×
Saravana Stores

திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில் கண் அறுவை சிகிச்சை அரங்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

 

திருவொற்றியூர், ஜன.26: திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கண் அறுவை சிகிச்சை அரங்கத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனையில், தினசரி 900 நோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் எம்.ஆர்.எப் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கண் அறுவை சிகிச்சை அரங்கம் கட்டப்பட்டது. இதேபோல், எச்.பி.சி.எல் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதி ரூ.20 லட்சத்தில் மருத்துவ உபகரணங்களை வழங்கியது.

இவ்வாறு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கண் அறுவை சிகிச்சை அரங்கத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவொற்றியூர் பகுதியில் கண் அறுவை சிகிச்சை அரங்கம் உருவாக்க வேண்டும், என சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, எம்.ஆர்.எப். நிறுவன சிஎஸ்ஆர் நிதியில் இருந்து ரூ.55 லட்சம் செலவில் கண் அறுவை சிகிச்சை அரங்கம் அமைத்து, அங்கு மருத்துவரும் பணியமர்த்தபட்டுள்ளார்.

இந்த மருத்துவமனையில் காலி பணிணிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மக்கள் அதிக அளவில் இந்த மருத்துவமனையை பயன்படுத்தும்பட்சத்தில் கூடுதலாக மருத்துவர்கள் பணியமர்த்தபட உள்ளனர். வைரல் மற்றும் சிறப்பு காய்ச்சல் என்று எதுவும் தற்போது இல்லை. தமிழகத்தில் டெங்கு மாதிரியான காய்ச்சல்கள் கட்டுக்குள் இருக்கிறது. இறப்புகள் மிகமிக குறைந்துள்ளது. காய்ச்சல் பாதிப்புகளுக்கு வீட்டிலேயே வைத்து மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் சிகிச்சை பெறுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளது.

காய்ச்சல் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வருவதாலேயே இறப்புகள் நேரிடுகிறது. எண்ணூர் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் மீனவர்களுக்கு முழுஉடல் பரிசோதனை வரும் ஞாயிற்றுகிழமை மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், கலாநிதி வீராசாமி எம்பி, மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, பகுதி செயலாளர் அருள்தாசன், திமுக மாவட்ட அமைப்பாளர்கள் செந்தில், மதன்குமார், கவுன்சிலர் சரண்யா கலைவாணன், அரசு மருத்துவர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில் கண் அறுவை சிகிச்சை அரங்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Tiruvottiyur Government ,Hospital ,Tiruvottiyur ,People's Welfare ,Tiruvottiyur Government General Hospital ,Tiruvottiyur Government Hospital ,
× RELATED குழந்தையின் தொப்புள் கொடி அறுப்பு...