×

சீதன வெள்ளாட்டி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மந்தரை எனது பெயர். குழந்தை பிராயத்தில் எப்பொழுதும் சிரித்துக்கொணடே இருப்பேனாம். என் சிரிப்பு மந்தாரைப்பூப் போல இருக்குமாம். அதைச் சொல்லிச் சொல்லியே என்னை `மந்தாரை’ என்றே அழைப்பாராம். என் சிறுவயதில் தாய் சொல்லக் கேட்டிருக்கிறேன். என் பெயர் மந்தரையா அல்லது மந்தாரையா?… எனக்கு தெரியவில்லை. காரணம் எனக்கு விவரம் அறிந்த நாள் முதலே என்னை அந்தப் பெயர் சொல்லி யாருமே அழைக்கவில்லை. கூனி! இதுதான் என் பெயர் என்பதாகவே எனக்குப்பட்டது. பின்னொரு காலத்தில், கூனிக்குறுகி நான் நிற்கப்போகிறேன் என்பதை முன்பே உணர்ந்தோ என்னவோ, அந்த கூனி என்கின்ற பெயர்க் காரணம், என் நடுமுதுகில் சின்னதாய் ஒரு சதை மூட்டை.

அதன் பாரம் தாங்க முடியாது கூன் விழுந்திருந்தது. முதிர்ந்த பின் வரவேண்டியது. கேள்விக்குறியாய், நிரந்தரமாய் வளைந்த முதுகு.முதுகு மட்டுமல்ல அந்த இளம் வயதில் என் வாழ்வும் ஒரு கேள்விக்குறிதான். கேகய நாட்டின் அரசனான அஸ்வத்தன் அரண்மனையில் தந்தைக்கும் தாய்க்கும் ஊழியம். நான் வளர்ந்தது அந்தஅரண்மனையில்தான். அரசனுக்கு எட்டு குழந்தைகள். ஏழு புதல்வர்களும் ஒரே ஒரு புதல்வியாக கைகேயியும் பிறந்தார்கள். ஒரே செல்ல மகள் கைகேயி பிறக்கும்பொழுதே, நான் அருகில் இருந்தவள்.

அன்று முதல் எனக்கு எல்லாமே கைகேயிதான். கைகேயி சின்னஞ்சிறுமியாய் அரண்மனையில் வலம் வந்த போதெல்லாம், `இளவரசி வருகிறார்! இளவரசி வருகிறார்!!’ என்னும் பொழுது, அவளுடன் சென்ற எனக்கும் மரியாதை கிடைத்தது. எல்லோரும் என்னைப் பார்த்து புன்னகைத்தது எனக்கு பிடித்திருந்தது. அது கைகேயிக்காக என்பதை நான் உணர்ந்திருந்தேன். இருந்த போதிலும், என் கூனைத் தாண்டி நான் அங்கீகரிக்கப்பட்டதில், என் உணர்வில் பெருமையும் கர்வமும் கலந்திருந்தது. திருமண நாளும் வந்தது. பட்டத்து மஹிஷியாக தசரத மஹாராஜா, கைகேயியை மணம் முடித்தார். கேகய நாட்டின் அரசர், எல்லா சீர்வரிசைகளையும் அளித்தார்.

இதற்கெல்லாம் மேலாக, `இதோ.. இந்த மந்தரையை உங்களுடன் அனுப்புகிறேன். இவள் எங்களுக்கு, குறிப்பாக கைகேயிக்கு ஒரு பெரிய பொக்கிஷம். இவளை சீதன வெள்ளாட்டியாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’. என்று சொன்னதும், எனக்கு உயிர் வந்ததுபோல் உணர்ந்தேன். என் கூன்கூட கொஞ்சம் நிமிர்ந்ததாகப்பட்டது.

சந்தோஷத்தில் கைகேயியின் சேலைத்தலைப்பை பிடித்தபடி அவளைவிட வயதான நான், குழந்தையைப் போல ஆனேன். மூன்று பட்ட மஹிஷிகளில் தசரதர், கைகேயிடத்தில் மிக அலாதியான அபரிமிதமான பிரியமுடன் இருந்தார். அதற்கு கைகேயியின் வனப்பு, மொழி வளம், தேரோட்டும் லாவகம், திறன், கூரிய மதிநுட்பம் எல்லாமுமே காரணம்.அது எனக்கு கூடுதல் மகிழ்வையளித்தது. பின், நான்கு புதல்வர்கள் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன் பிறந்தார்கள். தனக்கு பிடித்த ராமரையும், கைகேயியையும் ஒரே அரண்மனையில் வசிக்கவைத்து, அழகு பார்த்தார் தசரதர்.

எனக்கு என்னமோ, எப்போதுமே பரதனின் வளர்ப்பே பிரதானம். ராமனுக்கு, எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பது சங்கடத்தைதான் கொடுத்தது. அதுவும், கைகேயியும் ‘என் ராமன்.. என் ராமன்’ என்று கொண்டாடுவது, மேலும் சங்கடம். எனக்கு எப்பொழுதுமே கைகேயி ஒரு கண் என்றால், மற்றொரு கண் பரதன்தான். கைகேயின் குறிப்பறிந்து அவளுக்கு சேவை செய்வது மிகுந்த நிறைவைத் தந்தது. திடீரென்று ஒரு நாள், தசரதருக்கு என்ன ஆயிற்று என்று புரியவில்லை. வசிஷ்டரை அழைத்தார். அரசவை உறுப்பினர்களை அழைத்தார்.

அரசவையில் தனக்கு காதில் நரை வந்து சொல்லியதாக கதை சொன்னார். தன் அந்திம காலம் நெருங்க இருப்பதால், உடனே ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய நாள் குறிக்க பணித்தார். வசிஷ்டர், மறுநாளையே நல்ல நாள் என்று தேர்வு செய்தார். ஏன் இவ்வளவு அவசர அவசரமாய் செய்யவேண்டும்? அதுவும் பரதன் வெளியூரில் இருக்கும் பொழுது? ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாகவே நான் உணர்ந்தேன். நான் ராமனை வெறுக்கவில்லை. சத்தியமாக வெறுக்கவில்லை. ஆனால், இது பரதனுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே நினைத்தேன். நேராக கைகேயின் அரண்மனையை அடைந்தேன்.

கைகேயியிடம், “நான் உன்னைவிட வயதில் பெரியவள் ஆனாலும் தாதிதான்! உன்னை எப்பொழுதுமே ஒருமையில் ‘கைகேயி’ என்று அழைத்திருக்கிறேன். அது ஒரு தாயின் குரலாக, ஒரு தமக்கையின் குரலாகதான் நீ எடுத்துக் கொண்டிருக்கிறாய்.” என்றதும் கைகேயி கேட்டால்; ‘மந்தரை நீ எதற்காக இந்த பீடிகை எல்லாம் போடுகிறாய். சொல்ல வந்த விஷயத்தை உடனடியாக சொல்லக் கூடாதா? எனக்கு நேரம் ஆகிறது.

தசரத மகாராஜா வரும் நேரமும் ஆகிவிட்டது. அவர் வரும்பொழுது நான் இன்னும் தயாராக இருக்க வேண்டாமா? என்ன செய்தியோ அதை உடனடியாக சொல்.’ என்றார்.‘‘நாளை ராமனுக்கு பட்டாபிஷேகமாம்! உனக்கு தெரியுமா?” “ஆஹா! எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி!! இந்தா! நற்செய்தி கூறிய உனக்கு என் முத்துமாலை. அணிந்துகொள்.” என்று கைகேயி முத்துமாலையை கொடுத்ததும், அந்த மாலையை நான் தூக்கி எறிந்தேன்.“நீதான் தசரத மகாராஜாவை தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறாய்.”

“இருக்கட்டும். அதில் என்ன? தசரத மகாராஜாவுக்கு மூன்று பட்டத்து மஹிஷிகள். இருந்தாலும், நான் தானே தசரதரால் கொண்டாடப் படுபவள். அதில் எனக்கு சந்தோஷம்தானே.”

“நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உனக்கு எதுவுமே பிடிபடவில்லை. உனக்கு புரியும்படி சொல்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பாரேன். எதிர்காலத்தைக் கொஞ்சம் நினை. தசரதர் காலத்திற்குப் பின்பு..”‘‘நீ எதையும் அச்சாணியமாகச் சொல்லாதே’’

“நெருப்பு என்றால் வாய் சுடப்போவதில்லை. தசரதன் காலத்திற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது? ராமன் அரசபையில் பட்டத்து ராஜாவாக இருக்கப் போகிறார். இந்த அயோத்தி ராஜ்ஜியமே ராமனின் கீழ் இருக்கப்போகிறது. பின், நீ யார் கோசலைக்கு? உன்னை எப்படி அவள் நடத்தப் போகிறாள்? உன்னுடைய பரதன் என்ன ஆவான்?”நான் இதைச் சொன்னதும், அப்பொழுதுதான் அவள் கையைப் பிசைவதை நான் பார்த்தேன். சிறிது மாற்றத்தை அவளிடம் உணர்ந்தேன்.“என் பரதன் என்ன ஆவான்?” என்றால் கைகேயி.

இதுவரையில், ‘என் ராமன்..’ என்றவள், ‘என் பிள்ளை ராமன்..’ எனச் சொன்னவள், அந்த நொடியில் ‘என் பரதன்.. என் மகன் பரதன்..’ என்று சொல்ல ஆரம்பித்தாள்.“கைகேயி, இதற்கும் மேலே இன்னும் ஒரு முக்கியமான விஷயம்! இதை நீ எப்படி மறந்தாய்? ஜனக மகாராஜா அதாவது சீதையின் தந்தைக்கும் ஏற்கனவே உன் தந்தைக்கும் போர் மூண்டு இப்பொழுது தற்காலிக சமாதானம்தான் நிலவுகிறது.

நாளையே இருவருக்கும் மீண்டும் போர் மூண்டால், என்ன ஆகும்? ராமன், அவருடைய மாமனார் பக்கம் நிற்பாரா அல்லது கைகேயின் தந்தை, என் பாட்டன் என்பதால் அவர் பக்கம் நிற்பாரா? உன் வாழ்வு, உன் மகனின் வாழ்வு சரிவது ஒரு புறம் இருக்கட்டும். உன்னை ஈன்ற தந்தைக்கும் கேடு வர நீ விரும்புகிறாயா? என்று தடதடவென பொரிந்து தள்ளினேன். அந்தக் கணப் பொழுதே நான் சின்னதாக வைத்ததீப்பொறி, பற்றி எரியத் துவங்கிவிட்டதை உணர்ந்தேன்.

நான் ஒரு நல்ல எண்ணத்தில் பரதன், கைகேயியின் மீது கொண்ட அன்பால் இதைச் செய்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக அஸ்வத்தன், கைகேயின் தந்தை. அந்த அரசன் எங்கள் குடும்பத்தையே வாழவைத்தவன். இவை எல்லாமே கேகய நாட்டிற்கு நான் செய்ய வேண்டிய நன்றிக் கடனாகவே நினைத்தேன். அவள் மனதில் நட்ட சிறுவிதை, பரபரவென்று சில மணித்துளிகளிலேயே விருட்சமாய் நின்றது. அவள் அதிபுத்திசாலி!! புரிந்து கொண்டாள்.

“மந்தரை! நீ எனக்கு மாபெரும் உதவி செய்துவிட்டாய். எனக்கு என் நிலையை புரிய வைத்துவிட்டாய். நன்றி! நன்றி! சரி நீ இப்பொழுது செல்.’’ என்று கைகேயி சொன்னதும், நான் வெளியேறி மறைந்து நடக்கவிருப்பதை அவதானித்தேன். அவள் தரையில் படுத்துக் கொண்டாள். தான் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றி எறிந்தாள். தலையில் சூடியிருந்த மலர்களை பிய்த்து தூரவீசினாள்.

அதற்கும் மேல், அவள் செய்த காரியம். எனக்கே அதிர்வைத் தந்தது. தன் நெற்றியிலிருந்த திலகத்தையும் அழித்தாள். தசரதன், வரவுக்காக காத்திருந்தாள். எனக்கு இப்பொழுது ஒரு விஷயம் மனதில் முட்டியது. கைகேயியின் மனதில் ஏற்கனவே இந்த எண்ணம் இருந்திருக்கவேண்டும். நான் செய்ததெல்லாம் பனிபோல் படர்ந்திருந்த விஷயத்தைதான் சற்று கலைத்திருக்கிறேன். இதில் என் பங்கு இவ்வளவே!கைகேயி சாமர்த்தியசாலி! நாடகம் நடத்தினாள்.

நேரம் பார்த்து இரண்டு வரம் கேட்டாள். அதில் முதல் வரம், பரதன் நாடாள வேண்டும். இரண்டாவது வரம், ராமன் பதினான்கு வருடங்கள் காடாள வேண்டும். “முதல் வரத்தை மட்டுமாவது கேள்! இரண்டாவது வரத்தை விட்டுவிடு’’ என்று தசரதர், கதறி அழுத வார்த்தைகள் அவள் காதில்கூட ஏறவே இல்லை. அவள் காலில், விழுந்து தசரதர் இறைஞ்சுவதைப் பார்க்க எனக்கே மனது குமைந்தது. பின் நடந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வுகள்தான்.

கைகேயி, ராமனுக்கு செய்தி தெரிவிக்க, ராமன் – லட்சுமணன் – சீதை மூவரும், கானகம் புறப்பட்டார்கள். அயோத்தி அரண்மனையில், கோசலை மடியிலே தசரதர் மரணிக்கும் தறுவாயில் இருந்தார். அவருக்கு, சிரவணன் தந்தை இட்ட சாபத்தை – தான் புத்திரசோகத்தில் அவதியுறவேண்டிய நிலையைப் பகிர்ந்தார். பரதனுக்கு உடனே அயோத்தி திரும்ப செய்தி தெரிவிக்கப்பட்டது.

பரதன் அங்கிருந்து சத்ருக்னனுடன் அயோத்திக்கு விரைந்தான். எல்லா செய்திகளையும் கேட்டறிந்தான். மிகவும் கோபமும் வருத்தமும் கொண்டான். எல்லோரையும் பார்த்து, “என்ன காரியம் செய்துவிட்டீர்கள்! என் அண்ணன் ராமனை எப்படி நீங்கள் காட்டுக்கு செல்ல வைத்தீர்கள்! இது மகாபாவம்! மகாபாவம்! இப்பொழுதே ராமனையும், லட்சுமணனையும், சீதா தேவியையும் அழைத்துவரபோகிறேன்.’’ என மொத்த அயோத்தி மக்களையும் இணைத்துக் கொண்டு, கானகம் நோக்கி விரைந்தான். அந்தக் கூட்டத்தினரிடையே நானும் இருந்தேன். என்னை சத்ருக்னன் கண்டு கொண்டான். என்னை நோக்கி, “எல்லாம் இந்த சதிகாரியின் சூழ்ச்சியால்தான். இவளைக் கொன்று தீர்க்க வேண்டும்” என்று வெகுண்டான்.

என்னைக் கொல்ல எத்தனித்தான். அப்பொழுது பரதன் தடுத்து, “அண்ணன் ராமனுக்கு சற்றுகூட பிடிக்காத செயலை எப்பொதுமே செய்யாதே. முதிர்ந்த கிழவியிடம் உன்னுடைய வீரத்தை காண்பிக்கப் போகிறாயா? இது உனக்கு இழுக்கு! விட்டு விடு” என்றான். எனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கப்பட்டது. என்நிலை நினைத்து தலைகுனிந்தேன். நானும், ராமனைப் பார்க்க அவர்களுடன் செல்வதா..

இல்லை அங்கேயே நிற்பதா என்று புரியாமல் தவித்தேன். என் பரிதாப நிலை, என்னை நிலை குலையவைத்தது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு, கானகத்துக்குச் சென்ற அயோத்தி மக்களும், பரதனும், சத்ருக்னனும் திரும்பி வந்தார்கள். ராமன், சீதை, லட்சுமணன் யாருமே திரும்பவும் அயோத்தி வர சம்மதிக்கவில்லை என்ற செய்திதான் வந்தது. பரதனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, ராமன் தன்னுடைய பாதுகையை கொடுத்தனுப்பியிருந்தான். பரதன், அந்த பாதுகையைத் தலையில் வைத்துக்கொண்டு வந்தான். “இனிமேல், இந்த கோசல தேசத்தைக் காக்கப்போவதும் ஆளப்போவதும் என்றுமே அண்ணன் ராமன் மட்டுமே!

அதற்கு அடையாளமாக ராமனின் பாதுகையை நான் உங்கள் எல்லோருடைய ஒப்புதலுடன் அரியணையில் வீற்றிருக்கச் செய்கிறேன்.” யாருக்காக இத்தனையும் நடந்தது? என்னுடைய அந்தச் சிறுமையான செயல், இத்தனை பெரிய துயரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கடுக்காய்ச் சேர்த்துவிட்டது. எப்படி நான் இந்தப் பாவத்திலிருந்து மீள எனக்கென்ன வழி? இந்தப் பதினான்கு ஆண்டு காலம் நான் எப்படி கழிக்கப் போகிறேன்? நான் உயிர் வாழ்வதால் யாருக்கும் உபயோகம் இல்லை. மொத்தத்தில் என்னை எல்லோரும் ஒதுக்கியே வைத்திருந்தார்கள். ஒரே ஆறுதலான விஷயம்.

அரியாசனத்தில் வீற்றிருக்கும் பாதுகை மட்டும்தான். யாரும் பார்க்காத நேரம், ஒரு மந்தாரைப் பூவை பாதுகையின் மேல் தினமும் வைப்பேன். மன்னிப்பின் வெளிப் பாடாகவே அதைச் செய்து வந்தேன். எல்லா பூக்களுக்கும் நடுவில் அந்த மந்தாரைப் பூ என்னைப் பார்த்துச் சிரிக்கும்.அந்த மந்தாரைப் பூவிடம் மட்டுமே நான் பேசுவேன். என்னை மன்னிக்கச் சொல்லி ராமனை பிரார்த்திப்பேன்.

ராமனை எண்ணியபடி நாட்களைக் கடத்தினேன். எனக்கு இது ஒரு அஞ்ஞாதவாசம்தான். எதிர்பார்த்த திருநாள் வந்தது. பட்டாபிஷேகம் இன்று நடந்து முடிந்தது. எல்லோரும் விமரிசையாகக் கொண்டாடினார்கள். எல்லாம் முடிந்தபின், ராமன் ஒவ்வொரு தாய்க்கும் சென்று தன்னுடைய வணக்கங்களைத் தெரிவிப்பான் அல்லவா, அப்படி வருகையில் தரிசித்துவிடவேண்டும். காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிடவேண்டும்.

என எண்ணி கைகேயியின் அரண்மனை வாயிலில் கையில் ஒற்றை மந்தாரைப்பூவுடன் மறைந்திருந்தேன். ஒரு வேளை என்னைக் கண்டு பாராமல் நகர்ந்து விடுவானா?கைகேயிடம் வந்தான். வணங்கினான். கைகேயி தலைகுனிந்து நின்றபொழுது, “அன்னையே நீங்கள் செய்த செயல் எனக்கு எந்த மன வருத்தத்தையும் தரவில்லை. என்னுடைய கடமைகளை நான் சீராய் செய்வதற்கும், எனக்கு மேலும்மேலும் நல்ல விஷயங்கள் நடப்பதற்கும் காரணமாகத்தான் இருந்தது.

தவறேதும் நீங்கள் புரியவில்லை. அவற்றை அடியோடு மறந்துவிட வேண்டும். நான் என்றும் உங்கள் ராமன்தான்.” என்றதும், கைகேயி கண்ணீருடன் ராமனை உச்சி முகர்ந்தாள்.நான் ஒதுக்குப் புறமாக கூனி குறுகி நின்று கொண்டிருந்தேன். என் கேவல் ராமனுக்குக் கேட்டிருக்கவேண்டும். ராமன் என்னைப் பார்த்துவிட்டான். என்னுடைய பிரார்த்தனை அவனுக்கு புரிந்திருக்க வேண்டும்.

என் அருகில் ஓடிவந்தான்.“மந்தரை பாட்டி..! மந்தரை பாட்டி..!” என்றபடியே என் கையைப் பிடித்துக் கொண்டான். எனக்கு அழுகை அழுகையாய் வந்தது. அந்த ஒரு சொல், என் எல்லாத் தவறையும் மன்னித்துவிட்டதாகவே எனக்குப்பட்டது.“ராமா!… பதினான்கு வருடங்கள்.. எவ்வளவு நீண்ட காலம். நீ கல்லில் நடப்பதற்கும், முள்ளில் நடப்பதற்கும், எத்தனையோ சித்தரவதைகளை அனுபவிக்கவும் நான் காரணமாகிவிட்டேன்.

ஹே ராமா! தசரதன் இறப்பிற்கும், சீதையின் துயருக்கும், நான் தானே காரணம்… என்னை மன்னித்துவிடு ராமா” என்று நான் வாக்கியத்தை முடிக்கும் முன்பே, ராமன் என் வாயைப் பொத்தினான். என்னால் என் கூனல் முதுகை வைத்துக் கொண்டு அவன் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. எப்போதும், பார்க்கிற பாதுகை இப்போது ராமனின் பாதங்களில்!! தலை நிமிரமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ராமனுக்கு புரிந்தது. எனக்காக ராமன் மண்டியிட்டு, என் முகத்தைக் கைகளால் தாங்கிகொண்டான்.

‘என் மேல் உனக்கு எத்தனை கருணை!! நீ.. கருணா மூர்த்திதான். என் உள்மனம் சொல்லிற்று. மந்தரை பாட்டி.. நடந்தவை எல்லாமே ஒரு நாடகம் தானே! நான்தான் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். என்னதான் இருந்தாலும், ஒரு மணல் உருண்டையை எடுத்து உங்கள் கூன் முதுகில் அடித்திருக்கக் கூடாது. ஒரு சிறுவன் செய்த சிறு செயலாக இருந்த போதிலும், அது தவறுதான்.

வாலிவதத்தின் போது சுக்ரீவனிடம் இதனைப் பகிர்ந்து வருந்தினேன். சிறு மண் உருண்டையை ஒரு சிறுவன் அடித்ததால் உண்டான வலி சிறியதாக இருக்கலாம். ஆனால், அடிபட்ட அந்த ஊனமுற்றவருக்கு தன் ஊனத்தை கேலி செய்வதாகத்தானே தோன்றும். அது பெரிய ரணமல்லவா. நான் அந்த செயலை செய்திருக்கக் கூடாது. என்னை நீங்கள் தான் மன்னிக்க வேண்டும்” என்றார் ராமன். “வயதில் முதிர்ந்த நான் அப்படி ஒரு வஞ்சக எண்ணத்தை கைகேயி மனதில் புகுத்தியிருக்கக் கூடாது அல்லவா.”

“இல்லை பாட்டி, இல்லை… நீங்கள் மூட்டிய சிறு பொறி தான் பெரும் தீயாகி இலங்கையை அழித்து இராவண சாம்ராஜ்யத்தையும் அழித்தது அல்லவா! இதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். ஒரு பெரிய நன்மை நிகழும்பொழுது இது போன்ற சிறு செயல்கள் தவிர்க்க முடியாதுதான். நதி வெள்ளம் பெருகினாலும், வறண்டாலும் அது நதியின் பிழையல்ல, விதியின் பிழையே.

ஆமாம்… பாதுகையில் இத்தனை காலம் மந்தாரை பூக்கள் வைத்தீர்களாமே! நீங்களும் மந்தாரைப் பூக்கள் போலவே சிரிக்க வேண்டும்! இது என் அன்புக் கட்டளை. எல்லாவற்றிற்கும் மேல், நீங்கள் எங்கள் பாட்டனார் கேகய நாட்டு அரசர், சூரிய குலத்திற்கு அளித்த சீர் அல்லவா! “சீதன வெள்ளாட்டியே வாருங்கள்” என ராமர் சொன்னதும், நீண்ட காலத்திற்குப் பிறகு நான் சிரித்தேன். ராமனின் கைபிடித்து நடக்கலானேன். நான் இனி மந்தரை அல்ல… நான் மந்தாரைப் பாட்டி!

தொகுப்பு: கோதண்டராமன்

The post சீதன வெள்ளாட்டி appeared first on Dinakaran.

Tags : Seethana Vellatti ,Kumkum Anmikam Mantrai ,Mantharai ,
× RELATED சுந்தர வேடம்