×

வனவிலங்குகள் நடமாட்டம் நவமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

 

பொள்ளாச்சி, ஜன. 26: பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் தடையை மீறி செல்வதை தடுக்க, வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட மானாம்பள்ளி, உலாந்தி (டாப்சிலிப்), பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய வனசரகங்கள் உள்ளன. இதில் பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதிகளில் அடந்த காடுகள் உள்ளன.

குறிப்பாக பொள்ளாச்சி வனசரகத்தில் நவமலை, சர்க்கார்பதி சேத்துடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் யானை, வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல விலங்குகள் கண்ணில் தென்படுகிறது. பொள்ளாச்சி வனசரகத்தில் உள்ள அடர்ந்து காட்டுப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. மீறிசெல்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் குறிப்பாக ஆழியார் அடுத்த கவியருவி இருந்து நவமலைசெல்லும் சாலையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியால் வனத்திற்குள் சென்றுவிடுகின்றனர். தற்போது மழை குறைந்து, வனப்பகுதியில் இருந்து விலங்குகள் இடம்யெர்ந்து வருவது அதிகரித்துள்ளதால், கவியருவியிலிருந்து நவமலை செல்லும் சாலையில், வனத்துறையினர் நின்று சுற்றுலா பயணிகளை கண்காணித்து வருகின்றனர். விடுமுறை நாட்களில், வனப்பகுதி காட்டுக்குள் செல்லும் சுற்றுலா பயணிகளை எச்சரிக்கை விடுத்து அனுப்புவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post வனவிலங்குகள் நடமாட்டம் நவமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Navamalai ,Pollachi ,Anaimalai Tiger Reserve ,Western Ghats ,Dinakaran ,
× RELATED கடும் வறட்சி எதிரொலி: டாப்சிலிப்...