×

அரசுக்கு ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் குடிமக்கள் மனம் வாடக்கூடாது என்பதற்காகவே பொங்கல் பரிசு காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு அதிமுக ஆட்சி ₹5 லட்சம் கோடி கடனாக விட்டு சென்று போனார்கள்

வேலூர், ஜன.11: அரசாங்கத்திற்கு ஆயிரம் கஷ்டத்தில் இருந்தாலும் குடிமக்கள் மனம் வாடக்கூடாது என்பதற்காகவே இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
பொங்கல் பண்டிகையொட்டி வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 311 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ₹1000 ரொக்கப்பணம் இலவச வேட்டி, சேலை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 39 சுய உதவிக் குழுக்களில் உள்ள 514 பயனாளிகளுக்கு ₹3.37 கோடி கடன் உதவித்தொகை வழங்கும் விழா காட்பாடியில் நேற்று நடந்தது.

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், அமலு விஜயன், மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, துணை மேயர் சுனில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண ஐயப்பதுரை வரவேற்றார். இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹1000 ரொக்க தொகை மற்றும் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலத்தில் எது எது சொன்னோமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளோம். சொல்லாததையும் செய்துள்ளோம். மகளிருக்கு அரசு பஸ்சில் இலவச பயணம், மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம், அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றி உள்ளோம்.

1923 ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது மாநகராட்சி பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதன் பின்னர் நிறுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு முட்டையுடன் கூடிய சத்துணவு திட்டத்தை வழங்கினார். முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கினார். பல வீடுகளில் காலையில் உணவில்லாமல் மாணவர்கள் அவதிப்படுவோர் கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். பிள்ளைகளுக்கு காலை சிற்றுண்டி, மதியம் சத்துணவு கொடுக்கிறோம். இனி வருங்காலத்தில் இரவு சப்பாத்தி குருமா போடும் காலம் வரும்.
இப்படிப்பட்ட நேரத்தில் மிக்க மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்களை வழங்கியுள்ளார்.

அரசாங்கம் ஆயிரம் கஷ்டத்தில் இருந்தாலும் குடிமக்கள் மனம் வாடக்கூடாது என்பதற்காக இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியை விட்டு செல்லும்போது ₹5 லட்சம் கோடியை கடனாக விட்டு விட்டு போனார்கள். இயற்கை சில நேரத்தில் வேண்டாததை செய்கிறது. சென்னையில் பெருமழை வெள்ளம். அதற்கு கோடிக்கணக்கான ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. பெருமழை காரணமாக காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 750 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி கரையை காணோம். இவற்றை சீரமைக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. இவர் அவர் பேசினார். விழாவில் மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, ஆர்டிஓ மாலதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, கூட்டுறவு துணைப்பதிவாளர் (பொதுவினியோகம்) சுவாதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசுக்கு ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் குடிமக்கள் மனம் வாடக்கூடாது என்பதற்காகவே பொங்கல் பரிசு காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு அதிமுக ஆட்சி ₹5 லட்சம் கோடி கடனாக விட்டு சென்று போனார்கள் appeared first on Dinakaran.

Tags : Minister ,Durai Murugan ,Pongal ,ceremony ,AIADMK government ,Vellore ,Duraimurugan ,Katpadi ,Pongal festival ,Vellore district ,Pongal gift ceremony ,Dinakaran ,
× RELATED முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுக எம்எல்ஏக்கள்