×

ஓம்காரேஷ்வர் அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் அதிசயக் கட்டுமானம்: மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம்

* 600 மெகாவாட் திறன் கொண்டது முதல் கட்ட பணிகள் மார்ச்சில் முடியும்

மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் மீது அமைந்துள்ளது ஓம்காரேஷ்வர் அணை. இதன் நீர்தேக்க பகுதியில், நீரின் மேற்பரப்பில் இந்த மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மற்றும் மத்திய பிரதேச அரசின் ரூ.3950 கோடி முதலீட்டில் மொத்தம் 600 மெகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இரண்டு கட்டங்களாக இது அமைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் இதில் இணைந்துள்ளன. ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் (RUMS) நிறுவனத்தின் தலைமையில் என்எச்டிசி, எஸ்ஜேவிஎன், ஆம்ப் இந்தியா, எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்களின் துணையுடன் இது நிறுவப்பட்டு வருகிறது.

278 மெகா வாட் உற்பத்தி செய்யும் திறனோடு முதல் கட்ட மின் உற்பத்தி நிலையம் கிட்டத்தட்ட முடியும்தறுவாயில் உள்ளது. அனைத்து கட்டமைப்புகளும் முடிக்கப்பட்டு ‘கிரிட்’ உடன் இணைக்கப்படும் நிலையில் உள்ளது. வரும் மார்ச் மாதத்தில் முதல் கட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும் என ரேவா நிறுவன திட்ட மேலாளர் ராகவேந்தர் தெரிவிக்கிறார். எப்படி செயல்படுகிறது?: ம.பி. மாநிலத்தின் உயிர்நாடியான நர்மதை ஆறு பாசனத்துக்கான பயன் அளிப்பதோடு நீர் மின்நிலைய ஆற்றலையும் கொடுத்து வந்தது.

இப்போது சூரிய ஒளி மின் உற்பத்திக்கும் உதவுகிறது. ஓம்காரேஷ்வர் அணையின் நீர்த்தேக்கத்தின் மேற்பரப்பில் சூரிய ஒளி தகடுகள் (சோலார் பேனல்) வரிசையாக மிதக்க விடப்பட்டுள்ளன. சூரிய ஒளி இதன் மீது பாய்ந்து மின் ஆற்றலாக மாற்றி அனுப்பப்படும் விதத்தில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  மின்மாற்றியும் மிதக்கிறது..: நீர்ப்பரப்பில் பரந்து விரிந்து மிதக்கும் சோலார் பேனல்களின் அருகே மிதக்கும் மின்மாற்றியும் நிறுவப்பட்டுள்ளது. சூரிய ஆற்றலில் இருந்து நேர் மின்னோட்டமாக்கி (DC) அதை மாற்று மின்னோட்டமாக (AC) மாற்றி, உயர்அழுத்த நிலையில் அனுப்பப்படும்.

மின்மாற்றி உபகரணங்கள் உள்ளிட்டு 180 டன் எடை உள்ள கருவிகள் அனைத்தும் நீர்தேக்கத்தில் மிதக்கும் வகையில் நூதன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தனை கனம் கொண்ட கருவிகள் அனைத்தையும் தாங்குவதற்கு ஃபெரோஸ் சிமென்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீர்த்தேக்க கரையின் நீர்விளிம்பில் மின்மாற்றியின் பெரும் கட்டுமானங்கள் மிதந்த நிலையிலேயே உருவாக்கப்படுகின்றன. முழுவதும் முடிவடைந்த பின் இந்த மின்மாற்றி மேடைகள் படகுகள் மூலமாக, சோலார் பகுதிகள் வைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தின் நடுப்பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு நிலைநிறுத்தப்படுகின்றன.
பயன்கள் என்னென்ன..: அனல்மின் நிலையம் போன்றவற்றில் கார்பன் உமிழ்வுகள் மிகப்பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உள்ளது.

ஆனால் இந்த மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தால், 12 லட்சம் டன் கார்பன் உமிழ்வு தடுக்கப்பட்டுள்ளது. 2 கோடி மரங்கள் உள்ளிழுக்கும் கார்பன் உமிழ்வுக்கு இணையானது இது. மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம் மின்தேவையையும் தாண்டி, அதிக அளவு பயணிகளை ஈர்த்து சுற்றுலாவையும் மேம்படுத்துகிறது. பாதக அம்சம்: ஒப்பீட்டளவில் சாதகம் தான் அதிகம். பாதகம் குறைவே. இந்த வகை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான செலவு சற்று அதிகம். மிதக்கும் சூரிய ஒளி தகடுகள், மின்மாற்றி ஆகியவற்றோடு இவற்றை நங்கூரமிட்டு நிறுத்துவதற்கான செலவும் அதிகம்.

தரைத்தள சோலார் திட்டத்தோடு ஒப்பிடுகையில் மிதப்பதற்கு 25 சதவீதம் கூடுதல் செலவாகும் என்கிறார்கள். இதைத்தவிர சோலார் பேனல்களை மிதக்க விடுவதால் நீரின் தரம், உயிரினங்களின் வாழ்முறை ஆகியவற்றுக்கு பாதிப்புகள் இருக்குமா என்பதற்கான சரியான ஆய்வு தரவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. பிரமாண்ட சோலார் பேனல்கள்: ஓம்காரேஷ்வர் அணையின் மொத்தப் பரப்பு 23 ஆயிரம் ஏக்கரில் விரிகிறது. மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் கட்டமும் நிறைவடைந்தால், மொத்தம் 3000 ஏக்கர் அளவில் சோலார் பேனல்கள் பிரமாண்டமாக மிதந்து கொண்டிருக்கும்.

இத்திட்டம் மூலம் 4.50 லட்சம் வீடுகளுக்கு மின் விநியோகம் செய்ய முடியும் என மத்திய பிரதேச மாநில எரிசக்தி நிறுவனமான மத்திய ஷேத்ர வித்யுத் விதரன் நிர்வாக இயக்குநர் கணேஷ் சங்கர் மிர்ஸா தெரிவித்துள்ளார். ஓம்காரேஷ்வர் மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலைய திட்டத்தின் பலன் முழுமையாக வெற்றியடைந்தால், நாடு முழுவதும் இவ்வகை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் பணி தீவிரமாகும்.

* உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் மத்திய பிரதேச மாநிலத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அனல் மின் நிலையம் போன்ற மரபு சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவதை தடுக்க மரபுசாரா ஆற்றல் வளங்களை முன்னெடுப்பதில் ஒன்றிய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) என்கிற வகையில் சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவி வெப்பம் போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றலுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் ம.பி. மாநிலம் மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை தொடங்கியுள்ளது.

* நில ஆர்ஜிதமும் தேவையில்லை நிலத்தடி நீருக்கும் வேலையில்லை
தரைப்பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் திட்டங்களில் 36 ஆயிரம் கேஎல் நிலத்தடி நீர் செலவாகும். இதில் அது தவிர்க்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்க நீர் ஆவியாகாமல் தடுப்பதற்கு தெர்மாகோல் போன்ற கோமாளித்தனங்கள் ஏதுமின்றி, சோலார் பேனல்களே அதை செய்து விடுகிறது. 60 முதல் 70 சதவீதம் வரை நீர் ஆவியாகி போகாமல் இந்த தகடுப் பரப்புகள் தடுக்கிறது.

தரைப்பகுதியில் அமைக்கப்படும் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை காட்டிலும் மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் 10 சதவீதம் கூடுதலாக ஆற்றல் உருவாக்கப்படுகிறது. சோலார் தகடுகள் நீர்ப்பரப்பில் மிதப்பதால் ஏற்படும் குளிர்த்தன்மையே ஆற்றல் அதிகரிப்புக்கு காரணமாக அமைகிறது. பரந்த விரிந்த நீர்ப்பரப்பின் மேல் அமைவதால் நில ஆர்ஜிதம் போன்ற தொல்லைகள் இல்லை. அதற்கான இழப்பீட்டு செலவும் மிச்சம். அந்த வகையில் மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் 1200 ஹெக்டேர் நிலங்கள் பறிபோகாமல் தடுத்திருக்கிறது.

* தமிழகத்தில்….
தமிழகத்தில் 2022ம் ஆண்டே மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. 2022 மார்ச் 7ம் தேதி தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு அங்கு இந்தியாவின் முதல் மற்றும் பிரமாண்ட மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார். தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய நீர் தேக்கத்தில் நிறுவப்பட்டுள்ள, மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் ஆண்டுக்கு 42.0 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரமும் ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உரங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

* அடுத்து விண்வெளிக்கு…
மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் சீனா, தென்கொரியா, ஜப்பான், தாய்லாந்து, போர்ச்சுகல், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் அடுத்தடுத்த நகர்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. பூமியை தாண்டி அது விண்வெளிக்கும் இனி செல்கிறது. உலகின் மிகப்பெரிய சோலார் தயாரிப்பு நிறுவனமான லாங்கி கிரீன் எனர்ஜி டெக்னாலஜி நிறுவனம் விண்வெளிக்கு தகடுகளை அனுப்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. புவிவட்ட பாதையில் பேனல்களை நிலைநிறுத்தி சூரிய ஆற்றலை இழுத்து மறுபடி பூமிக்கு அனுப்பும் சாத்தியக்கூறுகளை இந்த நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

The post ஓம்காரேஷ்வர் அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் அதிசயக் கட்டுமானம்: மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம் appeared first on Dinakaran.

Tags : Omkareshwar Dam ,Narmada River ,Khandwa district ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED ‘‘மகாசிவராத்திரியில் கிருஷ்ணகானம்’’