×

ஷிண்டே அணி தான் சிவசேனா என்ற சபாநாயகரின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தரப்பு வழக்கு: எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சட்டத்தீர்வு காண அடுத்த கட்ட நடவடிக்கை

மும்பை: சிவசேனா ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என தீர்ப்பளித்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் ராகுல் நர்வேகரின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் அணி நேற்று மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, உத்தவ் அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே அந்த ஆண்டு ஜூன் மாதம் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் வெளியேறினார். இதனால் பெரும்பான்மை இழந்து உத்தவ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகியுள்ளார்.

பின்னர் , ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இதற்கிடையே, இரு தரப்பிலும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இதனை மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் ராகுல் நர்வேகர் விசாரணை நடத்தி கடந்த 10ம் தேதி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா எனவும், அவரது அணி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், உத்தவ் அணி எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என அறிவித்தார்.

அவர் தனது தீர்ப்பில், கட்சியின் இரு பிரிவுகளிடையே, கட்சி விதிகள் குறித்து ஒருமித்த கருத்து காணப்படவில்லை. தலைமை குறித்து இரண்டுமே மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன. எனவே, சட்டப்பேரவை கட்சியில் பெரும்பான்மையை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இரு பிரிவுகளிடையே சர்ச்சை ஏற்படுவதற்கு முன்பு இருந்த கட்சி விதிகளை கொண்டு தீர்மானிக்க வேண்டும். சிவசேனா கட்சி தொடங்கப்பட்ட 1999ம் ஆண்டில் அக்கட்சி சமர்ப்பித்த கட்சி விதிகளை செல்லத்தக்க ஒன்றாக நான் நம்புகிறேன். அதுதான், கட்சியின் எந்தப் பிரிவு உண்மையான அரசியல் கட்சி என்பதை தீர்மானிக்க வகை செய்யும்.

1999ம் ஆண்டின் சிவசேனா தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த கட்சி விதிகளைத்தான், ஷிண்டே பிரிவு கட்சி விதியாகக் கொண்டுள்ளது. எனவே, 2018ம் ஆண்டின் அரசியலமைப்பை செல்லுபடியாகும் என்று அறிவிக்க வேண்டும் என்ற உத்தவ் தரப்பினரின் வாதத்தை ஏற்க முடியாது. கட்சிக்குள் கருத்து வேறுபாடு அல்லது ஒழுக்கமின்மைக்கு அரசியலமைப்பின் 10வது பிரிவை எந்த கட்சி தலைமையும் பயன்படுத்த முடியாது. சிவசேனா உடைந்து, உத்தவ் சிவசேனாவின் கொறடா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா) சுனில் பிரபு, 2022 ஜூன் 21ம் தேதி பதவி விலகினார். ஷிண்டே குழுவைச் சேர்ந்த பரத் கோகவாலே அங்கீகரிக்கப்பட்ட கொறடாவானார்.

இது 2022 ஜூன் 22ம் தேதி சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 2018 பிப்ரவரி 27ம் தேதியிட்ட கடிதத்தில், கட்சித் தலைமையை வைத்தே உண்மையான கட்சியாக கணக்கில் எடுக்க வேண்டும் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என நான் கருதுகிறேன். 1999ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட கட்சி விதிகள், இரண்டு பிரிவுகள் ஏற்படுவதற்கு முன்பாகவே சிவசேனாவால் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாகும். இதன்படி, யாரையும் கட்சியில் இருந்து நீக்க சிவசேனா தலைவருக்கு அதிகாரம் கிடையாது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனாவாகும் என அறிவித்தார்.

மேலும், சட்டப்பேரவையில் ஷிண்டே அணிக்கு சிவசேனாவின் 55 எம்.எல்.ஏ.க்களில் 37 பேர் என்ற பெரும்பான்மை ஆதரவு உள்ளது. எனவே, கட்சி பிளவுபட்டபோதே முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா கட்சி. இதன்படி சுனில் பிரபு கொறடாவாகவும், பாரத் கோகவாலே தலைமை கொறடாவாகவும் நியமிக்கப்பட்டது செல்லுபடியாகும். 2022 ஜூன் 21ம் தேதி கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற உத்தவ் தரப்பினரின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஷிண்டே அணி எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.

இதுபோல் உத்தவ் அணி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்யவில்லை. ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என தீர்ப்பில் கூறினார். இந்த தீர்ப்பு ஜனநாயகப் படுகொலை என விமர்சித்த உத்தவ் தாக்கரே, இது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக கூறினார். இந்நிலையில், ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என அறிவித்த சபாநாயகரின் தீர்ப்பை எதிர்த்து உத்தவ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்துள்ளனர். தேர்தலுக்குள் இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக உத்தவ் அணி தலைவர்கள் தெரிவித்தனர்.

The post ஷிண்டே அணி தான் சிவசேனா என்ற சபாநாயகரின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தரப்பு வழக்கு: எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சட்டத்தீர்வு காண அடுத்த கட்ட நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Shinde ,Uthav ,Supreme Court ,Speaker ,Sivasena ,Mumbai ,Uthav Yami ,Maharashtra ,Legislative ,Assembly ,Rahul Narvekar ,Uddhav Thackeray ,Dinakaran ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...