×

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆந்திர முதல்வரின் தங்கை ஷர்மிளா மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம்: கட்சி மேலிடம் அறிவிப்பு

திருமலை: ஆந்திராவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளாவை மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலும் இந்தாண்டு நடைபெற உள்ளது. இரண்டு தேர்தல்களும் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகளும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கர்நாடகா, தெலங்கானா தேர்தல் வெற்றியை போன்று தனது கட்சி பலத்தை கொண்டு பழையபடி காங்கிரஸ் ஆட்சியை ஆந்திராவில் கொண்டு வர காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதற்கு ஆந்திர அரசியலில் அண்ணன் ஜெகன் மோகன் ஆட்சியை அவரது தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளாவை பயன்படுத்தி வீழ்த்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ரராஜு நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பினார். இதனையடுத்து ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஷர்மிளாவை நேற்று நியமித்து அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மீதான அனுதாபம் மற்றும் அவருக்கு உண்டான ஆதரவு வாக்குகள் ஷர்மிளா மூலம் காங்கிரஸ் கட்சிக்கு வரும் என்று, அவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநில பிரிவினையால் ஜெகன்மோகன் கட்சியில் இணைந்து தற்போது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மூத்த நிர்வாகிகளாக உள்ளவர்களை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்க பேச்சுவார்த்தை தொடங்க உள்ளனர். ஏற்கனவே சிலர் காங்கிரஸ் உடன் தொடர்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆந்திர முதல்வரின் தங்கை ஷர்மிளா மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம்: கட்சி மேலிடம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra ,CM ,Sharmila ,Congress ,Tirumala ,Andhra Pradesh ,Chief Minister ,Jaganmohan ,YS ,Lok Sabha elections ,Andhra Pradesh Assembly ,Andhra CM ,state ,Dinakaran ,
× RELATED அண்ணன் ஜெகனின் ஆட்சியை கவிழ்த்த தங்கை: சர்மிளாவும் தோல்வி