×

தாட்கோ சார்பில் சென்னையில் எக்ஸ்போ-2024 இளைஞர்களை தொழில் முனைவோராக்க 350 அரங்குகளுடன் மாபெரும் கண்காட்சி: வரும் 26, 27ல் நடக்கிறது

சிறப்பு செய்தி

இளைஞர்களை தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் வகையில் தாட்கோ சார்பில் சென்னையில் 26, 27 ஆகிய 2 நாட்கள் மாபெரும் கண்காட்சி நடக்கிறது. ஆதிதிராவிட மக்களுக்கு அரசின் சார்பில் வீடுகளை கட்டி கொடுக்கும் நிறுவனமாக கடந்த 1974ல், கலைஞரின் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தொடங்கப்பட்டது. இந்த கழகத்தின் தற்போதைய அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.200 கோடியும், செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ.147 கோடியும் உள்ளதாக 2023-24க்கான கொள்கை விளக்க குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கழகத்தின் முக்கிய நடவடிக்கையாக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துதல், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை உள்ளன.

இந்தாண்டு தாட்கோ சார்பாக, சென்னையில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் தொழில்முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி, சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. பல்வேறு தொழில்துறைகளை ஒருங்கிணைத்து இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இதுகுறித்து தாட்கோ மேலாண் இயக்குனர் கந்தசாமி கூறியதாவது: தாட்கோ நடத்தும் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழிலதிபர்களுக்காக முதன்முறையாக நடத்த உள்ளோம். அதன்படி, இந்த எக்ஸ்போவில் தமிழகத்தில் உள்ள தொழில்முனைவோர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தொழில்முனைவோர்களுக்கான கூட்டமைப்பை உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம். இதில், அவர்களுக்கான பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வியாபாரம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி, கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இதுவரை நூற்றுக்கணக்கான தொழில்முனைவோர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் தமிழக தொழில்முனைவோர்கள் மட்டுமின்றி மற்ற மாநில தொழில்முனைவோர்களும் பதிவு செய்த வண்ணம் உள்ளதால் தாட்கோ மூலமாக அமைக்கப்பட்டுள்ள குழு மூலமாக தொழில்முனைவோரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, இந்த கண்காட்சியில் 350 அரங்குகள் அமைக்க உள்ளோம். தொழில் வளர்ச்சியில் சாதனை புரிந்தவர்களை அழைத்து கருத்தரங்கம் நடத்த உள்ளோம்.

அதேபோல், பி2பி மூலம் இரு தொழில் வர்த்தக முனைவோர்களிடையே தொழில்களை மேம்படுத்துதல், பி2சி மூலம் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் இடையே நல்ல தொழில் உறவுகளை வளர்த்தல், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் உற்பத்தி பொருட்களை வாங்குவோர் மற்றும் விற்பனை செய்வோர் இடையே உரையாடல் உள்ளிட்ட கருத்துகளை பகிர்தல், இதுமட்டுமின்றி தாட்கோ மூலம் வியாபாரிகளுக்கு அளிக்கப்படும் மானிய விலை பொருட்கள், கடன்கள் மற்றும் இதர சலுகைகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும். பழங்குடியினரின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் ஆடல், பாடல்கள், விருது வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. மேலும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, இன்றைய இளம் தலைமுறையினரை தொழில்முனைவோராக்க புதிய பாதை அமைக்கும் வகையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பம்சம்

* தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை சந்திக்கும் வாய்ப்பு

* முன்னணி நிறுவனங்களின் நேரடி கொள்முதல்

* புதிய தொழில் தொடங்குதல், வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்

The post தாட்கோ சார்பில் சென்னையில் எக்ஸ்போ-2024 இளைஞர்களை தொழில் முனைவோராக்க 350 அரங்குகளுடன் மாபெரும் கண்காட்சி: வரும் 26, 27ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Expo-2024 ,Tatco ,Chennai ,TADCO ,Adi Dravida ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...