×

இந்த வார விசேஷங்கள்

திருவோண விரதம்
13.1.2024 – சனி

அஸ்வினி தொடங்கி ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால், இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே நட்சத்திரப் பெயருடன் ‘திரு’ எனும் அடைமொழியும் சேர்த்து சொல்லப்படுகிறது. அதிலொன்று… திருவாதிரை. இது, சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம். இன்னொன்று… திருவோணம். இது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம். பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைப்பிடிக்கலாம். திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள், முதல் நாள் இரவே உணவு உண்ணக்கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயம் சென்று துளசிமாலை சாத்தி தரிசித்து வரவேண்டும்.

காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் மிகுந்த பலன்களைக் கொடுக்கும். திருவோண விரதம் இருந்தால், சந்திரதோஷம் முதலான தோஷங்களில் இருந்து விடுபடலாம். மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு கற்கண்டு நிவேதனம் செய்து பிரார்த்திக்கலாம். இரவில், பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். அன்று சேவிக்க வேண்டிய பாசுரம்.

`தருதுயரம் தடாயேலுன்சரணல்லால்
சரணில்லை,
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ்விற்றுவக்கோட் டம்மானே,
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும், மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே’.

போகிப் பண்டிகை
14.1.2024 – ஞாயிறு

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் தட்சிணாயன காலத்தின் நிறைவு நாள் கொண்டாடப்படும் பண்டிகை, போகிப் பண்டிகை. “போகி” என்பது இந்திரனின் பெயர். மார்கழி மாதம் முழுக்க ஆண்டாள், மார்கழி நோன்பு நோற்றாள். மார்கழி நோன்பின் காரணம், கண்ணனை அடைய வேண்டும், கண்ணனை தரிசிக்க வேண்டும் என்பது. இறைவனாகிய கண்ணனைச் சந்திப்பதற்காக பாடிய தமிழ் “திருப்பாவை” என்பதால், இதனை சங்கத்தமிழ் என்று சொல்வார்கள்.

மார்கழி மாதத்தின் நிறைவு நாளான போகிப் பண்டிகை அன்று கண்ணன் ஆண்டாளுக்கு காட்சியளித்தான். ஆண்டாள் விரும்பிய வண்ணம் அவளைத் திருமணம் செய்து கொண்டான். எனவே, ஆண்டாள் திருக்கல்யாண நாளாக போகிப் பண்டிகை இப்பொழுதும் பல வைணவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. ஆண்டின் கடைசிநாள் என்பதால், நடந்து முடிந்த நல்நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்கள் (எண்ணங்கள்) அப்புறப்படுத்தப்பட்டு, வீடு சுத்தமாக்கப்படும். பழந்துயரங்களை அழித்துப் போக்கும் பண்டிகை போகிப்பண்டிகை. ‘‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’’ என்பதற்கேற்ப பழைய பொருள்களை எல்லாம் தீயிலிட்டு பொசுக்க வேண்டும். தீயில் போட்டால் எதுவும் மிச்சமிருக்காது அல்லவா. (அன்று டயர்கள் போன்றவற்றை எரித்து சுற்றுச் சூழலை மாசு படுத்தக்கூடாது.) பொருள்கள் என்பது தீய எண்ணங்களையும், நடந்து போன துயரமான நினவுகளையும் சேர்த்துதான்.

உறவுகள் மனக்கசப்பு நீங்கி ஒன்றாக வேண்டும். போக்கி என்ற சொல்லே நாளடைவில் மருவி `போகி’ என்றாகிவிட்டது. போகிப் பண்டிகை அன்று அதிகாலை நீராடி பல்வேறு காய்கறிகள் சமைக்கப்பட்ட உணவை பகவானுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். போகி அன்று, வைகறையில் `நிலைப்பொங்கல்’ வைக்கப்படும். வீட்டின் முன் வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச்செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்குவர். அன்று போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும். பிறகு அனைவரும் உண்டுகளிக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகை
15.1.2024 – திங்கள்

“பொங்கலோ.. பொங்கல்’’ என்ற உற்சாகத்துடன் கொண்டாடப்படும் திருநாள் தைத் திங்கள், பொங்கல் திருநாள். நம் நாடு விவசாய நாடு. மண்ணையும், மழையையும், சூரியனையும், மாடுகளையும் நம்பி உள்ளவர்கள் நாம். எனவேதான் மற்ற பண்டிகைகளைவிட பொங்கல் பண்டிகையை மிக உற்சாகமாகவும், ஆத்மார்த்தமாகவும் கொண்டாடுகிறோம். பொங்கல் பண்டிகை அன்று, அறுத்த நெற்கதிர்களை வீட்டுக்கு எடுத்து வருவர்.

அக்கதிர்களை பகவானுக்குப் படைத்து, வீட்டின் வாயில் நிலைப்படியில் மேல், பசுஞ்சாணம் கொண்டு ஒட்டிவைப்பர். அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, பூஜை செய்வர். அதைப் போலவே, அதை அழகான வளையமாகக் கட்டி, தூக்குக் கூடு போல வீட்டில் தொங்க விடுவதும் உண்டு. இன்றும் கிராமத்து பழைய வீடுகளில் மரத்தூண்களின் மேல் நெல் மணிக்கதிர்களால் கட்டப்பட்ட பிரிமணை வளையங்களை பார்க்கலாம். அதிலே இருக்கிற தானியங்களை பறவைகள் சிட்டுக் குருவிகள் வந்து உண்டு மகிழும். அந்தப் பறவைகள் சத்தம் வீடுகளில் கேட்கும் பொழுது மங்களங்கள் பெருகும்.

உத்தராயண புண்ணிய காலமான தைப் பொங்கல் அன்று பாலில் புத்தரிசி பொங்கல் போட்டு சூரிய பகவானுக்குரிய சுலோகங்களை சொல்லி தூபதீபம் காட்டி வழிபட வேண்டும். இதன் மூலமாக நல்ல உடல் வலிமையும் நீண்ட ஆயுளும் மனஅமையும் கிடைக்கும். பொங்கலன்று, அதிகாலை எழுந்து, வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் புதுப்பானையில் புது அரிசியிட்டு, முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர்.

புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பால் பொங்கும் போது மணியோசை எழுப்பி பொங்கலோ… பொங்கல் என்று உரக்க எல்லோரும் சேர்ந்து உற்சாகத்தோடு சொல்ல வேண்டும். பெண்கள் குலவை இடுவதும் உண்டு.

மதுரையில் கல்யானைக்கு கரும்பு அளித்த லீலை
15.1.2024 – திங்கள்

இறைவன் அபிஷேகப் பாண்டியனுக்கு முக்தி அளிக்க எண்ணி, மதுரைக்கு, எல்லாம் வல்ல சித்தராக உருமாறி வந்தார். அரசன், சித்தரைக் காணச் சென்றான். அரசன் சித்தரிடம், ‘‘தங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டான். அதற்குச் சித்தர், தான் காசியிலிருந்து வருவதாகவும், தனக்கு ஒன்றும் தேவையில்லை என்றும், வேண்டுமானால் அரசன் வேண்டுவதைக் கேட்டுப் பெறலாம் என்றும் கூறினார். அரசன், சித்தரைச் சோதிக்க அருகில் கரும்பு வைத்திருந்த ஒருவரிடம் வாங்கி, இக்கரும்பினை இந்திர விமானத்தைத் தாங்கும் கல் யானை உண்ணும்படி செய்ய வேண்டும் என்றார்.

அதனை ஏற்ற சித்தர், கல் யானையைப் பார்க்க, அக்கல் யானைக்கு உயிர்வந்து, மன்னன் தந்த கரும்பினைத் தின்றது. அத்துடன் மன்னன் அணிந்திருந்த முத்துமாலையை பிடுங்கி உண்டது. இதனால் அரசன் கோபம் கொள்ள, சித்தரைக் காவலர்கள் தாக்க வந்தார்கள். சித்தர், காவலர்களைப் பார்க்க அனைவரும் சிலையாக நின்றனர். அரசன், சித்தரிடம் மன்னிப்புக் கேட்டு, தனக்குப் பிள்ளை வரம் வேண்டினான். அதைத் தந்த சித்தர், மறைந்தார். அபிஷேகப் பாண்டியனுக்கு, விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து, பல கலை கற்றுச் சிறந்து விளங்கினான். அபிஷேகப் பாண்டியன் மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்து, முக்தி அடைந்தான். அந்த லீலை இன்று.

மாட்டுப் பொங்கல்
16.1.2024 – செவ்வாய்

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு (பசு – மாடுகள்) நன்றி கூறும் நாளே மாட்டுப் பொங்கல் நாளாகும். மாட்டுப்பொங்கல் அன்று `கோ பூஜை’ செய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில், பொங்கலிட்ட பிறகு, எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு உண்டு. மாட்டுப்பொங்கல், பட்டிப் பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் சொல்வதுண்டு. மாடுகள் மற்றும் கன்றுகளின் தொழுவம் சுத்தம் செய்யப்பட்டு, மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளில் வண்ணம் பூசி அலங்கரித்து, சலங்கை கட்டி விடுவார்கள். மேலும், அவற்றுக்கு புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக் கயிறு உள்ளிட்டவற்றையும் அணிவித்து மாடுகளையும், கருவிகளையும் வழிபடுவார்கள். ‘‘பட்டி பெருக! பால்பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!’’ என்று கூறி மாடு, பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

காணும் பொங்கல்
17.1.2024 – புதன்

உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து, தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்ளும் நாள் இது. இது பொங்கல்கொண்டாட்டங்களில் நான்காம் நாள் விழா. காணும்
பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், உறியடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீரசாகசப் போட்டிகள் உட்பட பலவும் இடம்பெறும் விழா. பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது, அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி, அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து, ஆசிபெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்திலும் முகத்திலும் பூசிக்கொள்வார்கள்.

கணுப்பிடி இந்நாளின் சிறப்பு. இது ஒருவகை நோன்பு. உடன் பிறந்த சகோதரர்களுக்காக, பெண்கள் செய்யும் நோன்பு. காணும் பொங்கல் அன்று காக்கைக்கு அன்னமிட வேண்டும். இப்படிச் செய்தால், அந்த வருடம் முழுவதும் வளமோடு வாழலாம்.

கலிக்கம்பர் குருபூஜை
17.1.2024 – புதன்

கலிக்கம்ப நாயனார் திருப்பெண்ணாகடம் (பெண்ணாடம்) என்ற ஊரிலே வாழ்ந்து வந்தவர். அங்கே இருக்கும் சிவன் கோயிலில் (தூங்கனை மாடத் திருக்கோயில்) எழுந்தருளிய சிவக்கொழுந்து நாதருக்கு பல தொண்டுகளை ஆற்றியவர். மிகப் பெரிய வணிகர். எப்பொழுது அவருடைய வீட்டிற்கு சிவனடியார்கள் வந்தாலும் அவர்களுக்கு திருப்பாதம் விளக்கி, திருவமுது ஊட்டி, அவர்கள் மகிழும்படியாக நடந்து கொண்டு, அவர் களிடத்திலே ஆசி பெறுபவர். ஒருநாள் அவர் இல்லம் நோக்கி ஒரு சிவனடியார் வருகின்றார்.

அந்த சிவனடியாரைப் பார்த்தவுடன் அவர் ஏற்கனவே இவரிடத்திலே வேலை செய்தவர் என்பதும், வேலையை விட்டு நீங்கி இப்பொழுது சிவனடியார் வேடம் கொண்டு வந்திருப்பதாகவும் பலரும் சொல்ல, அதை பொருட்படுத்தாத நாயனார், சிவனடியார் என்றால் சிவனடியார்தான்; அவருக்குத் தொண்டு செய்ய வேண்டியது நமது கடமை என்று சொல்லி, அவருக்கு நீர் வார்த்து திருப்பாதம் விளக்குவதற்கு முற்படுகின்றார். ஆயினும் அவருடைய மனைவிக்கு தயக்கம். ஒரு காலத்தில் இவர் நம் வீட்டில் வேலை செய்து, வேலையை விட்டுச் சென்றவர் தானே என்கின்ற எண்ணம். அம்மையார் மனதில் எழ, அவருடைய தயக்கத்தையும் அவர் திருவடி விளக்காமல் இருப்பதையும் கண்ட கலிக்கம்ப நாயனார், அவருக்கு தண்டனை தருகின்றார்.

`கடவுளருட் கண்ணார்கள் பயிலுந் தொல்லைக்
கடந்தைநகர் வணிகர்கலிக் கம்ப ரன்பர்க்
கடிமையுற வமுதளிபா ரடியா னீங்கி
யருளுருவா யன்பருட னணைய வேத்தி
யிடையிலவ ரடியிணையும் விளக்கா நிற்ப
விகழ்மனைவி கரகமலி யிரண்டு கையும்
படியில்விழ வெறிந்தவள்செய் பணியுந் தாமே
பரிந்து புரித் தரனருளே பற்றி னாரே’

– என்பது இந்த நிகழ்ச்சியை விளக்கும் பாட்டு.

எந்தவித சலனமும் இல்லாமல் அந்த சிவனடியாருடைய திருப்பாதத்தை விளக்கி அவருக்கு திருவமுது ஊட்டுகின்றார். சிவத்தொண்டு செய்யும் பொழுது எத்தனை குறுக்கீடுகள் வந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத வைராக்கிய மனம் அவருக்கு. சிவனுடைய பேரருளைப் பெற்றுத் தந்து, நாயனார் என்கிற உயரத்துக்கு உயர்த்தியது. அவருடைய குருபூஜை தினம் இன்று.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Shani Ashwini ,Revathi ,Tiruvadhirai ,Lord Shiva ,
× RELATED வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார்;...