×

ஒட்டன்சத்திரம் பகுதியில் முகாம்: ஆத்தி… இது… ஐரோப்பா வாத்துக் கூட்டம்

* 2 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பறக்குமாம்
* பறவை கணக்கெடுப்பாளர்கள் தகவல்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் குளம், கண்மாய்களில் ஐரோப்பா பகுதியில் வந்துள்ள ஊசிவால் வாத்துக் கூட்டம் முகாமிட்டுள்ளது. இப்பறவைகள் ஒருமுறை பறந்தால் 2 ஆயிரம் கி.மீ தூரத்தை கடக்கும் என பறவை கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் திருநாளையொட்டி, ebird இணையதளம், Bird Count of India ஆகியவை சார்பில் வாழை சுற்றுச்சூழல் இயக்கம் கடந்த 4 ஆண்டுகளாக பறவைகள் கணக்கெடுப்பை நடந்து வருகிறது. தை மாதத்தில் நம்நாட்டுப் பறவைகள், வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வலசை வரும். தை மாதம் பறவைகளுக்கு வசந்த காலம்.

இந்தாண்டு பொங்கலையொட்டி பறவைகள் கணக்கெடுப்பு பணி ஜனவரி 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் 4வது ஆண்டாக வாழை சுற்றுச்சூழல் இயக்கம் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தியது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வாழைக்குமார் கூறுகையில், ‘இந்தாண்டு ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் உள்ள கண்மாய்கள், கே.சி.பட்டி, ஆடலூர், கானல்காடு, கன்னிவாடி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி கிராமங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. ஜன.14 முதல் 17 வரை 4 நாட்கள் நடைபெற்ற பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பில் நான்கு குளங்கள், இரண்டு அணைகள், குறுங்காடுகள் மற்றும் அடர்ந்த மலைகள், புல்வெளிகளில் 155 வகையான பறவைகள் இனங்கண்டு பதிவு செய்யப்பட்டது.

அவற்றுள் அயல்நாடுகளில் இருந்து வலசை வரும் 18 பறவைகள் மற்றும் வடஇந்தியாவில் இருந்து தென்இந்தியாவிற்கு உள்நாட்டு வலசை வரும் 10 பறவைகளும் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் இருந்து 218 ஊசிவால் வாத்துகள் வலசை வந்து ஒட்டன்சத்திரம் பகுதியில் முகாமிட்டுள்ளன. இவைகள் பறக்கும் தன்மை கொண்டது. ஒரு முறை பறந்தால் 2 ஆயிரம் கிலோ மீட்டர் வரை கடக்கும். சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

The post ஒட்டன்சத்திரம் பகுதியில் முகாம்: ஆத்தி… இது… ஐரோப்பா வாத்துக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Otansatram ,Europe ,Kannmaye ,Ottansatram ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் இருந்து வரத்து...