×

நாகர்கோவிலில் எம்ஜிஆர் சிலையில் கொடி கட்டுவதில் அதிமுக, அமமுகவினர் இடையே மோதல் போலீஸ் குவிப்பு

நாகர்கோவில் ஜன. 18: வடசேரியில் உள்ள எம்ஜிஆர் சிலையில் கொடிகட்டுவதில் அதிமுக, அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்ஜிஆர் சிலையை சுற்றியும், அருகில் உள்ள அண்ணா சிலையை சுற்றியும் அதிமுகவினர் கொடிகளை கட்டி இருந்தனர். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு முக்கிய நிர்வாகிகள் சென்று விட்டனர். இருப்பினும் ஒரு சில நிர்வாகிகள் அங்கு நின்று கொண்டிருந்தனர். இந்தநிலையில் அமமுக மாவட்ட செயலாளர் ராகவன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். பின்னர் அமமுக கொடியை எம்ஜிஆர் சிலை முன்பு கட்டி வைத்துவிட்டு கீழே இறங்கி சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அதிமுகவினர் எம்ஜிஆர் சிலை முன்பு அமமுக கொடியை கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனே அமமுக கொடியை அகற்ற வேண்டும் என்றும் கூறினர். ஆனால் அமமுகவினர் தங்களது கொடியை அகற்ற முடியாது என்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், கவுன்சிலர் லிஜா, முன்னாள் கவுன்சிலர் சகாயராஜ் உள்பட அதிமுக நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் எம்ஜிஆர்சிலை முன்பு கட்டி இருந்த அமமுக கொடியை அகற்றினர். இதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த அமமுகவினர் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அதிமுக, அமமுக நிர்வாகிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தகாத வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். மேலும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டனர்.

இதையடுத்து மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது. சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில், வடசேரி இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் உள்பட போலீசார் விரைந்து வந்தனர். அப்போது அதிமுகவினர் சிலையை சுற்றி எம்ஜிஆர் பயன்படுத்திய கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் கொடியை கட்டக்கூடாது. ஆனால் எம்ஜிஆர் சிலைக்கு யார் வேண்டுமானாலும் மாலை அணிவித்துக் கொள்ளலாம் என்றனர். உடனே அங்கிருந்த அமமுகவினர் எங்களது கட்சி கொடியை அகற்றினால் அதிமுக கொடியையும் அகற்ற வேண்டும், அதுவரை நாங்கள் இங்கிருந்து செல்லமாட்டோம் என கூறி அப்பகுதியில் நின்றனர். இதனால் மீண்டும் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து எம்ஜிஆர் சிலை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதிமுக மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்கள் எம்ஜிஆர் சிலை பொதுவானது. இதில் தகராறு செய்யவேண்டாம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து அதிமுகவினர் எம்ஜிஆர் சிலை, அண்ணா சிலையை சுற்றி கட்டிஇருந்த கட்சி கொடிகளை அகற்றினர். இதனை தொடர்ந்து அமமுகவினர் கலைந்து ெசன்றனர். இதனால் வடசேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post நாகர்கோவிலில் எம்ஜிஆர் சிலையில் கொடி கட்டுவதில் அதிமுக, அமமுகவினர் இடையே மோதல் போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,AAM MUK ,MGR ,Nagercoil ,AAM ,Vadaseri ,Former ,Tamil ,Nadu ,Chief Minister MGR ,Nagercoil Vadaseri ,Mukherjee ,
× RELATED 2001, 2017ல் நான் முதல்வராயிருக்க முடியும்:...