×
Saravana Stores

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.5 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்: 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டத்தில் ₹5 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை செயல்படுத்த 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாதாந்திர திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டம் தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நேற்று நடந்தது. உதவி ஆணையர் நவேந்திரன், செயற்பொறியாளர் உசேன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட பணிகள் தொடர்பாக கவுன்சிலர்களிடையே விவாதம் நடந்தது.

அப்போது 6வது வார்டு கவுன்சிலர் சாமுவேல் திரவியம் பேசுகையில், எனது வார்டில், எண்ணெய் கழிவால் அனைத்து வீடுகளும் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பலருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அதனால் சி.பி.சி.எல். நிறுவனத்திடமிருந்து நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்து பேசிய மண்டலக்குழு தலைவர் தனியரசு, எண்ணெய் கழிவு பிரச்னையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மண்டலக்குழு கூட்டத்தில், காரணமில்லாமல் பங்கேற்க தவறும் கவுன்சிலர்களின் வார்டு தீர்மானம் நிறைவேற்றப்படாது. திட்டப்பணிகள் குறித்து வெளிப்படைத்தன்மை அவசியம். எனவே சாலைப் பணிகள் நடக்கும்போது அந்த பணிக்கான ஆணையை, கவுன்சிலர் மற்றும் கிராம நிர்வாகத்தினரிடம் காண்பித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நடைமுறையை மீறும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து 1வது வார்டு, நெட்டுக்குப்பம் பகுதியில் கே.பி.சங்கர் எம்எல்ஏ நிதி ₹33 லட்சம் செலவில் புதிதாக கலையரங்கம் கட்டுதல், பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல் உள்பட ₹5 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அ.தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக், மண்டலக்குழு கூட்டத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் அதிகாரிகள் வருவதில்லை எனக்கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

The post திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.5 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்: 25 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Tiruvottiyur Zonal Committee ,Thiruvottiyur Zonal Committee ,DM ,Assistant Commissioner ,Navendran ,Executive Engineer ,Hussain ,Thiruvottiyur ,Dinakaran ,
× RELATED சென்னை திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு: 35 மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு