×

டிஎன்பிஎஸ்சி நடவடிக்கையில் முழு திருப்தி குரூப் 2 மெயின்ஸ் மறு தேர்வு நடத்த கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: குரூப் 2 மெயின்ஸ் மறு தேர்வு நடத்தக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, டிஎன்பிஎஸ்சியின் நடவடிக்கையில் முழு திருப்தியே என கூறியுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே காரேந்தல்மைலியைச் சேர்ந்த கருப்பையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புதவற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த 23.2.2022ல் வெளியிட்டது. துவக்கநிலை எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றதால், மெயின் தேர்வுக்கு தேர்வானேன். மெயின் தேர்வில் காலையில் தமிழ் தகுதித்தேர்வு, பொது அறிவுக்கான தேர்வு மதியம் நடந்தது. கடந்த பிப்.25ல் மதுரை புட்டுத்தோப்பில் உள்ள பள்ளியில் நடந்த மெயின் தேர்வில் பங்கேற்றேன். நான் உள்ளிட்ட பலருக்கு பதிவு எண்கள் மாறியிருந்த வினாத்தாள் தொகுப்பு வழங்கப்பட்டன. பதிவு எண் மாறிய வினாத்தாளில் பலர் தேர்வு எழுத துவங்கினர். இதை சரி செய்து வழங்க ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமானது. காலையில் 10.45 மணிக்கும், மாலையில் 2.30 மணிக்கும் தான் தேர்வு துவங்கியது. இதனால், நல்ல மனநிலையில் யாரும் தேர்வு எழுத முடியவில்லை. எனவே, மதியம் நடந்த மெயின்ஸ் தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இதேபோல் மேலும் சிலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார். டிஎன்பிஎஸ்சி தரப்பில் மூத்த வக்கீல் ஐசக்மோகன்லால், வக்கீல் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆஜராகி, ‘‘காலை 9.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. பதிவு எண் மாறிய இடங்களில் வினாத்தாள் உடனடியாக திரும்ப பெறப்பட்டன. பதிவு எண் மாறிய வினாத்தாளை யாரும் திறக்கவில்லை. தாமதமின்றி, போதிய அவகாசத்துடன் சரியான பதிவெண் கொண்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. எந்த தேர்வு மையத்திலும் தேர்வு நேரம் நிர்ணயிக்கப்பட்ட 3 மணி நேரத்தை தாண்டவில்லை. வினாத்தாளின் பக்கவாட்டில் உள்ள சீலை அகற்றாமல் வினாத்தாளை யாரும் பார்க்கவோ, விவாதிக்கவோ வாய்ப்பில்லை. உபயோகித்த வினாத்தாளை தந்ததாக மனுதாரர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. யூகத்தின் அடிப்படையிலேயே கூறுகின்றனர். தேர்வர்களின் குழப்பத்தை போக்கிடும் வகையில் பிற்பகலில் நடந்த தேர்வுக்கான வினாத்தாளின் பிளாஸ்டிக் உறைகள் கூட தேர்வர்களின் முன்னிலையில் தான் பிரிக்கப்பட்டது. வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வினாத்தாள் கசிந்தது என்பது தவறானது. இருவேளைகளில் வழங்கப்பட்ட வினாத்தாள் உறையின் கலர்கள் வெவ்வேறானது. வினாத்தாளை மாற்றி விநியோகம் செய்ய முடியாது. செவிவழி தகவலை வைத்தே கூறுகின்றனர்’’ என்றனர்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பயன்படுத்தப்பட்ட வினாத்தாளை கொடுத்ததாக யாரும் புகார் அளிக்கவில்லை. முதல் பக்கத்திலேயே பதிவு எண் அச்சிடப்பட்டுள்ளது. பதிவெண் தவறானதாக இருந்திருந்தால், அதை யாரும் திறந்திருக்க வாய்ப்பில்லை. வினாத்தாள் மாறியதாக கூறுவது யூகம் மற்றும் செவிவழி செய்தியே. மதியம் நடந்த தேர்வில் காலை நடந்த தேர்வுக்கான வினாத்தாளை மாற்றி கொடுத்ததாக எந்த தேர்வு மையத்திலும் புகார் இல்லை. டிஎன்பிஎஸ்சியின் நடவடிக்கையில் நீதிமன்றத்திற்கு முழு திருப்தி தான். டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டுள்ள நியமன நடவடிக்கையில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. இனிவரும் காலங்களில் எந்தவித குழப்பமும் ஏற்படாத வகையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

The post டிஎன்பிஎஸ்சி நடவடிக்கையில் முழு திருப்தி குரூப் 2 மெயின்ஸ் மறு தேர்வு நடத்த கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Group 2 Mains ,ICourt ,Madurai ,Karupiya ,Karendalmaili ,Thiruchuzhi, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு