×

இன்று திமுக இளைஞரணி பிரமாண்ட மாநாடு; லட்சக்கணக்கானோர் சேலத்தில் குவிந்தனர்.! முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் முகாம்

சேலம்: சேலத்தில் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு பிரமாண்டமாக நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியினர் என்று லட்சக்கணக்கானோர் நேற்று மாலையே மாநாட்டு திடலில் திரண்டனர். இதையொட்டி 1500 டிரோன்களின் வர்ணஜாலம், பைக் பேரணியுடன் மாநாடு களைகட்டத் தொடங்கியுள்ளது. திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு கடந்த 2007ல் திருநெல்வேலியில் கோலாகலமாக நடந்தது. மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தினார். அதன்பின் இளைஞரணியின் வரலாற்று சிறப்பு மிக்க 2வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (21ம் தேதி) நடக்கிறது. இதற்காக பெத்தநாயக்கன்பாளையத்தில் மிக பிரமாண்டமாக மாநாட்டு திடலை திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி மற்றும் இளைஞர் அணியினர் செய்தனர்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 9 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட மைதானத்தில், மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த சில நாட்களாக செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாநாட்டு பந்தலுக்குள் 1.5 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. ஆங்காங்கே எல்இடி திரைகள் வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றனர். மாநாட்டு நுழைவாயில்கள் ஒவ்வொன்றும் வண்ண மயமாக கண்களை ஈர்த்து நிற்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர், திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவங்கள் பொறிக்கப்பட்டு கோட்டை போல் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. பரந்து விரிந்த பந்தல் அலங்காரமும், இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகமும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திமுக வரலாற்றை விளக்கும் வண்ண ஓவியங்கள், மாநில உரிமைகளை மீட்பது தொடர்பான எழுச்சி முழக்க வாக்கியங்கள் என்று ஒவ்வொன்றும் மக்கள் மனதில் நிறைந்து நிற்கும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலில், திமுக இளைஞரணி மாநாடு இன்று காலை 10 மணிக்கு துவங்கவுள்ள நிலையில், நேற்று மாலையே முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் முன்னோடிகள் சேலத்திற்கு வந்தனர்.

மாநாட்டு திடலுக்கு நேற்று மாலை 5.45 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் வரவேற்பளித்தனர். தொடர்ந்து, இளைஞரணியின் சுடர் ஓட்டத்தை நடத்தி வந்த நிர்வாகிகள், சுடரை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். பின்னர் இளைஞரணியின் பைக் பேரணி, 1500 டிரோன்களின் வண்ணமயமான காட்சிகள் நடந்தது. திராவிட இயக்க வரலாற்றை டிரோன் காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசித்து பார்த்தார். மாநாட்டுக்காக மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள், தொண்டர்கள் சேலத்தில் குவிந்துள்ளனர். மாநாட்டு நிகழ்ச்சிகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து மாநாட்டு நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து 22 தலைப்புகளில் கட்சியின் முன்னோடிகள், அமைச்சர்கள் பேசவுள்ளனர். மாநில உரிமைகளை மீட்கும் வகையில் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. மாலை 4 மணிக்கு பின் கனிமொழி எம்பி, இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ெபாருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பேசுகின்றனர். பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டின் நிறைவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவு பேருரை ஆற்றுகிறார். பிரமாண்டமாக நடக்கும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் சேலத்தில் குவிந்துள்ளனர். இதனால் மாநாடு நடைபெறும் இடம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தெற்கில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்தும் மாநாடாக திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு அமையும் என்று திமுகவின் மூத்தநிர்வாகிகள் தெரிவித்தனர்.

திராவிட இயக்க வரலாற்று டிரோன் ஷோ

இந்தியாவில் எந்த அரசியல் மாநாட்டிலும் இதுவரையில் நடக்காத முக்கிய நிகழ்வாக வானில் 1,500 ட்ரோன்களின் மூலம் பிரமிக்கத்தக்க வகையில் ஷோ நடத்தப்பட்டது. முதலில் தரையில், 1,500 ட்ரோன்களும் வண்ண விளக்குகளை எரியவிட்டபடி, பிரமிப்பை காட்டியது. தொடர்ந்து, ட்ரோன்கள் வானில் எழுந்து சென்று, வர்ணஜாலத்தை நிகழ்த்தியது. அப்போது, பின்னணியில் திராவிட இயக்க வரலாற்றை பறைசாற்றும் ஒலியுடன், 1,500 ட்ரோன்களின் காட்சிகள் நடத்தப்பட்டது.

அதில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, உதயசூரியன், தமிழ்நாடு, கலைஞர் கருணாநிதி, இளைஞரணி சின்னம், முதல்வர் மு.க.ஸ்டாலின், எய்ம்ஸ் செங்கலுடன் உதயநிதி ஸ்டாலின், 2வது மாநில மாநாட்டுக்கு வருக, வருக, தமிழ் வெல்லும் என கலைஞர் கையெழுத்துடன் பேனா ஆகியவை ஒளி விளக்காக வானில் ட்ரோன்கள் வர்ணஜாலத்தை காட்டியது. இந்த நிகழ்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வியந்து பார்த்தனர். மாநாட்டு திடலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் உற்சாகமாக ட்ரோன் ஷோவை பார்த்து, மகிழ்ந்தனர்.

முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து தனி விமானத்தில், சேலம் காமலாபுரம் விமான நிலையம் சென்றார். அங்கிருந்து மாநாட்டு திடலுக்கு காரில் சென்றார். வழிநெடுகிலும் கட்சியினர் திரண்டு வரவேற்றனர். திமுக கொடி, வண்ண தோரணங்கள் கட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மாநாட்டு திடலுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தியாவில் முதல்முறையாக கம்போடியா நாட்டின் பாரம்பரிய ரியோ நடனம் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கேரள செண்டை மேளம், கதக்களி, சிராட்டம், ரிகாப்வேசம், தமிழக பாரம்பரிய தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

The post இன்று திமுக இளைஞரணி பிரமாண்ட மாநாடு; லட்சக்கணக்கானோர் சேலத்தில் குவிந்தனர்.! முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் முகாம் appeared first on Dinakaran.

Tags : Dima ,Salem ,Principal ,M.U. K. Stalin ,2nd State Conference ,Dimuka Youth ,M.U. K. ,Stalin ,Dimuka ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...