×

அயோத்தி ராமர் கோவில் திறப்பு

* மங்கள இசை நிகழ்ச்சி

பிராண பிரதிஷ்டை விழா தொடங்கும் முன்பாக காலை 10 மணி முதல் 2 மணி நேரத்திற்கு மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து நாதஸ்வரம், மிருதங்கம், கர்நாடகாவின் வீணை, உபியின் தோலக், புல்லாங்குழல், பஞ்சாப்பின் அல்கோஜா, மகாராஷ்டிராவின் சுந்தரி, ஒடிசாவின் மர்தலா, மபியின் சந்தூர், மணிப்பூரின் புங் உள்ளிட்ட இசை வாத்தியங்களுடன் இசைக் கலைஞர்கள் மங்கள இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், சோனு நிகாம், அனுராதா படுவால், சங்கர் மகாதேவன் ஆகியோர் ராமரின் பக்திப் பாடல்களை பாடினார்.

* 1528 முதல் 2024ம் ஆண்டு வரை…

* 1528: முகலாய பேரரசர் பாபரின் தளபதி மிர் பாகி 1528ம் ஆண்டில் பாபர் மசூதியை கட்டினார். இந்த மசூதி இந்து கோயிலின் இடிபாடுகள் மீது கட்டப்பட்டதாக சர்ச்சை தொடங்கியது.

* 1885: நிர்மோகி அகாரா பிரிவைச் சேர்ந்த துறவி மஹந்த் ரகுபிர் தாஸ், பிரச்னைக்குரிய கட்டுமானத்தின் வெளிப்பகுதியில் கோயில் கட்ட அனுமதி கோரி பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, ஆங்கிலேய அரசு நிர்வாகம் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித்தனி வழிபாட்டு தலங்களைக் குறிக்கும் வகையில், பிரச்னைக்குரிய கட்டுமானத்தை சுற்றி வேலி அமைத்தது. இது 90 ஆண்டுகளுக்கு நீடித்தது.

* 1949: பிரச்னைக்குரிய கட்டுமானத்திற்கு வெளிப்பகுதியில் மத்திய குவிமாடத்தின் கீழ் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டது. இது இப்பிரச்னையை தீவிரப்படுத்தியது. பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

* 1986, பிப். 1: ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் உள்ள பிரச்னைக்குரிய பகுதியை திறந்து இந்துக்கள் வழிபட அனுமதிக்குமாறு அரசுக்கு உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* 1989, ஆக. 14: பிரச்னைக்குரிய கட்டுமானத்தின் நிலை அப்படியே தொடர வேண்டுமென அகலாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* 1992, டிச. 6: கர சேவகர்களால் 16ம் நூற்றாண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

* 1993, ஏப். 3: சர்ச்சைக்குரிய இடத்தில் ஒன்றிய அரசு நிலத்தை கையகப்படுத்த ‘அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை கைப்படுத்துதல்’ சட்டம் நிறைவேற்றப்பட்டது.

* 2002, ஏப்ரல்: சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது.

* 2010, செப். 30: சர்ச்சைக்குரிய இடத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லாவுக்கு 3 பங்காக பிரித்து கொள்ள 2:1 என்ற பெரும்பான்மையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

* 2011, மே 9: அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

* 2019, ஜனவரி: வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

* 2019, ஆக. 6: நிலம் தொடர்பான வழக்கில் தினசரி அடிப்படையில் விசாரணை தொடங்கியது.

* 2019, அக். 16: விசாரணை நிறைவடைந்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

* 2019, நவ. 9: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை கடவுள் குழந்தை ராமருக்கு வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. இந்நிலத்தின் பொறுப்பு ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மசூதி கட்டுவதற்கு நகரின் பிரதான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை இஸ்லாமியர்களுக்கு வழங்க ஒன்றிய மற்றும் உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

* 2020, பிப். 5: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைப்பதாக மக்களவையில் பிரதமர் மோடி அறிவித்தார்.

* 2020, ஆக. 5: ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

* 2024, ஜன. 22: ராமர் கோயிலின் முதல் பகுதி கட்டி முடிக்கப்பட்டு, மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு முறைப்படி கோயில் திறக்கப்பட்டது.

கருங்கல்லில் செதுக்கப்பட்ட குழந்தை ராமர் சிலை

* பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலை 4.25 அடி உயரம், 3 அடி அகலம் கொண்டது. கர்நாடகாவின் பழமையான கருங்கல்லால் செதுக்கப்பட்ட இச்சிலையின் மொத்த எடை 1.5 டன்.

* 5 வயது பாலகனாக தரிசனம் தரும் குழந்தை ராமர் மஞ்சள், சிவப்பு நிற பட்டாடையுடன் கையில் தங்க வில், அம்புடன் காட்சி அளிக்கிறார். மக்ரானா மார்பிள் கல்லால் அமைக்கப்பட்டுள்ள கோயில் கருவறையில் தங்க கவசம் பொருத்தப்பட உள்ளது.

* ராமர் சிலையை சுற்றி உள்ள பிரபையில் தசாவதாரம், சுவஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்கரம், கதாயுதம், சூரியன், சந்திரன் ஆகியவை அமைந்துள்ளன. சிலையின் பீடம் 3 அடி உயரத்தில் உள்ளது. தாமரை மலர் மீது ராமர் நிற்பது போன்று சிலை செதுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு மலர் தூவி மரியாதை

பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ராம ஜென்ம பூமி வளாகத்தில் உள்ள குபேர் திலாவுக்கு சென்ற பிரதமர் மோடி சிவாவின் கோயிலில் வழிபட்டார். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஜடாயு சிலையையும் அவர் திறந்து வைத்தார். அதோடு, ராமர் கோயில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து உரையாடினார்.

* பிறந்தார் ‘ராம் ரஹீம்’

ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுப முகூர்த்த நேரத்தில் உபி மாநிலம் பிரோசாபாத்தில் உள்ள மாவட்ட மருத்துவனையில் பர்சானா என்ற முஸ்லிம் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்து, முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, பாட்டி ஹூஸ்னா பானு பிறந்த குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’ என பெயர் சூட்டி அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தார். அதே சமயம், பிராண பிரதிஷ்டை செய்யப்படும் சுப முகூர்த்த நேரத்தில் குழந்தை பிறப்பையும் சில பெற்றோர் திட்டமிட்டு செய்தனர். கர்நாடகாவில் விஜயபுராவில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 50 கர்ப்பிணி பெண்கள் தங்களின் குழந்தை பிறப்பை சரியாக சுப முகூர்த்த நேரத்தில் இருக்க வேண்டுமென வலியுறுத்தியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு 20 கர்ப்பிணிகள், குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நேரத்தில் ஆபரேஷன் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். இது பல மாநிலங்களிலும் நடந்துள்ளது.

The post அயோத்தி ராமர் கோவில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ayothi Ramar Temple ,Mangala Concert ,Prana Pratishtai Festival ,Ayothi Ramar ,Dinakaran ,
× RELATED குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு...