×

கலங்கரை விளக்கம் – போட் கிளப் வரை 2வது சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கியது: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

சென்னை, ஜன.19: கலங்கரை விளக்கம் – போட் கிளப் வரை 2வது சுரங்கம் தோண்டும் பணி தொடங்கி உள்ளதாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம், கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக சென்னை விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து, தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன. இதில் உயர்மட்ட மற்றும் சுரங்கப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தற்போது, மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில், அடையாறு திரு.வி.க.பாலம் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2ம் கட்ட திட்டத்தில் 4வது வழித்தடமான மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தல்லி புறவழிச்சாலை வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் முதற்கட்டமாக, ‘பிளமிங்கோ’ என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் 1.9.2023 அன்று சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. தற்போது, கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப் ரயில் நிலையம் வரை 2ம் கட்டமாக சுரங்கப்பாதை அமைக்கும் பணியை ‘கழுகு\” என பெயரிடப்பட்ட இயந்திரம் பணியை தொடங்கி உள்ளது.

அதாவது, கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்தில் இருந்து மயிலாப்பூர் நோக்கி வெற்றிகரமாக சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் அக்டோபர் 2026ம் ஆண்டு, போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன் (கட்டுமானம்), பொது ஆலோசகர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கலங்கரை விளக்கம் – போட் கிளப் வரை 2வது சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கியது: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Lighthouse – Boat Club ,Metro Rail Administration ,Chennai ,Lighthouse ,Boat Club ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot...