×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் 50,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் 50,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பொங்கல் திருநாளை முன்னிட்டு கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோயில் மற்றும் சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் 50,000 காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட, மாநகர காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் கோவில் திருவிழாக்களின் போதும், காணும் பொங்கல் அன்றும் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர்நிலைகளில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய போதிய அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

மேலும் டிஜிபி சங்கர் ஜிவால் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பொங்கல் விழாக்கள் சிறப்பாக நடைபெற பாதுகாப்பு பணியில் உள்ள காவல்து றையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் 50,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Pongal festival ,DGP ,Shankar Jiwal ,Chennai ,
× RELATED பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள்...