×

கேரளாவில் பரபரப்பு மின்சார வேலியில் சிக்கி கணவன்- மனைவி பலி

*சொந்த தோட்டத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனவிலங்குகள் வராமல் இருப்பதற்காக தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியிலிருந்து மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவதாஸ் (62). இவரது மனைவி சரசு (60). அதே பகுதியில் சிவதாசுக்கு சொந்தமாக காபி தோட்டம் உள்ளது. வனவிலங்குகள் அடிக்கடி தோட்டத்திற்குள் புகுந்து காபி பயிர்களை நாசம் செய்து வந்ததால் அதைத் தடுப்பதற்காக சிவதாஸ் தன்னுடைய தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.

தினமும் இரவு நேரங்களில் இந்த வேலியில் மின்சாரத்தை பாய்ச்சுவது வழக்கம். நேற்று முன்தினம் சிவதாசும், சரசுவும் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரியாமல் சரசு வேலியை தொட்டுள்ளார்.இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. அதைப்பார்த்த சிவதாஸ் மனைவியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று இருவரையும் சாமர்த்தியமாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவதாசும், சரசுவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து அறிந்ததும் புல்பள்ளி போலீசாரும், மின்வாரியத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். இதில் மின் வேலி அமைப்பதற்கு சிவதாஸ் முறையான அனுமதி பெறவில்லை என தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது தோட்டத்தில் போடப்பட்ட மின்சார வேலியில் சிக்கி கணவன்-மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கேரளாவில் பரபரப்பு மின்சார வேலியில் சிக்கி கணவன்- மனைவி பலி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram, Kerala ,Wayanadu district ,Sivadas ,Bulpalli ,Kerala State Wayanadu District ,
× RELATED வயநாட்டில் கிணற்றில் விழுந்து...