×

வாசுதேவநல்லூர் அருகே வனப்பகுதியில் யானை உடல் மீட்பு

சிவகிரி : வாசுதேவநல்லூர் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வயது ஆண் யானை உடல் உடற்கூறு பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

கடையநல்லூர் பொறுப்பு ரேஞ்சர் சுரேஷ், வனவர் மகேந்திரன் மற்றும் வனத்துறையினர் வாசுதேவநல்லூர் வட்டக்கன்னி செல்லபுலி பீட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் அழுகிய நிலையில் யானை உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நெல்லை மாவட்ட வன அலுவலர் மற்றும் உயிரினக்காப்பாளர் முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் முருகன் இறந்த யானையின் உடலை உடற்கூராய்வு செய்ய நடவடிக்கை எடுத்தார்.

நெல்லை கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் வாசுதேவநல்லூர் வட்டக்கன்னி செல்ல புலி பீட் பகுதிக்கு விரைந்து வந்தனர். மருத்துவக்குழுவினர் அதே இடத்தில் யானையை உடற்கூறு பரிசோதனை செய்தனர். இறந்த ஆண் யானைக்கு இரண்டு வயது இருக்கும்.

கடந்த 7ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு யானை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தான் உண்மை தெரிய வரும். உடற்கூறு பரிசோதனைக்கு பின் யானையின் உடல் அதே இடத்தில் குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது.

The post வாசுதேவநல்லூர் அருகே வனப்பகுதியில் யானை உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Vasudevanallur ,Western Ghats forest ,Thenkasi district ,
× RELATED வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி...