×

முசுமுசுக்கை கீரை

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

குளிர்காலம் தொடங்கி பனிப்பொழிவும் அதிகமாக காணப்படும் தற்போதைய சூழலில் பெரும்பாலானோர் சளித்தொல்லை, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். ஆகையால் இதுபோன்ற நோய்களை தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்வது அவசியம். அந்தவகையில், இத்தகைய மழைக்கால நோய்களைத் தவிர்க்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய கீரை வகைகளில் ஒன்றுதான் முசுமுசுக்கை கீரை. இதன் பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

முசுமுசுக்கை கீரை இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பலநாடுகளில் காணப்படுகிறது. முசுமுசுக்கை ஒரு சிறுகொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இத்தாவர முழுவதும் ரோம வளரிகள் நிறைந்திருக்கும். இதனைத் தொடும்போது முசுமுசு வென்று ஓர் உணர்வை தருவதனால்தான் இக்கீரைக்கு முசுமுசுக்கை எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இக்கீரைக்கு முசுக்கை, கொம்புப்புடலை, பேய் புடலை, மாமூலி, ஆயிலேயம் மற்றும் மொசுமொசுக்கை என்ற வேறுபெயர்களும் உண்டு.

இத்தாவரத்தின் அறிவியல் பெயர்: முகியா மடராசுபட்டானா. தாவரக் குடும்பம்: குக்கர்பிட்டேஷியே ஆகும். இது முக்கோண வடிவிலான நீண்ட இலைகளாக காணப்படும். இதன் பூக்கள் மஞ்சள் நிறமும் பழங்கள் சிவப்பு நிறத்திலும் காணப்படும். இதன் இலையும், தண்டுகளும் சற்று சொர சொரப்பாக இருக்கும். தண்டுகளை சுற்றி சுனைகள் காணப்படும். இது செடி, மரம், சுவர்களில் பற்றி வளரும் இயல்புடையது. குறிப்பாக தமிழகமெங்கும் வேலிகள், புதர்கள் மற்றும் பெருமரங்களைச் சுற்றி படர்ந்து வளரக்கூடியது.

முசுமுசுக்கை கீரையானது துவர்ப்பு, மற்றும் கார்ப்புச் சுவையுடனும், வெப்பத் தன்மையும் கொண்டது. முசுமுசுக்கை கீரையின் இலை மற்றும் வேர் மருத்துவ குணம் கொண்டவை. முசுமுசுக்கையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. இதுமட்டுமில்லாமல் டெரிபினாய்டுகள், சாப்போனின், லூட்டோநாரின், வைட்டெக்சின், கொலும்பின் பீட்டாசைட்டோஸ்டிரால் மற்றும் பீனாலிக் மூலக்கூறுகள் முசுமுசுக்கையில் காணப்படுகிறது. இவ்வகை மூலக்கூறுகளே இதன் மருத்துவ குணங்களுக்கும் ஆதாரமாக திகழ்கிறது.

முசுமுசுக்கையின் மருத்துவ பண்புகள்:

சளி, காய்ச்சல், இருமல், நீர்கோவை, கோழை, சைனஸ், போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக முசுமுசுக்கை பயன்படுகிறது. முசுமுசுக்கை மூச்சுக்குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. நுரையீரல் தொற்று, சுவாசக்கோளாறு, மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கும் முசுமுசுக்கை மருந்தாக பயன்படுத்தப் படுகிறது. மேலும், முசுமுசுக்கை மூக்குப்புண், கண்எரிச்சல், உடல் எரிச்சல் மற்றும் இரைப்பை சம்பந்தமான நோய்களுக்கும் ஓர் சிறந்த தீர்வாக உள்ளது. குறிப்பாக காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முசுமுசுக்கை கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதினால் நல்லதொரு பலனை பெறமுடியும்.

மேலும், மன அழுத்தத்தை குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தவும், இதயத்தை பாதுகாக்கவும் முசுமுசுக்கை பயன்படுவதாக ஆய்வுத்தரவுகள் கூறுகின்றன. இதுமட்டுமில்லாமல் இளநரையை போக்கவும், தலைமுடி வளர்ச்சியினை ஊக்கப்படுத்தவும் முசுமுசுக்கை கீரை பயன்படுகிறது. இவ்வாறு முசுமுசுக்கை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

முசுமுசுக்கை பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இந்த மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் நீர்கோவை போன்ற பிரச்னைகளை தவிர்க்க கட்டாயம் முசுமுசுக்கையை வாரத்திற்கு ஒருமுறையாவது துவையல் அல்லது அடை, தோசை என செய்து உணவில் சேர்த்து கொள்ளுதல் நலம் தரும். முசுமுசுக்கை கீரையானது நோயால் பாதிக்கப்பட்ட உடலை வலுபெறச் செய்யும். காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களின் நாவானது சுவையை இழந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் முசுமுசுக்கை கீரையை உண்டால் நாவில் ஏற்பட்ட சுவையின்மை நீங்கும்.

மேலும் இக்கீரை துவர்ப்பு மற்றும் காரச்சுவையுடையதினால் புதினா, கொத்துமல்லி போன்றவற்றுடன் சேர்த்து துவையல் செய்து சாப்பிடுவது சுவையாக இருக்கும். கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக முசுமுசுக்கை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை குளித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். முசுமுசுக்கையில் காணப்படும் மருத்துவ குணங்களை பதார்த்த குணபாட நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முசுமுசுக்கை இலையின் குணம்
இருமலுட னீளை யிரைப்பு புகைச்சல்
மருவுகின்ற நீர்த்தோஷ மாறுந் – திருவுடைய
மானே முசுமுசுக்கை மாமூலி யவ்விலையைத்
தானே யருந்துவர்க்குத் தான்.

The post முசுமுசுக்கை கீரை appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kungum ,R. Sarmila ,
× RELATED முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!