×

இறந்த மூதாட்டியின் இறுதிச்சடங்கு வரை சுற்றி வந்து பரிதவித்த வளர்ப்பு நாய் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, ஜன.24: திருவண்ணாமலையில் இறந்த மூதாட்டியை விட்டு பிரிய மனமின்றி, இறுதி சடங்குவரை சுற்றிச்சுற்றி வந்த வளர்ப்பு நாயின் பரிதவிப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிம்மதீர்த்தம் பகுதியில் வசித்து வந்தவர் தாராகவுரி(85). பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் சுதந்திரத்திற்கு பிறகு குஜராத் மாநிலத்தில் குடியேறினார். திருமணமாகாத இவர் சில ஆண்டுகள் சென்னையில் வசித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக தனித்து வசிக்க இயலாத நிலையில், திருவண்ணாமலையில் உள்ள தூரத்து உறவினர் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கியிருந்தார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மூதாட்டி தாரா கவுரி உயிரிழந்தார். எனவே, அவரது உடலை அடக்கம் செய்ய சமூக சேவகர் மணிமாறன் உதவியை நாடினர். தொடர்ந்து, சமூக சேவகர் மணிமாறன், தாராகவுரியின் உறவினர்கள் தெரிவித்த சம்பிரதாயங்களின் அடிப்படையில், கிரிவலப்பாதையில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தார். இந்நிலையில், மூதாட்டி தாராகவுரி திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது, அந்த வீட்டின் வளர்ப்பு நாயிடம் பாசத்துடன் இருந்துள்ளார். அதனால், மூதாட்டி இறந்ததில் இருந்து அவரது உடல் அருகிலேயே வளர்ப்பு நாய் படுத்து கிடந்துள்ளது.

மேலும், அவரது உடலையே சுற்றிச்சுற்றி வந்துள்ளது. அதோடு, இறுதி ஊர்வலத்துக்காக வாகனத்தில் தாராகவுரியின் உடலை ஏற்றியதும், வளர்ப்பு நாயும் வேகமாக ஓடிவந்து அந்த வாகனத்தில் ஏறிக்கொண்டது. மேலும், மயானம் வரை உடன் வந்த வளர்ப்பு நாய், இறுதிச்சடங்குகள் முடியும் வரை அங்கேயே பரிதவிப்புடன் இருந்தது. வளர்ப்பு நாயின் இந்த பரிதவிப்பும், பாசமும் நிறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. உறவினர்கள் யாருமின்றி திருவண்ணாமலையில் தனித்து வாழ்த்த மூதாட்டிக்காக, வளர்ப்பு நாய் தவித்த காட்சிகள் காண்போரை கலங்க வைப்பதாக உளளது.

The post இறந்த மூதாட்டியின் இறுதிச்சடங்கு வரை சுற்றி வந்து பரிதவித்த வளர்ப்பு நாய் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,Taragavuri ,Simmathirtham ,Kriwalabathi, Tiruvannamalai ,Pakistan ,
× RELATED சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே...