×

பனிப்பொழிவு மற்றும் வெயில் காரணமாக பசுமையை இழந்து வரும் முதுமலை புலிகள் காப்பகம்

 

ஊட்டி, ஜன.22: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி, யானை, கழுதை புலி, பல்வேறு வகை மான்கள், பறவைகள் உள்ளன. இது தவிர தேக்கு, ஈட்டி உள்ளிட்ட விலையுயர்ந்த மரங்கள், அரிய வகை தாவரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் பெய்யும் மழை காரணமாக வனங்கள் பசுமையாக காட்சியளிக்கும்.

மாயாறு மற்றும் வனத்தில் உள்ள நீர் நிலைகளில் நீர் இருப்பு இருக்கும். இதன் மூலம் வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். அதன்பின் உறை பனி மற்றும் கோடை காலத்தின் போது வனத்தில் பசுமை இழந்து காணப்படும். இதனால் வனத்தீ ஏற்பட கூடிய சூழலும் உருவாகும். இந்த சூழலில் கடந்த ஆண்டு அவ்வப்போது பெய்த மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் பசுமையாக காட்சியளித்தது. இதனால் இவ்வழியாக பயணிக்கும் போது வனவிலங்குகளை காண முடிந்தது.

இந்த சூழலில் தற்போது மழை காலம் முடிந்து உறை பனி பொழிவு நிலவி வரும் நிலையில் செடிகொடிகள் காய்ந்து கருகி வருகின்றன. இதுதவிர மரங்களில் இலைகள் காய்ந்து உதிர துவங்கியுள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனங்கள் பசுமையை இழந்து வருகின்றன. வரும் மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் வனங்களில் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் வனத்தீ ஏற்பட கூடிய அபாயம் நீடிப்பதால் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். முதுமலை புலிகள் காப்பகம் வழியாக பயணிக்க கூடியவர்கள் புகைப்பிடித்து விட்டு தூக்கி எறிவது, சாலையோரங்களில் சமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறை கேட்டு கொண்டுள்ளது. வனத்திற்குள் அத்துமீறுவோர் மற்றும் வனத்தீ ஏற்படுத்துவோர் மீது வன சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

The post பனிப்பொழிவு மற்றும் வெயில் காரணமாக பசுமையை இழந்து வரும் முதுமலை புலிகள் காப்பகம் appeared first on Dinakaran.

Tags : Mudumalai Tiger Reserve ,Nilgiris ,Muthumalai Tiger Reserve ,Dinakaran ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...