தாராபுரம்: போலீஸ் எஸ்ஐ உள்பட பல ஆண்களை நகை, பணத்திற்காக திருமணம் செய்து ஏமாற்றிய ‘கல்யாண ராணி’ சத்யாவை பாண்டிச்சேரியில், தாராபுரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் ஏமாந்த வாலிபரின் தாத்தா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் விதை விற்பனை நிறுவனங்கள் நடத்தி வருபவர் அரவிந்த் (34). இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆன்லைன் செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஒத்தக்கடையை சேர்ந்த பழனிச்சாமியின் மகள் சத்யா (40) என்ற பெண் அறிமுகமானார். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், நாம் நண்பர்களாக பழகுவோம் என்றும் கூறி அரவிந்திடம் சத்யா பழகி வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் சத்யா நகை, பணத்திற்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் என்ற தகவல் அரவிந்திற்கு தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்கறிஞர் செல்வக்குமார் மூலம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரவிந்த் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நானும், சத்யாவும் சேர்ந்து அடிக்கடி வெளியூருக்கு சென்று வருவோம். தமிழ்ச்செல்வி என்பவரும் உடன் வருவார். அப்போதுதான் சத்யாவிற்கு புரோக்கர் தமிழ்செல்வி என்பது எனக்கு தெரியவந்தது. தமிழ்ச்செல்வி பலமுறை என்னிடம் புரோக்கர் கமிஷன் பெற்றுள்ளார். பின்னர் ஏசி வாங்க வேண்டும் என்று இருவரும் என்னிடம் ரூ.46 ஆயிரம் பெற்றுள்ளனர்.
20-6-2024 அன்று எனது அலுவலகத்திற்கு சத்யா வந்தார். வீட்டில் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் தனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து உள்ளதாகவும் சொல்லி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். உடனடியாக கரூருக்கு அழைத்துச் சென்று துணிக்கடையில் வேஷ்டி, சட்டை மற்றும் அரை பவுனில் மாங்கல்யம், மெட்டி வாங்கினோம். அதற்கான பணத்தை நான் கொடுத்தேன் சத்யாவிற்கு ஏற்கனவே புடவை எடுத்து வைத்துள்ளதாக சத்யாவும், தமிழ்ச்செல்வியும் என்னிடம் கூறினர்.
பிறகு தமிழ்ச்செல்வி என்னிடம் ரூ.20 ஆயிரம் ரொக்கமாக பெற்றுக் கொண்டார்.பின்னர் பழநியில் செல்லும் வழியில் தொப்பம்பட்டி அருகே உள்ள பூசாரி கவுண்டர் வலசில் உள்ள வீரமாட்சி அம்மன் கோயிலில் எனக்கும், சத்யாவிற்கும் தமிழ்ச்செல்வி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வைத்தார். பின்னர் சத்யாவை எனது வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். தமிழ்ச்செல்வி உடன் வந்தார். எனது குடும்பத்தினர் எங்கள் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர்.
எனது குடும்பத்தினர் சத்யாவிற்கு நகைக்கடைக்கு சென்று 7 பவுனில் கொடி, நான்கு பவுனில் செயின் மற்றும் 2 பவுனில் மோதிரம் எடுத்து வந்து கொடுத்தனர். அந்த நகைகளை சத்யா அணிந்து கொண்டார். இந்நிலையில் சத்யாவின் செல்போனில் பல ஆண்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்களை பார்த்தேன். இதைப்பற்றி கேட்டபோது அவர் என்னை தகாத வார்த்தையால் பேசினார். ‘‘நான் இதற்கு முன்பு 15 பேருக்கு மேல் ஏமாற்றி திருமணம் செய்து இருக்கிறேன். 2012ல் நான் மைனர் ஆக இருக்கும்போதே பதிவு திருமணம் செய்திருக்கிறேன். உன்னையும் அப்படித்தான் ஏமாற்றி திருமணம் செய்து உள்ளேன்.
உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது’’ என்று கூறி என்னிடம் தகாத வார்த்தையால் சண்டை போட்டார். அவரை பற்றி விசாரிக்கும்போது, சென்னையைச் சேர்ந்த அருள், கரூரை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஆகியோரை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்துள்ள விபரமும், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்த மாட்டு வியாபாரியின் மகனை ஏமாற்றி பணம் பெற்றுள்ள விபரமும், 2012ல் இன்னொருவரை பதிவு திருமணம் செய்து கொண்டதும், அவருக்கும் சத்யாவுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிற விவரமும் எனக்கு தெரியவந்தது. இன்னும் பல நபர்களை சத்யா ஏமாற்றிள்ளார்.
இதற்கு உறுதுணையாக தமிழ்ச்செல்வி இருந்துள்ளார். ஆசை வார்த்தை கூறி, பல திருமணங்களை மறைத்து, எனது நகை, பணத்தை அபகரித்துள்ளனர். ஆகவே சத்யா மீதும், தமிழ்ச்செல்வி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் அரவிந்த் கூறியிருந்தார். இந்த புகாரை தொடர்ந்து சத்யா தலைமறைவானார். இந்நிலையில் சத்யா பாண்டிச்சேரியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் சத்யாவை கைது செய்து அழைத்து வந்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
சத்யாவுக்கு புரோக்கராக செயல்பட்ட தமிழ்ச்செல்வியை தேடி வருகின்றனர். இதற்கிடையே சத்யாவிடம் வாலிபர் அரவிந்த் ஏமாந்த விவரம் தெரிய வந்ததால் 85 வயதான அவரது தாத்தா கருப்பசாமி, பேரனுக்கு இவ்வளவு நாள் கழித்து இப்படி ஒரு பெண் மனைவியாக அமைந்து விட்டாளே என்ற மனவேதனையடைந்துள்ளார். இதுகுறித்து தங்கள் ஊரை சார்ந்த பலரிடமும் கூறி புலம்பி இருக்கிறார். இந்நிலையில் அவர் அவமானம் தாங்க முடியாமல் கடந்த 15 தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
* ஏமாந்தது எவ்வளவு பேர் ஆன்லைனில் குவியும் புகார்
‘கல்யாண ராணி’ சத்யாவின் பேச்சால் மயங்கிய திருமணம் ஆன, ஆகாத உயர் பதவியில் உள்ள மற்றும் சில தொழிலதிபர்கள் சுமார் 50 பேர் ஏராளமான நகை, பணத்தை இழந்து ஏமாற்றம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்யாவால் ஏமாற்றப்பட்ட விதம் குறித்தும், அவரிடம் தாங்கள் கொடுத்த ரொக்கப்பணம், தங்க நகை உள்ளிட்டவைகளை மீட்டு தருமாறும் கூறி மாவட்ட காவல் துறை அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் 20க்கும் மேற்பட்டோர் புகார் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
* வீடியோ எடுத்து மிரட்டல்
சத்யாவிடம் சிக்கிக் கொள்ளும் ஆண்களை குறிப்பிட்ட ஒரு ஓட்டலில் ரூம் போடச்செய்து, அந்த அறையில் தங்கி உல்லாசமாக இருப்பார்களாம். உல்லாச காட்சியை அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்து அதை சத்யாவுடன் இருந்த நபருக்கு அனுப்பப்படுமாம். இதைப்பார்த்து பயந்து வரும் ஆண்கள் மற்றும் தொழிலதிபர்களை பிளாக்மெயில் செய்து லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும் என மிரட்டியும் சத்யா பணம் பறித்துள்ளாராம். அந்த பணத்தை கொடுத்தாலும் அடுத்த 2 மாதங்களில் எனக்கு ரூ.10 ஆயிரம் தேவைப்படுகிறது. உடனே அனுப்பி வை என சத்யா மிரட்டுவாராம். இப்படி இவரிடம் ஏமாந்த பலர் வீடியோ, போட்டோ வெளியானால் குடும்பத்தில் பிரச்னை வரும் என பயந்து வெளியே சொல்லாமல் உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
* நான் இதற்கு முன்பு 15 பேருக்கு மேல் ஏமாற்றி திருமணம் செய்து இருக்கிறேன். 2012ல் நான் மைனர் ஆக இருக்கும்போதே பதிவு திருமணம் செய்திருக்கிறேன். உன்னையும் அப்படித்தான் ஏமாற்றி திருமணம் செய்து உள்ளேன். உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது
* 4 பிரிவில் வழக்கு
சத்யா மீது கொலை முயற்சி, ஏமாற்றி பணம் பறித்தல், திருமணம் ஆனதை மறைத்து பல திருமணங்களை செய்தல், ஆபாசமான வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post எஸ்ஐ உள்பட பல ஆண்களை மயக்கி வலையில் வீழ்த்திய 40 வயது கல்யாண ராணி அதிரடி கைது ஏமாந்த வாலிபரின் தாத்தா தற்கொலை: தலைமறைவான பெண் புரோக்கருக்கு வலை appeared first on Dinakaran.