தை கிருத்திகை
20.1.2024 – சனி
தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தைப் போல், தை கார்த்திகை விரதமும் அதிகமான முருக பக்தர்களால் கடைபிடிக்கப்படுவதாகும். தொடர்ந்து 6 மாதங்கள், ஒவ்வொரு மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகபெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் முருகனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அவர்களின் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டி விரதம் இருப்பதை போல் கிருத்திகையில் விரதம் இருக்கலாம். பதவிகளில் உயர்வான நிலையை பெற வேண்டும் என நினைப்பவர்கள், கிரக தோஷங்களால் திருமண தடை ஏற்படக் கூடியவர்கள் தை கிருத்திகை அன்று விரதம் இருக்கலாம்.
கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை இருக்கலாம். கிருத்திகை விரதம் பரணி நட்சத்திரத்திலேயே துவங்கப்பட வேண்டும். முதல் நாள் பகல் பொழுதுடன் உணவு அருந்துவதை நிறுத்திவிட வேண்டும். இரவு பால், பழம், கஞ்சி போன்றவற்றை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். கிருத்திகையன்று அனைத்து முருகன் கோயில்களிலும் சண்முக அர்ச்சனை நடத்தப்படும். அதாவது 6 புரோகிதர்கள், 6 வகையான மந்திரங்களை சொல்லி, 6 வகையான நைவேத்தியங்கள் படைத்து, 6 வகையான மலர்களால், 6 பூஜைகள் செய்வது தான் சண்முக அர்ச்சனை. கோயிலுக்கு செல்ல முடிந்தவர்கள் கோயிலில் சண்முக அர்ச்சனை செய்யலாம் அல்லது கலந்து கொள்ளலாம்.
முடியாதவர்கள் வீட்டிலேயே 6 வகையான சாதங்களை நைவேத்தியமாக படைத்து, 6 வகையான மலர்களை கொண்டு, 6 வகையான மந்திரங்கள் சொல்லி வழிபட வேண்டும். குழந்தைப் பேறு வேண்டி கிருத்திகை விரதம் இருப்பவர்கள் பூஜைகள் முடித்த பிறகு சர்க்கரைப் பொங்கல் அல்லது ஏதாவது ஒரு இனிப்பை அக்கம் பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு சிறு குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அப்படி நாம் கொடுக்கும் இனிப்பை அந்த குழந்தை விருப்பத்துடன் வாங்கி சாப்பிட்டால் முருகன் அந்த குழந்தையின் வடிவில் வந்து நமது பூஜையை ஏற்றுக் கொண்டதாக ஐதீகம்.
பீஷ்ம ஏகாதசி
21.1.2024 – ஞாயிறு
தை மாதம் வளர்பிறை அஷ்டமி பீஷ்மாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்து வருகின்ற ஏகாதசியும் அவர் பெயராலேயே பீஷ்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு சில நூல்களில் புத்ரதா ஏகாதசி என்றும் பெயருண்டு. இந்த ஏகாதசி விரதத்தை முழுமையாகக் கடைபிடிப்பவர்களுக்கு எல்லாப் பாவங்களும் விலகி, புண்ணியங்கள் சேரும். சிறந்த கல்வி விருத்தியும் புகழும் ஏற்படும். இந்த ஏகாதசி சொர்க்கத்தைக் கொடுக்கக்கூடிய ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகவே உத்தராயண காலத்தில் அஷ்டமி, ஏகாதசி போன்ற தினங்களில் விரதம் இருந்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகும்.
பீஷ்ம ஏகாதசி அன்று பீஷ்மர் அருளிச்செய்த விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்வதன் மூலமாக மிகப்பெரிய புண்ணிய பலன்கள் கிடைக்கும். இந்த ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். இதற்கு ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் பத்ராவதி என்ற நகரத்தை சுகேது என்ற மன்னன் ஆண்டு வந்தான். ராணியின் பெயர் சம்பகை. அவர்களுக்கு வம்சவிருத்தி இல்லாமல் இருந்தது. இதனால் மிகவும் துன்பப்பட்ட அரசி, தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தாள். அந்த நேரத்தில் அவளைத் தடுத்து நிறுத்தி, ‘‘இதனால் மட்டும் உனக்கு குழந்தைப் பேறு கிடைக்குமா? இது என்ன பயித்தியக்காரத்தனம்? நீ இறைவனை வணங்கி, இதற்கான பிராயச்சித்தத்தைச் செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்” என்றனர்.
இது இப்படியிருக்க, ஒருநாள் அரசன், மனத்துன்பத்திற்கு ஆறுதல் தேடி, காட்டுக்குச் சென்றான். அங்கே அழகான தாமரை குளம் இருந்தது. அந்தக் குளக்கரையில் சில முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களை வணங்கி யார் என்று விசாரித்தபோது அவர்கள் சொன்னார்கள். ‘‘நாங்கள் விஸ்வதேவர்கள். இன்று புத்ரதா ஏகாதசி நாள். இங்கு அந்த ஏகாதசி விரதம் இருப்பதற்காகவும், அடுத்து சில நாட்களில் மாசிமாதம் பிறப்பதால் புண்ணிய தீர்த்தத்தில் நீராடவும் வந்தோம்” என்று சொல்ல, அரசன் தனக்குப் புத்திரப் பேறு கிடைக்க ஏதேனும் வழி சொல்லச் சொல்லி முனிவர்களை வேண்டினான்.
அவர்களும், ‘‘எங்களோடு சேர்ந்து நீயும் இந்த ஏகாதசி விரதம் இருந்தால், உனக்கு புத்திரப்பேறு உண்டாகும்’’ என்று ஆசீர்வதித்தனர். அரசன் புண்ணிய குளத்தில் தீர்த்தமாடி நாராயணனை நாள் எல்லாம் பூஜித்து, நாமசங்கீர்த்தனம் பாடி, முனிவர்களோடு ஏகாதசி விரதத்தை முடித்தான். அடுத்த சில நாட்களில் அவனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த ஏகாதசி விரதத்தை முறையாக இருப்பவர்கள் அக்னிஷ்டோமம் போன்ற வேள்விகளின் பலனை அடைவார்கள் என்று ஏகாதசி மகாத்மியம் கூறுகிறது.
கண்ணப்ப நாயனார் குருபூஜை
22.1.2024 – திங்கள்
சைவ சமயத்தில் வண் தொண்டர்கள் என்று சில தொண்டர்களைக் குறிப்பிடுவார்கள். ஒருவர் கல்லால் அடித்தார். ஒருவர் வில்லால் அடித்தார். ஒருவர் காலால் உதைத்தார் என்று சிறப்பாகச் சொல்வதுண்டு. கல்லால் அடித்தவர் சாக்கியநாயனார். வில்லால் அடித்தவன் விஜயன். காலால் உதைத் தவர் கண்ணப்பன். ஆம் இவருடைய வைராக்கியத்தையும் தியாகத்தையும் போல் பார்த்திருக்கவே முடியாது. ‘‘கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்’’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், ‘‘நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்’’ என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர்.
திண்ணன் என்பது இவர் பெயர். வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, பக்குவப் பட்ட பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகம விதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவகோசரியார் மனம் வருந்தினார். இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவ கோசரியாருக்கு உணர்த்த ஒரு நாடகம் நடத்தினார் ஈசன்.
திண்ணனார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். கண்ணில் குருதி வடிவதைக் கண்டு திண்ணனார் அழுதார். இறைவனுக்கே இந்த நிலையா என்று தவித்தார். பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். ஆயினும் பலன் இல்லை. இதற்கு ஏதேனும் ஒரு வழி செய்தே தீர வேண்டும் என்று துடித்த அந்த துடிப்பில், தன் கண்ணை பறித்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்றது. ஆனால், இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, “இது என்ன சோதனை?” என்று நினைத்த திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டார்.
தன்னுடைய காலால், இறைவன் கண் உள்ள இடத்தை அடையாளப் படுத்திக் கொண்டு, தன் கையிலிருந்த அம்பால், தன் கண்ணை பறித்து, இறைவனுக்கு வைக்கத் துணிந்தார். ‘‘கண் கொடுத்த அப்பா, கண்ணப்பா,’’ என்று இறைவன் அழைத்து, “நில் கண்ணப்ப” என்று சொன்னார். அவருடைய வைராக்கியத்தையும் தியாகத்தையும் கண்டு சிவபெருமான் காட்சி தந்தார்.
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை ‘‘வா’’ என்ற வான் கருணை
சுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பி
கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாக மணிவாசகர் திரு கோத்தும் பியில் குறிப்பிடுகின்றார். கண்ணப்ப நாயனாரின் குருபூஜை தை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. அந்த தினம் இன்று.
மகா பிரதோஷம்
23.1.2024 – செவ்வாய்
பிரதோஷ நாள் சிவபெருமானையும் நந்தி பகவானையும் வழிபட விசேஷமான நாள். ஒவ்வொரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை நந்தி பகவானுக்கும் சிவனுக்கும் அபிஷேக ஆராதனை நடக்கும். மாலை நாலு முப்பது மணி முதல் 6 மணிக்குள் நடக்கக்கூடிய இந்த அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்வதன் மூலமாக எல்லா விதமான கிரக தோஷங்களும் நீங்கி விடும்.
அரிவாட்டாய நாயனார் குருபூஜை
23.1.2024 – செவ்வாய்
சைவசமய நாயன்மார்கள் 63 பேர். அதில் ஒருவர் அரிவாட்டாய நாயனார். இவர் கணமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். கணமங்கலம் தற்போது தண்டலைச்சேரி என்றழைக்கப்படுகிறது. இது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. இவருடைய இயற்பெயர் தாயனார் என்பதாகும். இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத சிவ பக்தியில் திளைத்தவர்கள். அரி வாட்டாய நாயனார் தினசரி செந்நெல் அரிசியும், செங் கீரையும், மாவடுவும் வைத்து கணமங்கலத்தில் கோவில் கொண்டிருந்த நீள்நெறி நாதருக்கு அமுது செய்விப்பார்.
செல்வந்தரான அவருடைய பெருமையை உலகுக்குக் காட்ட எண்ணிய சிவபெருமான், அவருடைய செல்வத்தை நீக்கி வறுமையை உண்டாக்கினார். கூலிக்கு வேலை செய்தாலும், நெல் வயலில் கிடைத்த நெல்லைக் கொண்டு இறைவனுக்கு திருவமுது ஆக்கினார். ஒரு நாள் அவர் தன் வயலில் விளைந்த செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு மண் கலயத்தில் சுமந்து சிவபெருமானுக்கு சமர்ப்பிக்கச் செல்லுகின்ற போது கீழே விழுந்து கலயம் உடைந்து, எல்லா உணவுகளும் சிந்தியதைக் கண்டு மனம் நொந்தார். “இனி சிவ பெருமானுக்கு எப்படி அமுது செய்விப்பது? இன்றைய பூஜை வீணாயிற்றே? இனி உயிரோடு இருந்து என்ன பலன்?” என்று தம்மை மாய்த்துக் கொள்ள முயன்றார்.
அப்பொழுது சிவபெருமான் அவர் முன் தோன்றி தடுத்தாட்கொண்டு, அவருக்கு நற்பதம் அளித்தார். தன் கழுத்தை அரிவாள் பூட்டி அறுக்க முயன்ற காரணத்தால், அரிவாட்டாய நாயனார் என்ற திருநாமத்தைப் பெற்றார். தவறாது கடைபிடித்து வந்த சிவபாட்டிற்குரிய பொருட்களை தவற விட்டதால், தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்த அரிவாட்டாய நாயனாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்’ என்று வியக்கிறார். அவருடைய குருபூஜை நாள் தை மாதம் திருவாதிரை. அந்த நாள் இன்று.
பௌர்ணமி-தைப்பூசம்
25.1.2024 – வியாழன்
இன்று தை மாதம் பூச நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாள். கிரிவலம் வருவதற்கு மட்டுமல்ல, ஏதாவது ஒரு சிவன் கோயிலிலாவது பிராகார வலம் வருவது கிரிவலத்துக்குச் சமம். அது தவிர, பூச நட்சத்திரமும் குரு வாரமும் இணைந்து வருவதால் எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலார். “அருட்பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி” என்று பாடிய வள்ளலார். இந்தியாவில் ஆயிரக்கணக்கான வள்ளலார் மன்றங்கள் இயங்குகின்றன. சிறு வள்ளலார் கோயில்கள் இயங்குகின்றன. அத்தனைக் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு அன்னதானம் நடத்தப்படும்.
வள்ளலாரின் மிகப்பெரிய தத்துவம்
1.ஜீவகாண்ய ஒழுக்கம்.
2.தனி மனித ஒழுக்கம்
3.உயிர்கள் இடத்தில் அன்பு.
4.செய்யவேண்டிய தொண்டில் மிகச்சிறந்த தொண்டு மனித குலத்தின் பசியைப் போக்குதல்.
புத்தரைப் போலவே ஒருவனுக்கு பசி இருக்கும் வரை அவனிடத்திலே எந்த ஆன்மிக எண்ணமும் எழுவதற்கு வழி இல்லை என்று கண்டவர் வள்ளலார். எல்லாப்பிணிகளுக்கும் மூல காரணம் பசிப்பிணி தான் என்பதை எடுத்துச் சொன்ன வள்ளலார் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஜனவரி மாதம் தைப்பூசத் திருநாளில் தான் சத்திய ஞான சபையைத் தொடங்கினார். ஏழு திரைகளை விளக்கி ஜோதி தரிசனத்தை காட்டும் உன்னத விழாவான தைப்பூச திருவிழா வடலூரில் பெருவிழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.
தொகுப்பு: விஷ்ணுபிரியா
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.