukur Ramalingam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...