×

மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்; கடந்த நிதியாண்டில் 7.8 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல்

புதுடெல்லி: கடந்த 2022-23 நிதியாண்டில் 7.8 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. வரிகள் மூலமான வருவாயை அதிகரிப்பதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஜிஎஸ்டி வருவாயும் அரசு நிர்ணயித்த ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை தாண்டி அபாரமாக வசூலாகி வருகிறது. வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் இதற்கு காரணம். கடந்த 2022-23 நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 7.8 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2022-23 நிதியாண்டில் 7.8 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இது 2013-14 நிதியாண்டில் தாக்கல் செய்த 3.8 கோடியுடன் ஒப்பிடுகையில் 105 சதவீத அதிகரிப்பாகும். நேரடி வரி வருவாயில் டிடிஎஸ் மூலம் ₹8.2 லட்சம் கோட வசூலாகியுள்ளது. முன்கூட்டிய வரியாக ₹7.3 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சுய மதிப்பீடு மூலம் ₹1.3 லட்சம் கோடி வரி செலுத்தப்பட்டுள்ளது.

நிகர நேரடி வரி வருவாய் 2013-14 நிதியாண்டில் ₹6,38,596 கோடியாக இருந்தது. இது 2022-23 நிதியாண்டில் 160.5 சதவீதம் அதிகரித்து ₹16,63,686 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டில் நேரடி வரி வருவாய் மூலம் ₹18.2 லட்சம் கோடி வசூலிக்க அரசு நிர்ணயித்திருந்தது.

இந்நிலையில் 2013-14 நிதியாண்டில் ₹7,21,604 கோடியாக இருந்த நேரடி வரி வருவாய் 173.3 சதவீதம் அதிகரித்து ₹19,72,248 கோடியாக உள்ளது. மொத்த வரி வருவாயில் இது 54.6 சதவீதமாகும். முந்தைய ஆண்டு நேரடி வரி வருவாயின் பங்களிப்பு 52.3 சதவீதமாக இருந்தது என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

The post மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்; கடந்த நிதியாண்டில் 7.8 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Federal Direct Taxes Board ,New Delhi ,EU government ,Dinakaran ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...