×

அயோத்தியில் விழாக் கோலம் ராமர் கோயில் இன்று திறப்பு: உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடு

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலில் மூலவர் குழந்தை ராமரின் சிலை இன்று மதியம் 12.20 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறது.பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ராமர் கோயிலின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவிற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய பூஜை மற்றும் சடங்குகள் கடந்த சில நாள்களாகவே அயோத்தி கோயிலில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. நாட்டின் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட நீரை கொண்டு கோயில் கருவறை முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. கோயில் வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அலங்கார விளக்கொளியில் கோயில் ஜொலிக்கிறது. முக்கிய நிகழ்வான மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை இன்று மதியம் 12.20 மணிக்கு தொடங்குகிறது.

இது பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை தலைமையெடுத்து நடத்தும் பிரதமர் மோடி, கடந்த 12ம் தேதிமுதல் கடுமையான விரதம் அனுசரிப்போடு, பிரசித்திபெற்ற கோயில்களில் வழிபாடு செய்தார். மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இதுவரை 20 ஆயிரம் கி.மீ.க்கு மேல் பயணம் செய்துள்ளார். இன்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழாவில் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி ஆளுநர் ஆனந்திபென் படேல், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கின்றனர்.

இவ்விழாவில் பல்வேறு மடங்களை சேர்ந்த 125 துறவிகள், 8,000க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர். 50 நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த இந்தியர்கள் 55 பேரும் பங்கேற்க உள்ளனர். ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, அயோத்தியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்திக்கு செல்லும் சாலைகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. அந்நிய நபர்கள் அயோத்தியில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ராமர் கோயில் வளாகம் உயர் பாதுகாப்பு கொண்ட சிவப்பு வளைய பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி மாநில போலீசாருடன் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி), தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலுக்கு செல்வதற்கான பிரதான பாதைகள் மஞ்சள் வளைய பாதுகாப்பு பகுதியாகவும், அயோத்தியின் இதர பகுதிகள் பச்சை வளைய பாதுகாப்பு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கோயில் வளாகத்தின் வான் பகுதியில் ட்ரோன்கள், ஹெலிகாப்டர், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட 10,000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு நடக்கிறது.
திறப்பு விழாவையொட்டி ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் இதுபோல விடுமுறை அறிவித்துள்ளன. வங்கிகள், பங்கு சந்தைக்கும் இன்று விடுமுறை. இந்த விழா டிவிக்கள், யூ டியூப்பில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

* கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் ஏ.ஜ டிரோன்கள்
செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட டிரோன்கள் உதவியோடு போலீசார் அயோத்தி நகரம் முழுவதையும் கண்காணித்து வருகின்றனர்.அதுபோல முக்கிய பிரமுகர்கள் வரும் பாதையில் கண்ணி வெடிகள் ஏதேனும் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஏ.ஐ தொழில் நுட்பத்தில் இயங்கும் அதி நவீன கருவிகள் பொருத்தப்பட்ட டிரோன்கள் மூலம் சோதனை செய்து வருகின்றனர்.

* விஐபிக்களுக்கு மகா பிரசாதம்
ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ள முக்கிய பிரமுகர்களுக்காக மகா பிரசாதம் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20,000 பொட்டலம் மகாபிரசாதம் தயாராக உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடலை மாவு, சர்க்கரை, 5 வகை உலர் பழங்கள், நெய் பயன்படுத்தி லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மகா பிரசாத பொட்டலத்தில் 2 லட்டுகள், சரயூ நதி புனித நீர், அட்சதை, பாக்குமட்டை தட்டு, கையில் கட்டுவதற்காக சாமி கயிறு உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.

* 22 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு
ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அயோத்தியில் குவிந்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வருபவர்களின் வசதிக்காக அயோத்தியில் மொத்தம் 51 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 22,825 வாகனங்களை நிறுத்தலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கிய பிரமுகர்களின் கார்களை நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

* நாதஸ்வரம், தவில் வாத்தியம்
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கு முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இசை கலைஞர்கள் 50 வாத்தியங்களை முழங்க உள்ளனர். காலை 10 மணிக்கு துவங்க உள்ள இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி 2 மணி நேரம் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டின் நாதஸ்வரம், தவில், மிருதங்கம் போன்ற இசை கருவிகளை இசைக் கலைஞர்கள் இசைக்க உள்ளனர்.

* பொதுமக்களுக்கு அனுமதியில்லை
இன்று நடைபெறும் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை. நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* 10 லட்சம் அகல் விளக்குகள்
அயோத்தி நகரம் எங்கும் இன்று மாலை 10 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள 100 கோயில்களில் பக்தர்கள் மூலம் அகல் விளக்குகள் ஏற்றப்படும் என்று ராமர் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post அயோத்தியில் விழாக் கோலம் ராமர் கோயில் இன்று திறப்பு: உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Festival Kolam ,Ram Temple ,Ayodhya ,Lord Rama ,Modi ,Festival ,Golam Ram Temple ,
× RELATED திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம்