×

இலஞ்சி முருகன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

* முருகனுக்குரிய பிரதான ஆலயங்களில் இலஞ்சியும் ஒன்று. அருணகிரிநாதர், ‘இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமாளே’ என்று இந்த முருகனை பாடியுள்ளார். வள்ளிதெய்வானை சமேதராக முருகப் பெருமான் தனிச் சந்நதியில் அருள்கிறார்.

* திருச்செந்தூர் புராணத்தில் இலஞ்சி முருகனைப்பற்றி, ‘தேவர் மூவராவது நாமேயென்று’ என்று தொடங்கும் பாடல், வரதராஜகுமாரனென முருகனைப் புகழ்கிறது. வேண்டுவோருக்கு வரம் கொடுக்கும் வள்ளல் இந்த ராஜன் என்கிறது.

* எது பிரம்மம் என்று காசிப முனிவரும், கபிலரும், துர்வாசரும் வாதம் புரிந்தனர். துர்வாசர் முருகனை நோக்கித் துதிக்க, மும்மூர்த்திகளும் நானே என்று முருகன் காட்சி அளித்தார். அவர்களின் ஐயங்களையும் போக்கினார். ரிஷிகளின் வேண்டுதலுக்கு இணங்கி முருகப் பெருமான் இங்கு எழுந்தருளினார்.

* இலஞ்சி என்ற சொல் ஏரி, குளம், மடு, பொய்கை, மகிழ மரம் என பல பொருள்படும். ஆனாலும், இன்றைய பேச்சு வழக்கில், ஊரைக் குறிக்கும் ஆகு பெயராகவே வழங்கப்படுகிறது. ஐப்பசி கந்த சஷ்டி திருநாளில் முதல் நாள் முதல் ஐந்து நாட்களுக்கு முறையே அயன், அரி, அரன், மகேஸ்வரன், சதாசிவனாகவும் கோலம் பூண்டருள்வார் இந்த முருகன். ஆறாம் நாள் வெள்ளி மயில் ஏறி சூரசம்ஹாரம் செய்வர்.

* அகத்தியர் இருவாலுக நாயகர் எனும் திருப்பெயரில் ஸ்தாபிக்கப்பட்ட லிங்க மூர்த்தத்தில் ஈசன் அருள்கிறார். குழல்வாய் மொழியம்மை எனும் திருப்பெயரோடு அம்பாள் அருள்கிறாள். குற்றாலத்திற்கும் முற்பட்ட தலம் இது.

* இத்தல புராணம் குற்றாலத்தோடு தொடர்புடையது. விஷ்ணு கோயிலாக விளங்கிய குற்றாலத்தை குறுக்கி சிவமாக்கினார் அகத்தியர். அதற்கு முன்பு இலஞ்சி முருகனை வணங்கி, அருகேயே வெண் மணலால் லிங்கத்தை செய்தார். எனவே, இத்தல ஈசனுக்கு இருவாலுக நாயகர் என்று பெயர். இரு என்றால் பெருமை பொருந்திய என்றும், வாலுகம் எனில் வெண்மணல் என்றும் பொருள்படும்.

* ஈசன் கிழக்கு முகமாகவும், இறைவி இடது பக்கம் தெற்கு முகமாகயும் எழுந்தருளியுள்ளனர்.

* இந்த லிங்கத்திற்கு வெள்ளிக் குவளை பொருத்தப்பட்டுள்ளது. எண்ணெய் அபிஷேகம் இதற்கு கிடையாது.

* இறைவியின் பெயர் இருவாலுக ஈசர்க் கினியாள் என்பதாகும்.

* குற்றாலத்தில் நடக்கும் சித்திரை, ஐப்பசி விஷு திருவிழாக்களுக்கு குமரப் பெருமான் வள்ளி தெய்வானையோடு கொடியேற்றத்தன்றே சென்று, பத்து நாள் பவனி வந்து, தீர்த்தவாரி முடித்து, பின் திரும்புவார். திரும்பும்போது குற்றாலநாதருக்கு பண முடிப்போடு பிரியாவிடை கொடுத்தனுப்புவார்.

* தொன்மைப் பெருமை வாய்ந்த இந்தக் கோயில் எப்பொழுது கட்டப்பட்டது என்பதை அறிய இயலவில்லை. ஆனால், திருப்பணிகள் நிகழ்ந்ததற்கான கல்வெட்டுகள் மூலம், மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னன் 1331ம் ஆண்டு இக்கோயிலை விஸ்தரித்து கட்டினான் என்கிற செய்தி கிடைக்கிறது.

* இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் இந்திரவிழா எடுத்த காதையில் ‘தொழுத அளவில் பழுதில்லாத தோற்றத்தை அளிக்கும் பொய்கை’ என்று இலஞ்சியை குறிப்பிடுகிறார்.

* மகுடாகம விதிப்படி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலையொட்டிய வெளி மண்டபம் சரவண மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

* வருடத்திற்கு குறைந்தது நானூறு திருமணங்களாவது இங்கு நடக்கும். எனவே, இது கல்யாணத் திருத்தலமாகும்.

* இரண்டு சந்நதிகள் என்பதால் இரண்டு கொடிமரங்கள் உடைய ஆலயம் இது.

* முன் தலைவாசலில் சுப்ரமணியர் விஸ்வரூப தரிசனம், முன் மண்டப முகப்பில் ரிஷபக் காட்சி, நால்வர், அகத்தியர் கதைகள் என்று தரிசித்து மகிழலாம்.

* உள்பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, அறுபத்து மூவர், சப்த மாதாக்கள், சுர தேவர் சந்நதிகள் உள்ளன. நடராஜப் பெருமான் அம்மன் சந்நதிக்கு அருகே தனிச் சந்நதி கொண்டுள்ளார்.

* ஸ்ரீஷண்முகர் விலாசத்தில் ஸ்ரீசக்கரம், சிவ சக்கரம், சுப்ரமணிய சக்கரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

* ஸ்ரீநெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது இலஞ்சி.

தொகுப்பு: ஜெயசெல்வி

The post இலஞ்சி முருகன் appeared first on Dinakaran.

Tags : Kunkum ,Ilanchi ,Muruga ,Arunagirinathar ,Murugana ,Lord ,Vallitheivan ,Samedara ,Tiruchendur ,
× RELATED கவுன்சலிங் ரூம்