×

மாநாட்டின் வெற்றியை திசை திருப்ப நிர்மலா சீதாராமன் பொய் பிரசாரம் தமிழ்நாட்டில் எந்த கோயிலிலும் பூஜை அன்னதானத்திற்கு தடை விதிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு, அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கோயில்களுக்கான பணிகளை செவ்வனே செய்து வருகிறது. இன்றைய தினம் கூட, 40 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நாளை (இன்று) 20 கோயில்களுக்கு குடமுழுக்கு நடக்கிறது. இதுவரை 1,270 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் இளைஞர் அணியின் மாநில உரிமை மீட்பு மாநாடு வெற்றிகரமாக நடக்கிறது. இதனை திசை திருப்பும் நோக்கில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் பிரசாரம் செய்துள்ளார். இறையன்பர்களுக்கு எதிராக செயல்படும் அவருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழிபாட்டிற்கு தடை விதித்திருப்பதாகவும், அன்னதான திட்டத்தை முடக்கியிருப்பதாகவும் அவர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

திமுக இளைஞரணியின் மாநில உரிமை மீட்பு மாநாடு, இந்திய அளவில் பேசப்படும் மாநாடு. அதனால் என்ன வேண்டுமானாலும் பேசி இந்த மாநாட்டின் மைய கருத்தை தள்ளிப்போட முடியாது. ஒன்றிய அமைச்சர்கள் சொல்வதெல்லாம் உண்மையா? என விசாரித்து உண்மையை பதிவிட வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் எங்கும் தரிசன அனுமதி மறுக்கப்படவில்லை. உயரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு கடமை உணர்வு இருக்கவேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு ஆன்மிக விழாவாக இல்லாமல், அரசியல் விழாவாக இருப்பதால்தான் எதிர்ப்புகள் கிளம்பியது. தமிழ்நாட்டில் சுத்தமாக இருக்கும் கோயில்களை, சுத்தம் செய்கிறது பாஜ. எல்லா கோயில்களிலும் திங்கள்தோறும் உழவார பணிகள் திட்டம் உள்ளதால், அனைத்து கோயில்களும் சுத்தமாக காணப்படுகிறது.

The post மாநாட்டின் வெற்றியை திசை திருப்ப நிர்மலா சீதாராமன் பொய் பிரசாரம் தமிழ்நாட்டில் எந்த கோயிலிலும் பூஜை அன்னதானத்திற்கு தடை விதிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Tamilnadu ,Minister ,Shekharbabu ,DMK Youth State Conference ,Salem Pethanayakkanpalayam ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Minister Shekharbabu ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...