×

பொங்கல் நாளில் களை கட்டும் கோயில்கள்..!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ தொலைவில் திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் திருமாகாளம். மகாகாளநாதர் கோயில். அமைந்துள்ளது இங்குள்ள இறைவன் மகாகாளநாதர் என்றும், இறைவி அட்சயாம்பிகை மற்றும் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலேயே சோமயாகம் நடத்த சிறந்த கோயில் என்று புகழ் பெற்றது. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மாகாள வாவி என்ற தீர்த்தத்தில் நீராடி, குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும் முருகப்பெருமானையும் வழிபட்டால் விரைவில் மக்கட்பேறு பெறலாம் என்பதும் காலம், காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

அதிலும் தை பொங்கலன்று இதைச் செய்வது விசேஷம். எனவே தை முதல் நாளில் குழந்தை பேறு வேண்டி இங்குள்ள அம்ச தீர்த்தத்தில் நீராடி மகா காளநாதரையும் அக்கோயிலில் குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும், முருகனையும் வழிபட. குழந்தை பேறு வேண்டி இங்கு வருவோர் ஏராளம். திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது வைகுண்டம் கள்ள பிரான் பெருமாள் கோயில். தை முதல் நாளில் இங்கு கள்ளபிரானுக்கு 108 போர்வைகளை அணிவித்து பூஜிப்பர்.

பிறகு அவர் கோயில் கொடி மரத்தைச் சுற்றி வருவார். அதன் பிறகு ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தை கலைப்பார்கள். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும் இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கும். ஆனால் மைசூர் அருகிலுள்ள ரங்கப்பட்டணத்தில் உள்ள ரங்கநாத பெருமாள் கோயிலில். பொங்களன்று பெருமாள் மாலையில் சொர்க்க வாசல் கடக்கிறார். சூரியன் உத்தராயண புண்ணிய கால பயணத்தை துவக்கும் நாள் என்பதால் இப்படி. வருடத்தில் இன்று ஒரு நாள் மட்டும் மூலவர் ரங்கநாதர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் காட்சி தருவார். மறுநாள் தேரில் பவனி வருகிறார்.

நரசிம்மர் 16 திருக் கரங்களுடன் இரணியன் சம்ஹாரம் செய்த நிலையில் உக்கிரமாக அருள்பாலிக்கும் ஒரே கோயில். கடலூர் மாவட்டம் சிங்கிலிகுடி நரசிம்மர் கோயில் தான். இங்கு யோக நரசிம்மர், பால நரசிம்மர், 16 கை நரசிம்மர் என மூன்று நரசிம்மர்கள் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிப்பது அபூர்வமானது. இங்கு மாட்டு பொங்கலன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கின்றது. வருடந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகிலுள்ள வேந்தன் பட்டி நெய் நந்தீஸ்வரர் ஆலயத்தில் நந்தி விழா விமரிசையாக நடைபெறும். அன்று 21 வகை மலர் மாலை களால் நந்தி தேவரை அலங்கரித்து தீப ஆராதனை காட்டி வழிபடுவர். இவரின் மீது பூசப்படும் நெய்யை ஈக்கள், எறும்புகள், பூச்சிகளோ மொய்ப்பதில்லை என்பது தனிச்சிறப்பு.

தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்துள்ளது பங்காரு காமாட்சியம்மன் கோவில். பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனான பிரதாப சிம்மன் இக்கோயிலை கட்டினார். கோயிலின் மூலவராக பங்காரு காமாட்சியம்மன் உள்ளார். தெலுங்கு மொழியில் பங்காரு என்றால், தங்கம் என்று பொருள். கருவறையில் பங்காரு காமாட்சியம்மன், தங்கத்தாலான திருமேனி உடையவளாய், வலது கரம் கிளியை ஏந்தியும், இடது கரம் நளினமாக வளைந்து கீழே தொங்க விடப்பட்டும், மூன்று வளைவுகளோடு வில்போன்ற ஒயிலோடு நின்ற கோலத்தில் அருள்பாலிக் கிறாள். அம்மனின் திருமுகத்தில், எப்போதும் புனுகு காப்பு சாத்தப்பட்டு இருப்பதால், கருமை நிறத்துடன் காட்சி அளிப்பாள்.

கருவறையின் வெளிப்புறத்தில் இடப்புறத்தில் உற்சவர் காமகோடியம்மன் சந்நதி உள்ளது. மூலவர் பங்காரு காமாட்சி அம்மனுக்கு வருடத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்கள், காமாட்சியின் ஜென்ம நட்சத்திரமான ஐப்பசி பூரம், பங்குனி உத்திரம் ஆகிய 11 நாட்கள் மட்டும் தான், அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் உற்சவருக்குத்தான் அபிஷேகம் நடைபெறுகிறது. உற்சவ மூர்த்தி காமகோடி அம்மனுக்கு கனுப் பொங்கல் அன்று முழுத் தேங்காயை உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டுமே நடக்கின்றது.

கோயம்புத்தூரிலிருந்து சிறுவாணி செல்லும் வழியில் உள்ளது. சுண்டக்காமுத்தூர் இங்கே உள்ளது பிரசித்தி பெற்ற செல்லாண்டு அம்மன் கோயில். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அந்த வருடம் என்ன பயிரிட வேண்டும் என்று தனித்தனி சீட்டுகளில் எழுதி அம்மன் முன் போட்டு அதில் ஒன்றை எடுத்து பார்த்து அதையே பயிரிடுகிறார்கள் இப்படி செய்வதால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அப்படி விளைந்த தானியத்தை பொங்கல் பண்டிகை அன்று அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் சேவுகம்பட்டி எனும் ஊரில் 300ஆண்டுகள் பழமையான சோலை அழகர் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் மறுநாள் நடக்கும் திருவிழாவில் பக்தர்கள் பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக லட்சம் வாழைப்பழங்களை வைத்து வழிபடுகிறார்கள். வழிபாடு முடிந்ததும் அந்த வாழைப்பழங்களை சூறை விட்டு விடுவார்கள். பக்தர்கள் அதைப்பிடித்து சாப்பிடுவார்கள் அப்படி செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

தொகுப்பு: கோவீ. ராஜேந்திரன்

The post பொங்கல் நாளில் களை கட்டும் கோயில்கள்..! appeared first on Dinakaran.

Tags : Pongal day ,Kunkum Anmikam ,Tiruvarur District ,Tirumakalam ,Poontotam ,Tiruvarur-Mayiladuthurai ,Mahakalanath ,Mahakalanathar ,Atsayambikai ,Raja Matangi ,Somayagam ,India ,
× RELATED சகலமும் தரும் லலிதா சகஸ்ரநாமம்