×

உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக்கோரி போராட்டம்

 

தாராபுரம், ஜன.26: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு, முழு கொள்ளளவு தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் அணை நீர் பிடிப்பு பகுதியில் பந்தலிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் அடுத்துள்ள உப்பாறு அணை 24 அடி கொள்ளளவை கொண்டது. இங்கு தேக்கி வைக்கப்படும் பாசன நீர் மூலம் மொத்தம் 6060 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 15000 ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுவதுடன் ஏழு கிராம பஞ்சாயத்துகளை சார்ந்த சுமார் 5,000 பேர் குடிநீரையும் கால்நடைகளுக்கான குடிநீரையும் பெற்று வந்தனர்.

தாராபுரம் வட்டார அளவிலான விவசாயிகளுக்கு பாசன நீரை வழங்கி வந்த உப்பாறு அணைக்கு, திருமூர்த்தி அடையிலிருந்து பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் உபரி நீரை வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கனமழை பெய்து, பிஏபி அணையில் நீர் இருந்த போதும் தேவைக்கு மேல் வெளியேறும் உபரி நீர் மட்டுமே உப்பாறு அணைக்கு திறக்கப்படுகிறது.

அரசு உத்தரவிட்டுள்ளபடி, அணைக்கு முழுமையாக தண்ணீர் வழங்க வேண்டுமென விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், நான்கு முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு, கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக, விவசாயிகளிடம் கலெக்டர் தெரிவித்தார். இதனால் உப்பாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் நேற்று மாலை முதல் இரவு பகலாக தொடர் போராட்டம் நடத்துவதாக தெரிவித்து பெண்கள், ஆண்கள் என 70-க்கும் மேற்பட்டோர் உப்பாறு அணை நீர் பிடிப்பு பகுதிக்குள் பந்தல் அமைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக்கோரி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Upparu Dam ,Tarapuram ,Uppar dam ,Tirupur district ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...