×

உச்ச நீதிமன்றத்தின் நீதி, சமூகநீதி காக்கும் 2 தீர்ப்புகளையும் வரவேற்கிறோம்: முத்தரசன் அறிக்கை

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் நீதி, சமூக நீதி காக்கும் 2 தீர்ப்புகளையும் வரவேற்கிறோம் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த மதவெறி தாக்குதலில் பில்கிஸ் பானு, அவரது மூன்று வயது குழந்தை உள்பட 14 பேர் கொடூரப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய புலனாய்வு துறையின் மும்பை நீதிமன்றத்தால் 11 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது. ஆயுள் தண்டனை கைதி உள்பட குற்றவாளிகள் அனைவரும் தண்டனை காலம் முடியும் முன்பு, குஜராத் மாநில பாஜ அரசால், கடந்த 2023 ஆகஸ்ட் 15 விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் அரசின் விடுதலை உத்தரவை எதிர்த்து, பில்கிஸ் பானுவும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் உள்பட மாதர் அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தன.

இந்த முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் குஜராத் மாநில பாஜ அரசின் உத்தரவை ரத்து செய்து, குற்றவாளிகள் சிறைக்கு செல்ல வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. இதேபோல், முன்னேறிய சாதியினரில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்ற தீர்ப்பு வழங்கி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முன்னேறிய சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்காது என்று எடுத்த கொள்கை முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழிவகை செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நீதி, சமூக நீதி காக்கும் இரண்டு தீர்ப்புகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post உச்ச நீதிமன்றத்தின் நீதி, சமூகநீதி காக்கும் 2 தீர்ப்புகளையும் வரவேற்கிறோம்: முத்தரசன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Mutharasan ,Chennai ,Gujarat ,Bilgis Banu ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...