கிறிஸ்தவம் காட்டும் பாதை
கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி என்பது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரியதன்று. அது எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது. கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியைப் பகிர்வதற்கு எல்லைகள், வரம்புகள், நிபந்தனைகள் ஏதுமில்லை. ஏனெனில் கடவுள் நிபந்தனையற்ற மற்றும் அளவிலா அன்பை மக்கள் மீது பொழிகின்றவர். கடவுள் இந்த உலகின் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாகவே இயேசு இந்த உலகில் பிறந்தார்.
இயேசு கிறிஸ்து ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது பிறப்பின் காரணமாக சமூக இழிவைச் சந்தித்தார். அவரது காலத்தில் பாலஸ்தீனம் ரோமகாலனி ஆதிக்கத்தில் இருந்தது. அதன் கீழ் இயங்கிய யூதஅரசர்கள், சுக வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்களோடு சமயத் தலைவர்கள் சேர்ந்துகொண்டு சமூக ஏற்றத்தாழ்வையும், சுரண்டலையும் நியாயப்படுத்திப் பலனடைந்துவந்தனர்.
பெரும்பான்மையான யூதர்களும் அவர்களைச் சார்ந்து வாழ்ந்த பிற இன மக்களும் அன்றைய சமூகப் பொருளாதார அரசியல் அமைப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வறுமையிலும், நோயிலும், கடன் தொல்லையிலும் வாடினர். இத்தகைய ஒரு சூழலில்தான் இயேசு தாம் வளர்ந்த பின், விழிப்புணர்வு பெற்ற ஒரு யூத இளைஞராகவும், சமூகப் பொறுப்புடையவராகவும் தமது பணிகளைத் தொடங்கினார்.
துவண்டு இருந்த ஏழைகள், பெண்கள், இழிவுபடுத்தப்பட்ட மக்களை ஊர்ஊராகச் சென்று சந்தித்து நம்பிக்கையளித்தார். இவர்களின் இந்த அவலநிலைக்கு அவர்களின் பாவமோ கடவுளோ காரணம் அல்ல. மாறாக ரோம் அதிகாரமும் அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள உள்ளூர்த் தலைவர்களுமே காரணம் என்பதை விளங்கச்செய்தார். இந்த கருத்தை வலியுறுத்தி வீடுகளிலும், ஜெப ஆலயங்களிலும், வீதியிலும் பொதுவெளியிலும் தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
மக்களை அடிமைப்படுத்தி வந்த சமய மரபுகளை மீறுவதற்குப் பயிற்சி அளித்தார். யாரையும் வெறுக்காமல் ஏற்றத்தாழ்வைக் கடைப்பிடிக்காமல், சமத்துவ உணர்வோடு இருக்கக் கற்பித்தார். மேலும், தன்னைப்போல் பிறரை நேசிக்கவும், தன்னிடம் இருப்பதை, இல்லாமையிலிருப்போருடன் பகிர்ந்துகொள்ளவும், பிறரை மன்னிக்கவும், வன்முறையை அறவே ஒழிக்கவும் கற்பித்தார். தமது அன்றாட வாழ்வில், தாம் கற்பித்த அனைத்தையும் நடைமுறைப்படுத்திக் காட்டினார்.
புரட்சிகரமான கடவுள் நம்பிக்கை, சமூக நீதியுடைய கலாச்சாரம், சுரண்டலற்ற புதிய மானுடத்தை இலக்காகக் கொண்டு வாழ அறைகூவல் விடுத்தார். இயேசுவை இன்று கிறிஸ்தவர்கள் சொந்தம் கொண்டாடினாலும், அவர் அனைவரையும் நேசிக்கிறார். அன்புகூர்கிறார்; அரவணைக்கிறார். இந்த உலகம் கடவுளின் அன்பு, நீதி, அமைதி மற்றும் இரக்கம் ஆகியவற்றை அடிப்படைக் கொள்கையாக ஏற்று இயங்க வேண்டும் என விரும்புகிறார். அவ்வாறு செயல்படுகின்றவர்களுடன் அவர்களின் நம்பிக்கைகளைக் கடந்து அவர்களுடன் உடன் நிற்கிறார். கிறிஸ்து பொதுவானவர் பொதுவுடைமையே கிறிஸ்தவம்.
பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).
The post ‘‘எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி’’ appeared first on Dinakaran.