×

விஜயவாடா வளர்ச்சியை விரும்பாத சந்திரபாபு துரோகி ஆந்திர முதல்வரை சந்தித்த தெலுங்கு தேசம் எம்பி பேட்டி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

திருமலை, ஜன.11: விஜயவாடா வளர்ச்சியை விரும்பாத சந்திரபாபு துரோகி என ஆந்திர முதல்வரை சந்தித்த பிறகு தெலுங்கு தேசம் கட்சி எம்பி கூறினார். மேலும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்களை போட்டியில் இருந்து நீக்கவும், வேறு தொகுதிகளுக்கு மாற்றி வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இதனால் அதிருப்தியடைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 4 பேர் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேச கட்சியில் இணைந்துள்ளனர். மேலும் ஒரு எம்எல்சி ஜனசேனா கட்சியில் இணைந்தார். இந்நிலையில் விஜயவாடா எம்பி கேசினேனி நானியும், அவரது மகளும் விஜயாவாடா 11 வது வார்டு கவுன்சிலருமான ஸ்வேதாவும் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகுவதாக 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். இந்நிலையில் நேற்று முதல்வர் ஜெகன்மோகனை முதல்வர் முகாம் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் வெல்லம்பள்ளி ஸ்ரீனிவாஸ், அயோத்தி ராமிரெட்டி, எம்எல்சி அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேசினேனி நானி கூறியதாவது: 2013ம் ஆண்டு முதல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்து இரண்டு முறை விஜயவாடா எம்.பி.யாக போட்டியிட்டு தொடந்து வெற்றி பெற்றேன். சந்திரபாபுவிடம் விஜயவாடா குண்டூரை வைத்து தலைநகராக நிர்வகித்து கொள்வோம் என கேட்டேன். ஆனால் அவர் கண்களில் தோன்றிய கனவு நகரை உருவாக்க போவதாக முடியாததை செய்வதாக கூறி அமராவதி என்று புதியதாக உருவாக்க நினைத்தார். சந்திரபாபுவுக்கு விஜயவாடா மீது எந்தவித வளர்ச்சியும் பிடிக்கவில்லை. இருப்பினும் விஜயவாடா தொகுதி வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் போராடி ₹100 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தி உள்ளேன்.
தெலுங்கு தேச கட்சிக்காக எனது சொந்த போக்குவரத்து தொழிலை தியாகம் செய்து ₹2000 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்றேன்.

ஆனால் சந்திரபாபு துரோகி என்னுடைய குடும்பத்திலேயே பிரித்து எனக்கு போட்டியாக எனது தம்பிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறுகிறார். இதன் மூலம் சந்திரபாபுவின் துரோக முகம் தெரியவந்தது. விஜயவாடா எம்.பி.யாக இருந்தாலும் பல நிகழ்ச்சிகள் நடந்தாலும் முதல்வர் ஜெகன்மோகனை சந்திக்காமல் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்து வந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழைகளின் அரசனாக ஜெகன்மோகன் அரசு ₹2 லட்சம் கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளனர். ஜெகன் மோகன் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளார். எனவே அவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்ய முடிவு செய்துள்ளேன். விஜயவாடா நாடாளுமன்ற தொகுதியில் தெலுங்கு தேச கட்சியில் 60 சதவீதம் காலியாகி விடும். முதலில் தெலுங்கு தேச கட்சியில் இருந்தும், எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்து லோக்சபா சபாநாயகருக்கு அனுப்புவேன். ஜெகன்மோகன் எவ்வாறு என்னை பயன்படுத்தி கொள்கிறாரோ அதன்படி செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post விஜயவாடா வளர்ச்சியை விரும்பாத சந்திரபாபு துரோகி ஆந்திர முதல்வரை சந்தித்த தெலுங்கு தேசம் எம்பி பேட்டி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Vijayawada ,Andhra Chief Minister ,Telugu Desam ,Patti ,Tirumala ,Telugu Desam Party ,Andhra Pradesh ,Chief Minister ,Jaganmohan ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம்...