×

விட்டு கொடுத்த முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியில் பாஜ போட்டி: வேட்பாளர் ரேசில் சிட்டிங் அமைச்சர், மதுபான ஆலை அதிபர் உட்பட 4 பேர்

புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 4 மாத உள்ள நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை மாநில வாரியாக தொடங்கியுள்ளன. மத்தியில் ஆளும் பாஜ மக்களவைத் தொகுதிகளை குறி வைத்து மத்திய அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, பணிகளை செய்து வருகிறது. மோடி அரசின் சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இக்கூட்டணி சார்பில் பீகார், கர்நாடகா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பூர்வாங்க பேச்சு நடத்தியது.

இதுதொடர்பாக பல கூட்டங்களை நடத்தி காங்கிரஸ் இத்தேர்தலை வலிமையாக எதிர்கொள்ளும் வகையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தி வருகிறது. முதல் கட்டமாக காங்கிரஸ், ஆம் ஆத்மியுடன் டெல்லி, பஞ்சாப், அரியானா, கோவா, குஜராத் மாநிலங்களில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இதற்காக தொகுதி பங்கீடு அறிவிப்பு வர உள்ளது. இந்நிலையில் புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான பொறுப்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாதம் ஒரு முறை புதுவைக்கு வந்து கட்சி நிர்வாகிகள், மக்களைச் சந்தித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து, புதுவையில் பாஜ சார்பில் சாதனை விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையே நடைபெற வில்லை. இருப்பினும் பாஜவினர் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். மோடி படத்துடன் கூடிய தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட சுவர் விளம்பரங்களும் ஆங்காங்கே எழுதப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதிமுக தனித்து போட்டியிடுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஓரிடத்திலும் வெல்லவில்லை. கூட்டணியில், புதுவை எம்பிதொகுதியை பெற்று போட்டியிடுவதில் பாஜ உறுதியாக உள்ளது.

என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த முதல்வர் ரங்கசாமியும் பாஜவுக்கு விட்டுகொடுக்க முடிவு செய்துவிட்டார். பாஜ சார்பில் ரியல் எஸ்டேட் அதிபரும், நியமன எம்எல்ஏயுமான ஒருவரும், பாஜவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வர்த்தக சங்கத்தில் பொறுப்பில் உள்ளவருமான சுயேட்சை எம்எல்ஏவும், காரைக்காலை சேர்ந்த கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாஜவில் இணைந்த மதுபான ஆலை அதிபரும் போட்டியில் முன்னணியில் உள்ளார். இதற்கிடையில் பாஜக தலைமை யாரை நிறுத்துவது தொடர்பாக ரகசிய சர்வேயும் செய்துள்ளது. இதில் பிரபலமாக உள்ள அமைச்சர் ஒருவரையும் களம் இறங்க வாய்ப்பு உள்ளது என அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

The post விட்டு கொடுத்த முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியில் பாஜ போட்டி: வேட்பாளர் ரேசில் சிட்டிங் அமைச்சர், மதுபான ஆலை அதிபர் உட்பட 4 பேர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Puducherry ,Chief Minister ,Rangasamy ,Rangaswamy ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...