×

ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தலைமை தேர்தல் அதிகாரியுடன் சந்திரபாபு, பவன்கல்யாண் சந்திப்பு: வாக்காளர் பட்டியலில் முறைகேடு என புகார்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த சந்திரபாபு, பவன்கல்யாண் ஆகியோர் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக புகார் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் இணைந்து விஜயவாடாவில் உள்ள ஓட்டலில் நேற்று சந்தித்தனர்.

வெளியே வந்த பிறகு சந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன். மாநிலத்தில் வரலாறு காணாத அராஜகம் நடக்கிறது. ஜனநாயகத்தை சீர்குலைக்கும் பணியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஈடுபடுகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது சட்ட விரோத வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை பார்த்து, போலி ஓட்டுகளை சேர்க்க சதி செய்துள்ளனர். அனுபவம் வாய்ந்தவர்களை தேர்தல் பணிகளுக்கு நியமிக்க வேண்டும். 2600 பெண் போலீசார் பிஎல்ஓக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எங்கள் மீதும் ஜனசேனா கட்சியினர் மீதும் 6,000 முதல் 7,000 வழக்குகள் சட்ட விரோதமாகப் பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் கூறுகையில், ‘ ஒவ்வொரு தொகுதியிலும் ஒய்.எஸ்.ஆர். கட்சி தலைவர்கள் போலி வாக்காளர்களை பதிவு செய்துள்ளனர். சந்திரகிரியில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் போலி வாக்குகளை சேர்த்துள்ளனர். பதிவான சில போலி வாக்குகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பதிவாகும் முறைகேடு வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட விரோத வழக்குகள் அதிகரித்துள்ளன. கள்ள வாக்குகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்’ என்றார்.

The post ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தலைமை தேர்தல் அதிகாரியுடன் சந்திரபாபு, பவன்கல்யாண் சந்திப்பு: வாக்காளர் பட்டியலில் முறைகேடு என புகார் appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Pawan Kalyan ,Chief Electoral Officer ,Andhra ,Tirumala ,Chief Election Commissioner ,Rajiv Kumar ,Chief Election Officer ,
× RELATED கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம்...