×

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அவரை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

 

கம்பம், ஜன. 9: கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அவரைக்காய் விலை அடியோடு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அவரை பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பரவலாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் அவரை விவசாயம் செய்யப்படுகிறது. கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான புதுப்பட்டி, ராயப்பன்பட்டி, சின்னமனூர், காமாட்சிபுரம், ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் அவரைக்காய் பயிரிடப்படுகிறது.

பன்னீர் திராட்சை பயிரிட்ட பகுதிகளில் திராட்சையின் விலை குறைய தொடங்கியதால், மாற்று விவசாயமாக திராட்சை பயிரிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கொடிகளில் அவரை கொடிகளை பயிரிட்டனர். அவரை பந்தல் அமைக்க ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவழிப்பதாக கூறும் விவசாயிகள், தற்போது அவரை கிலோ ரூ.20க்கு விற்பது கண்ணீரை வரவழைப்பதாக கூறுகின்றனர். குறைந்தது கிலோ ரூ.40க்கு மேல் விற்பனை செய்தால் மட்டுமே அவரைக்காய் பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும் பொழுது, 80 கிலோ மூடை அவரைக்காய் எடுக்க கூலி ஆட்களுக்கு 700 ரூபாய், இத்துடன் வண்டி கூலி, கமிஷன் கடை கூலி மற்றும் சாக்கு என அதற்கே தனியாக குறைந்தது 800 முதல் 900 ரூபாய் வரை செலவாகிறது. இத்துடன் பராமரிப்பு செலவு, பயிர்களை காக்கும் மருந்துகளின் செலவு, என அதிக அளவு உள்ளது. இந்நிலையில் 80 கிலோ எடை கொண்ட அவரை மூடை ரூபாய் 1600க்கு மட்டுமே தற்போது விற்பனையாகிறது. இதனால் அவரை பயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். குறைந்தது அவரைக்காயின் விலை கிலோ 40க்கு மேல் விற்பனையானால்தான் முதலீடு கைக்கு வரும் என்றனர்.

The post கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அவரை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Kambam Valley ,Kampham ,Theni district ,Gampam valley ,
× RELATED விவசாயிகளுக்கு செயல்விளக்கம்