×

மாமன்ற உறுப்பினர்களுக்கான பள்ளி மேலாண்மைக் குழு பயிலரங்கம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது.!

சென்னை: பள்ளிக் கல்வித்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாமன்ற உறுப்பினர்களுக்கான பள்ளி மேலாண்மைக் குழு பயிலரங்கம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாமன்ற உறுப்பினர்களுக்கான பள்ளி மேலாண்மைக் குழு குறித்த பயிலரங்கத்தினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று (11.01.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்து, மாமன்ற உறுப்பினர்களுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான பயிற்சி கையேட்டினை வெளியிட்டு வழங்கினார்.

இந்த பயிலரங்கத்தில், குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 – உரிமையும் பொறுப்பும், பள்ளி மேலாண்மைக் குழு அறிமுகம், பள்ளி மேம்பாட்டுத் திட்டமும், பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் பங்கும் என்கிற தலைப்பில் மாமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009, அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி பெறும் உரிமையினை உத்தரவாதப்படுத்தியுள்ளது. குழந்தைகள் தரமான கல்வி பெறும் வகையில் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், குழந்தைகளுக்கு உகந்த, பாதுகாப்பான பள்ளிச் சூழலை உருவாக்குதல், பள்ளி இடைநிற்றலை தடுத்தல், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிந்த பிரிவு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல் போன்ற பணிகளை அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும் என இச்சட்டம் வலியுறுத்துகிறது.

இச்சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் 20 உறுப்பினர்களைக் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுவை அமைக்க வேண்டும். இக்குழுவில் பெரும்பான்மையாக அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பள்ளியின் தேவைகளை உள்ளாட்சி அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருவர் இக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இக்குழுவில் இருப்பதால் பள்ளியின் தேவைகள் உரிய முறையில் உள்ளாட்சி நிர்வாகத்தின் (பெருநகர சென்னை மாநகராட்சி) கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவாக தீர்வு காண்பர்.

எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2003ன்படி குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல், பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் பள்ளி வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவதில் மாநகர/நகர்ப்புற/ஊரக உள்ளாட்சித் துறை பிரதிநிதிகளுக்கு அவர்தம் பொறுப்புகளையும், கடமைகளையும் எடுத்துக் கூறி திறம்படப் பங்காற்றும் வகையில் இப்பயிற்சி ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.

The post மாமன்ற உறுப்பினர்களுக்கான பள்ளி மேலாண்மைக் குழு பயிலரங்கம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது.! appeared first on Dinakaran.

Tags : Mayor ,Priya ,CHENNAI ,School Education Department ,Metropolitan Chennai Corporation ,School Management Committee Workshop for Members of Parliament ,Dinakaran ,
× RELATED ரத்னம் விமர்சனம்