×

பீதியை கிளப்பும் டூம்ஸ்டே கடிகாரம் உலக அழிவுக்கு 90 நொடிகளே மிச்சம்: அணு விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கான்பெர்ரா: உலகம் அழிவதற்கான பேராபத்துகள் எந்தளவுக்கு உள்ளது என்பதை மதிப்பிடும் டூம்ஸ்டே கடிகாரத்தின் முட்கள், வெறும் 90 நொடிகளே எஞ்சியிருப்பதை காட்டுவதாக அணு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த 1945ம் ஆண்டு அணுகுண்டு கண்டுபிடிப்பின் மூலம் முதல் முறையாக மனித குலம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் திறன் பெற்றது. இதன் விபரீதம், 2ம் உலகப் போரில் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய போது புரிந்து கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என உலக தலைவர்களுக்கு அழுத்தம் தரவும், இவற்றின் விபரீதம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஜே. ரோபர்ட் ஓப்பன்ஹெய்மர் மற்றும் அணுகுண்டை கண்டுபிடித்த பிற ஆய்வாளர்கள் இணைந்து அணுசக்தி ஆய்வாளர்கள் புல்லட்டினை உருவாக்கினர்.

இதன்படி, 1947ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அணுசக்தி, பருவநிலை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட குழு ஒன்று கூடி டூம்ஸ்டே என்னும் உலக அழிவு ஏற்படும் நாளை காட்டும் கடிகாரத்தின் முட்களை நகர்த்தி வருகின்றனர். அதன்படி 2024ம் ஆண்டிற்கான டூம்ஸ்டே கடிகாரத்தின் முட்கள் நள்ளிரவு 12 மணியை தொட வெறும் 90 நொடிகளே எஞ்சியிருப்பதாக காட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் மனிதகுலம் பேரழிவிற்கு மிக அருகாமையில் இருப்பதை அணு விஞ்ஞானிகள் உணர்த்தி உள்ளனர். உலக அழிவுக்கு 4 முக்கிய காரணங்களை இந்த ஆண்டிற்கான புல்லட்டின் பட்டியலிட்டுள்ளது. அவை, அணு ஆயுதங்கள், பருவநிலை, உயிரியல் அச்சுறுத்தல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்.

ரஷ்யா, உக்ரைன் மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான போர்கள் அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதே போல பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன. கொரோனா போன்ற தொற்றுநோய்கள் மற்றும் அழிவுகரமான வைரஸ்கள் குறித்து அதிகரித்து வரும் ஆராய்ச்சிகள் அழிவை நோக்கி நம்மை நெருங்க வைத்துள்ளன. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் பட்சத்தில் இயற்கையான வைரஸ்களை விட அபாயகரமான செயற்கை வைரஸ்கள் உருவாக்கப்படும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

The post பீதியை கிளப்பும் டூம்ஸ்டே கடிகாரம் உலக அழிவுக்கு 90 நொடிகளே மிச்சம்: அணு விஞ்ஞானிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Panic ,CANBERRA ,
× RELATED காரியாபட்டி அருகே பயங்கரம்: கல்குவாரி...