×

15 நாளில் இரட்டிப்பு லாபம் என கூறி முதியவரிடம் ஆன்லைனில் ரூ.1.26 கோடி மோசடி

 

புதுச்சேரி, ஜன. 22: காரைக்காலை சேர்ந்த முதியவரிடம் ஆன்லைனில் ரூ.1.26 கோடி மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி காரைக்காலை சேர்ந்த சோழன்(65) என்பவரை கடந்த அக்டோபர் மாதம் இணைய மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, ஆன்லைன் மூலமாக வர்த்தகம் செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளனர். தொடர்ந்து, எப்படி பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சியும் அளித்துள்ளனர்.

மேலும், பல்வேறு யூடியூப் லிங்குகளை அனுப்பி பல வீடியோக்களை பார்க்க சொல்லியுள்ளனர். அந்த வீடியோவில் பணம் முதலீடு செய்கின்ற நபர்களுக்கு 15 நாட்களிலேயே அவர்கள் போடுகின்ற பணம் இரட்டிப்பாக வந்தது போல் இருந்துள்ளது. மேலும், வர்த்தகம் செய்வது சம்பந்தமாக சில நபர்கள் அவருக்கு ஆன்லைன் மூலமாக சொல்லிக் கொடுக்கும்போது அவருக்கு நிறைய லாபம் வருவது போல் காட்டி இருக்கின்றனர். இதை நம்பிய சோழன் மோசடி கும்பல் போலியாக உருவாக்கி அனுப்பிய டிரேடிங் வெப்சைட்டில் ரூ.1.26 கோடி பணத்தை செலுத்திய பிறகு கடந்த இரண்டு மாதங்களாக எந்த லாபமும் அவருக்கு வரவில்லை.

அதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கீர்த்தி, தலைமை காவலர் இருசவேல் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக சோழன் பணம் செலுத்திய 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்கைகளை போலீசார் முடக்கி உள்ளனர்.

இது குறித்து சைபர் கிரைம் எஸ்பி பாஸ்கரன் கூறுகையில், இணைய வழியில் வருகின்ற முதலீடு, வேலைவாய்ப்பு, வரன் தேடுதல், ஒரே நாளில் 10% வருமானம், குறைந்த விலையில் பொருட்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பழைய பொருட்களை குறைந்த விலைக்கு தருகிறோம், உங்களுடைய கிரெடிட் கார்டில் கடன் வாங்கும் தொகையை அதிகரிக்கிறோம், செல்போன் டவர் அமைக்க இடம் வேண்டும், இலவசமாக ஆன்லைனில் டிரேடிங் செய்ய சொல்லிக் கொடுக்கிறோம் போன்ற எதையுமே பொதுமக்கள் நம்ப வேண்டாம், என்றார்.

The post 15 நாளில் இரட்டிப்பு லாபம் என கூறி முதியவரிடம் ஆன்லைனில் ரூ.1.26 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Karaikal ,Cholan ,Karaikal, Puducherry ,Dinakaran ,
× RELATED லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்