×

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

கோடை வெப்பம் அதிகரித்து காணப்படும் தற்போதைய சூழலில் உடல் வெப்பத்தினை குறைக்க கீரைகள், பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் உடலுக்கு போதுமான தண்ணீர் அருந்துதல் மிக அவசியமானதாகும். குறிப்பாக ஏதொவொரு கீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நமது உடலுக்கு வலிமையைத் தரும். கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் மலிவான விலையில் எளிதாக அனைவருக்கும் வருடம் முழுவதும் கிடைக்கப்பெறும் கீரைதான் முருங்கைக்கீரை.

இதுதான் கொண்டுள்ள மருத்துவப் பண்புகளின் அடிப்படையின் காரணமாக கீரைகளின் அரசன் என்றழைக்கப்படுகிறது. இது அனைத்து மண் வகைகளிலும், தட்ப வெட்ப சூழலையும் ஏற்று வளரக்கூடிய கீரையாகும். இதன் இலை, வேர், பட்டை மற்றும் பூ என அனைத்து தாவரக் பகுதிகளுமே மருத்துவகுணம் நிறைந்ததாக கூறப்படுகிறது. முருங்கைக் கீரையின் தாவரவியல் பெயர் முருங்கா ஒலிஃபெரா. இது மொரிங்கேசியே எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது இந்த கீரை இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது.

முருங்கைக்கீரையில் நிறைந்திருக்கும் சத்துகள்

நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், ஜிங்க், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் பி, சி மற்றும் இ போன்றவை முருங்கைக்கீரையில் செறிந்து காணப்படுகின்றன. இதுமட்டுமின்றி உடலுக்குத் தேவையான இருபது முக்கிய அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்களை தரக்கூடியதாக முருங்கைக்கீரை சிறந்து விளங்குகிறது. குறிப்பாக உடல் மட்டுமே உற்பத்தி செய்யக்கூடிய 8 வகையான அமினோ அமிலங்களைக் கொடுக்கக்கூடிய ஒரே ஒரு சைவ உணவு முருங்கைக்கீரையாகும்.

முருங்கைக் கீரையில் காணப்படும் தாவரமூலக்கூறுகள்:

பிளேவோனாய்டுகள், அல்கலாய்டுகள், டானின், சாப்போனின் கிளைக்கோஸைடுகள், பீனாலிக் அமிலம், கரோட்டினாய்டுகள் வைட்டமின்கள் மற்றும் முராமோஸைடு ஏ மற்றும் பி, நியாசிமின் ஏ மற்றும் பி உள்ளிட்ட பல்வேறு மூலக்கூறுகளை கொண்டுள்ளதாக முருங்கைக்கீரை திகழ்கிறது. இதுமட்டுமின்றி உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்டுகளையும் முருங்கைக்கீரை கொண்டுள்ளது.

முருங்கைக்கீரையின் மருத்துவ பயன்கள்

*கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயத்தின் செயல்பாட்டினை மேம்படுத்த முருங்கைக்கீரை பயன்படுகிறது.

*இதில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்து காணப்படுவதினால் உடலில் உள்ள கெட்ட செல்களை அழித்து நல்ல செல்களின் செயல்பாட்டை உருவாக்குகின்றது.

*ரத்த அழுத்தத்தை குறைக்கவும், சர்க்கரை நோயினை குணப்படுத்தவும் உதவுகிறது.

*புற்றுநோய்க்கு மருந்தாகவும், கல்லீரல் பாதிப்பினை சரிசெய்யவும், சிறுநீரக செயல்பாட்டினை ஊக்குவிக்கக்கூடியதாகவும் முருங்கைக்கீரை உள்ளது.

*நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதினால் மலச்சிக்கல் பிரச்னையை தீர்த்து உடலில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றவும் முருங்கைக்கீரை பயன்படுகிறது.

*மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

*உடல் வெப்பத்தினை குறைத்து உடலினை பாதுகாக்க பயன்படுகிறது.

*இரும்புச்சத்து நிறைந்து காணப்படுவதினால் ரத்தசோகைக்கு நல்ல ஒரு உணவாக மருத்துவர்களால் முருங்கைக்கீரை பரிந்துரைக்கப்படுகிறது.

* வைட்டமின் ஏ இதில் நிறைந்து காணப்படுவதினால் கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்தது.

* கருவுறுதல் பிரச்னைக்கும் ஓர் தீர்வாக முருங்கைக்கீரை செயல்படுகிறது.

*கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு தாதுக்கள் முருங்கைக்கீரையில் உள்ளதால் உடல்வலிமையைப் பாதுகாக்கிறது.

* வைட்டமின் பி செறிந்து காணப்படுவதினால் நரம்புகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.

* முடி உதிர்தல், நரை போன்ற பிரச்னைகளுக்கும் முருங்கைக்கீரை உதவுகிறது.

* வாய்ப்புண் பிரச்னை உள்ளவர்களுக்கும் முருங்கைக் கீரை உதவுகிறது.

* முருங்கை மரம் முழுவதுமே மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ, காய் என அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.

* இத்தகைய நன்மைகளை கொண்டுள்ள முருங்கைக்கீரையை பொரியல், மசியல், குழம்பு மற்றும் சூப் செய்து பயன்படுத்தலாம்.

* முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் நீங்கும்.

* முருங்கை இலைச் சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், ரத்த சுத்தியாகும். எலும்புகளையும் வலுப்படுத்தும்.

* முருங்கைக் கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

* ஆஸ்துமா, மார்சளி போன்ற சுவாசக்கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது.

* முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சைச் சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.

குணப்பாட நூலில் முருங்கையிலையின் மருத்துவக் குணம் குறித்த பாடல்

செறிமந்தம் வெப்பந் தெரிவிக்குந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகு – மறமே
நெருங்க யிலையொத்த விழி நேரிழையே நல்ல
முருங்கை யிலையை மொழி.

The post முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kungum ,R. Sharmila ,Dinakaran ,
× RELATED மனதை ஒருநிலைப்படுத்தும் குரோஷே கலை!