×

கலவர சூழலுக்கு மத்தியில் வரும் 14ம் தேதி ராகுல் காந்தி நீதி யாத்திரையை மணிப்பூரில் தொடங்க அனுமதி: கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு

இம்பால்: மணிப்பூரில் கலவர சூழலுக்கு மத்தியில் வரும் 14ம் தேதி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை இம்பாலில் தொடங்க மாநில அரசு அனுமதி தந்துள்ளது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பங்கேற்பாளர்கள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, இந்திய ஒற்றுமை பேரணியை கன்னியாகுமரியில் தொடங்கி 150 நாட்கள், 3,570 கி.மீ. நடத்தி கடந்தாண்டு ஜனவரி 30ம் தேதி காஷ்மீரில் முடித்தார். தற்போது, மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, வரும் 14ம் தேதி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்க உள்ளார். இந்த யாத்திரை 6,713 கி.மீ. தூரம் பேருந்து மற்றும் நடைபயணமாக பயணித்து மார்ச் 20ம் தேதி மும்பையில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த யாத்திரையை மணிப்பூரின் இம்பால் மாவட்டம் ஹப்டா கங்ஜெய்பங் பேலஸ் மைதானத்தில் தொடங்க மாநில அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இனக்கலவரம் நீடித்து வருவதால் பாதுகாப்பை காரணம் காட்டி, யாத்திரைக்கு அனுமதி தராமல் மாநில பாஜ அரசு இழுத்தடித்தது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் காங்கிரஸ் பிரதிநிதிகள், மாநில முதல்வர் பைரன் சிங்கை சந்தித்து வலியுறுத்தினர். இந்நிலையில், ராகுல் யாத்திரைக்கு மணிப்பூர் மாநில பாஜ அரசு அனுமதி மறுத்துவிட்டதாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில்,நேற்றிரவு இம்பால் மாவட்ட கலெக்டர், யாத்திரைக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

கலெக்டர் அலுவலகம் பிறப்பித்த உத்தரவில், ‘எந்தவொரு அசம்பாவித சம்பவமும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுவதை தடுக்க, குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் யாத்திரை தொடக்க நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்படுகிறது. பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர், செல்போன் எண் ஆகிய விவரங்களை முன்கூட்டியே தர வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இம்பாலில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், யாத்திரைக்கு அதிகம் பேர் கூடினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாக மாவட்ட போலீஸ் எஸ்பி அறிக்கை தந்ததன் பேரில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது. யாத்திரைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், விண்ணப்பித்த 8 நாட்களுக்குப் பிறகு மணிப்பூர் அரசு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இடம் மாற்றமா?
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில், ‘‘மாவட்ட நிர்வாக உத்தரவைப் பார்த்தோம். அதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் யாத்திரையின் நோக்கத்திற்கு இடையூறாக இருக்கலாம். எனவே, கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசித்து இறுதி முடிவை எடுப்பார்கள். யாத்திரைக்கு இன்னும் 4 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளன. மேலும் அந்த இடத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஆகவே மணிப்பூர் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பரிசீலிப்பதா அல்லது வேறு இடத்தை தேர்வு செய்வதா என்பது குறித்து விரைவில் முடிவெடுப்போம்’’ என்றார்.

The post கலவர சூழலுக்கு மத்தியில் வரும் 14ம் தேதி ராகுல் காந்தி நீதி யாத்திரையை மணிப்பூரில் தொடங்க அனுமதி: கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Justice ,Manipur ,14th amidst riots ,Imphal ,Indian Unity ,Justice Yatra ,14th amid riots ,Dinakaran ,
× RELATED உங்கள் வாக்கு ஜனநாயகத்தை...