×

பொங்கல் பண்டிகையால் களைகட்டியது அய்யலூர் வாரசந்தை ரூ.3 கோடிக்கு ஆடுகள் ஒரே நாளில் விற்பனை

*விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

வேடசந்தூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அய்யலூரில் நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அய்யலூரில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடுகள், கோழிகள் விற்பனை நடக்கும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆடு, கோழிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். மதுரை, திருச்சி, கரூர், திண்டுக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து ஆடு, கோழிகளை வாங்கிச் செல்வர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று நடந்த ஆட்டுச்சந்தை களைகட்டியது. அதிகாலை 2 மணி முதலே ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் சந்தையில் குவிந்தனர். சந்தை வழக்கமாக காலை 8 மணி வரை நடைபெறும். ஆனால், நேற்று காலை 10 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. செம்மறி, வெள்ளாடுகள் மற்றும் கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடு, கோழிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

சண்டைக்கு பயன்படும் சேவல்களை மோத விட்டு பார்த்து இளைஞர்கள் வாங்கிச் சென்றனர்.ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.450 முதல் ரூ.500 வரையிலும், சண்டை சேவல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரையிலும், 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு ரூ.7,000 முதல் ரூ.8,000 வரையிலும் விற்பனையாகின. இந்தச் சந்தையில் நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.3 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post பொங்கல் பண்டிகையால் களைகட்டியது அய்யலூர் வாரசந்தை ரூ.3 கோடிக்கு ஆடுகள் ஒரே நாளில் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ayyalur ,Pongal festival ,Vedasandur ,Ayyallur ,Dindigul district ,Pongal ,
× RELATED அய்யலூர் பேரூராட்சியில்...