×

‘‘பெண் ஆசையே துன்ப கடலில் வீசியது’’ 4 பெண்களை மணந்த கல்யாண மன்னன்

* மாமனாரை கடத்தியபோது போலீசார் சுற்றிவளைப்பு

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சாமுவேல் (55). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகின்றார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சுரேஷ் (26) என்ற மகன் மற்றும் இரட்டையர்களான சோனியா (23), சொர்ணா (23) ஆகிய மகள்கள் உள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் கூரம் கிராமம் அரசமர தெருவை சேர்ந்த ஆழ்வான் (35) என்பவரை சோனியா காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதன்பிறகு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சோனியா கர்ப்பமானார். இதனால் அவரைப் பார்த்துக்கொள்வதற்காக தங்கை சொர்ணா நியமிக்கப் பட்டார். இதன்காரணமாக சொர்ணாவுக்கும் ஆழ்வானுக்கும் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அவரை 2வது திருமணம் செய்துகொண்டார். இதன்பிறகு இவர்கள் சென்னை அருகே வேப்பம்பட்டு பகுதியில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்தநிலையில், சில மாதங்களாக ஆழ்வான் குடித்துவிட்டு சொர்ணா, சோனியா ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவர்களை சித்ரவதை செய்துள்ளார். இதனால் சகோதரிகள் கடந்த 12ம்தேதி கொடுங்கையூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டனர். இதன்பிறகு ஆழ்வான் வந்து தனது மனைவிகளை அனுப்பிவைக்க வேண்டும் என்று மாமனார் சாமுவேலிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது சாமுவேல், கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததால் ஆழ்வான் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மறுநாள் ஆழ்வான் வருவார் என்று பயந்து சகோதரிகள், அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டனர்.

இதன்பிறகும் ஆழ்வான் மீண்டும் தனது மாமனார் வீட்டுக்கு வந்து வாக்குவாதம் செய்ததுடன் ‘‘உங்களிடம் தனியாக பேச வேண்டும்’’ என்று மாமனாரை பைக்கில் அழைத்துச்சென்றுவிட்டார். இதன்பின்னர் அவரை பெங்களூருக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து சொர்ணா, சோனியா ஆகியோருக்கு போன் செய்து, ‘’உங்களது தந்தையை நான்தான் கடத்தி வைத்துள்ளேன். நீங்கள் என்னுடன் குடும்பம் நடத்த வந்தால் மட்டுமே விடுவிப்பேன். இல்லையென்றால் சாமுவேலை துண்டு, துண்டாக வெட்டிகொன்று விடுவேன்’’ என மிரட்டி உள்ளார். இதுசம்பந்தமாக இரண்டுபேரும் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்திவிட்டு ஆழ்வானை தொடர்புகொண்டபோது செல்போனை எடுக்கவில்லை. இதனால் அவரது செல்போன் டவரை வைத்து தொடர்ந்து விசாரித்தபோது அவர் ஏரியாவை மாற்றிக்கொண்டே பெங்களூரூ, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு சென்றபடி இருந்தார். செல்லும் இடங்களில் எல்லாம் தனது 2 மனைவிகளுக்கு வீடியோ கால் மூலம் போன் செய்து சாமுவேல் கையை கட்டிப்போட்டு அவரை அடிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஆழ்வானை போலீசார் பின்தொடர்ந்து நேற்று மாலை சென்னை வந்ததை உறுதி செய்தனர். இதன்பிறகு மாதவரம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் பதுங்கியிருந்த ஆழ்வானை கைது செய்து அவரது பிடியில் இருந்து சாமுவேலையும் மீட்டனர். இதன்பின்னர் ஆழ்வானை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

சாமுவேல் குடிபோதைக்கு அடிமையானவர். இதனால் அவரை அடிக்கடி பைக்கில் அழைத்துச்சென்று மது வாங்கி கொடுத்து பெங்களூரூ, ஆந்திரா ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார். இரண்டு மகள்கள் என்னுடன் வாழ வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி கையை கட்டிப் போட்டு வீடியோ காலில் அவரை அடிப்பது போன்று நடித்து அவரது மனைவிகளுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். வீடியோ காலிலும் பேசியுள்ளார். தொடர்ந்து போலீசார் துரத்தி வருவதை தெரிந்ததும் சென்னைக்கு வந்துள்ளார்.
இவ்வாறு தெரியவந்தது.

இந்தநிலையில், ஆழ்வான் ஏற்கனவே காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். 2வதாக சுகந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டு வேப்பம்பட்டு பகுதியில் வாழ்ந்துள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்புதான் சோனியா அவரை தொடர்ந்து அவரது தங்கை சொர்ணாவை திருமணம் செய்துள்ளார். இதுமட்டுமின்றி ஆழ்வானுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. ஆழ்வான் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துள்ளார். இவர் மீது காஞ்சிபுரம் மாவட்டம் பாலச்செட்டிசத்திரம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் 11 குற்ற வழக்குகள் உள்ளது. இவ்வாறு தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆழ்வானை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ‘‘பெண் ஆசையே துன்ப கடலில் வீசியது’’ 4 பெண்களை மணந்த கல்யாண மன்னன் appeared first on Dinakaran.

Tags : Kalyana ,Perambur ,Samuel ,Ambedkar Street, Kodunkaiyur, Chennai ,Thanalakshmi ,Suresh ,Sonia ,
× RELATED திருப்புல்லாணி கல்யாண ஜகந்நாதப் பெருமாள்