×

ஒடுக்கத்தூர் அருகே மினி வேனில் பிளாஸ்டிக் குப்பையில் பதுக்கிய ரூ.2 கோடி மதிப்பு சந்தன கட்டைகள் பறிமுதல்: மதுவிலக்கு போலீசார் அதிரடி

 

ஒடுகத்தூர், ஜன.14: ஒடுகத்தூர் அருகே மினி வேனில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு நடுவே பதுக்கி கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான சந்தன கட்டைகளை மதுவிலக்கு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிந்து 2 மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காடுகளும், மலைகளும் அமைந்துள்ளது.

இந்த காடுகள் ஏராளமான வனவிலங்குகளுக்கு வசிப்பிடமாக இருந்து வருகிறது. அதேபோல், இங்கு சந்தன மரங்கள், செம்மரங்கள், தேக்கு மற்றும் அரியவகை மூலிகை செடிகளும், தாவரங்களும் உள்ளது. அதோடு மட்டுமின்றி வனத்துறை சார்பில் ஆங்காங்கே சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு அதனை பராமரித்து வருகின்றனர்.

அவ்வாறு பராமரிக்கப்படும் சந்தன மரங்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் வெட்டி கடத்தி செல்வதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதைதடுக்க வனத்துறையினர் மற்றும் மதுவிலக்கு போலீசார் இணைந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், மரங்கள் கடத்தப்படுவது, சாராயம் காய்ச்சுவது தொடர் கதையாகி விட்டது.

இந்நிலையில், வேலூர் மதுவிலக்கு எஸ்ஐ மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒடுகத்தூர் அருகே உள்ள மலை பகுதிகளில் சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பீஞ்சமந்தையில் இருந்து முத்துகுமரன் மலை வழியாக ஆந்திரா மாநிலம் பதிவு எண் கொண்ட மினி வேன் ஒன்று வேகமாக வந்தது. இதனால், சந்தேகமடைந்த போலீசார் மினி வேனை மடக்கி பிடிக்க முயன்றனர்.

ஆனால், போலீசாரை பார்த்தும் வேனை ஓட்டி வந்தவர்கள் நிற்காமல் சென்றனர். பின்னர், போலீசார் வேனை சிறிது தூரம் துரத்தி சென்றனர். போலீசார் விரட்டி வருவதை பார்த்த மர்ம நபர்கள் 2 பேரும், வேனை பாதி வழியிலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர், நிறுத்தப்பட்ட வேனை சோதனை செய்த போலீசார் அதில் காலி தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய குப்பைகளுக்கு நடுவே 2, 3, 4 அடி நீளம் உள்ள சுமார் ஒன்றரை டன் எடையுள்ள சந்தன கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி வரை இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

பின்னர், கடத்தப்பட்ட சந்தன கட்டைகளை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வனத்துறையினர் மினி வேனுடன் சந்தன கட்டைகளை கைப்பற்றி ஒடுகத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

தற்போது, வேனில் கடத்தப்பட்ட சந்தன மரங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேலரசம்பட்டு பகுதியில் வெட்டி கடத்தி சென்ற கட்டைகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிந்து மினி வேனில் சந்தன மரங்களை வெட்டி கடத்தியது யார்? எங்கிருந்து எங்கு கடத்தி செல்ல முயன்றார்கள்? தப்பியோடிய மர்ம நபர்கள் யார்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே அதிகாலையில் மினி வேனில் ரூ.2 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை மர்ம நபர்கள் கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஒடுக்கத்தூர் அருகே மினி வேனில் பிளாஸ்டிக் குப்பையில் பதுக்கிய ரூ.2 கோடி மதிப்பு சந்தன கட்டைகள் பறிமுதல்: மதுவிலக்கு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Sandalwood ,Odukathur ,Odugathur ,Dinakaran ,
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...