×

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை சீராக செயல்படுத்த கண்காணிப்பு குழு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு புகார்களுக்கு இடம் அளிக்கக்கூடாது

வேலூர், ஜன.10: பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை சீராக செயல்படுத்த தேவையான கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்ய ஏதுவாக பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளுக்கு சென்றடைவதை தொடர்புடைய மண்டல இணை பதிவாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். முன்கூட்டியே அனைத்து கரும்பையும் கொள்முதல் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் கரும்பு காய்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது. மேலும் அது தேவையற்ற புகார்களுக்கு வழிவகுக்கும். எனவே எந்தெந்த நாளில் எத்தனை கார்டுகளுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்றவாறு கரும்பு படிப்படியாக கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்படும் கரும்பு ரேஷன் கார்டுதார்களுக்கு வழங்கப்படும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கரும்பின் நுனியிலிருக்கும் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் தோகை காய்ந்து போகா வண்ணம் ஈரமான சணல் சாக்குகளை கொண்டு போர்த்தி பசுமையாக பேணப்பட வேண்டும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரும்பு வழங்குவதில் எந்தவிதமான புகார்களுக்கும் இடம் அளிக்காமல் விநியோகம் செய்ய வேண்டும்.

கூட்டுறவு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையிடம் கேட்டு பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் நாட்களில் ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு பெற வரிசையில் காத்திருக்கும் அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும். யாரையும் திருப்பி அனுப்பக் கூடாது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட தேவையான கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான விவரங்கள் தினசரி அறிக்கையாக பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் குறித்த புகார்களை பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். புகார்கள் இருந்தால், நடமாடும் கண்காணிப்பு குழுவிற்கு தெரிவித்து உடனுக்குடன் தீர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1967 மற்றும் 18004255901 ஆகிய எண்களிலும் தெரிவிக்கலாம். பொங்கல் பரிசு வழங்கும் பணியினை தொய்வின்றி செயல்படுத்திட தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு எவ்வித புகாருக்கும் இடமின்றி திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை சீராக செயல்படுத்த கண்காணிப்பு குழு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு புகார்களுக்கு இடம் அளிக்கக்கூடாது appeared first on Dinakaran.

Tags : Registrar of ,Co-operative Societies ,Vellore ,Registrar of Cooperatives ,Co- ,operative ,Societies ,Subbaiyan ,Pongal ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...