×

நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தில் சுரங்கப்பாதை பணிகள் ஜூன் மாதத்தில் முடியும்: அதிகாரிகள் நம்பிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தில் சுரங்கப்பாதை பணிகள் ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் அருகே ஊட்டுவாழ்மடம், கருப்புக் கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமங்களில் உள்ளவர்கள் ஊட்டுவாழ்மடம் அருகே உள்ள ரயில்வே கேட்டை கடந்து தான், நாகர்கோவில் வர வேண்டும். ரயில் நிலையம் அருகில் இருப்பதால், ரயில்கள் இன்ஜின் மாற்றும் போது கூட ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும்.

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 13 மணி நேரம் பூட்டியே இருக்கும். நாள் ஒன்றுக்கு 45 முதல் 50 தடவை கேட் மூடப்படும். இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் சிரமம் அடைந்தனர். எனவே இந்த பகுதியில் சுரங்கநடைப்பாதை அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஊட்டுவாழ்மடம் வசந்தம் குடியிருப்போர் நல சங்கம், குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து, ஊட்டுவாழ்மடத்தில், சுமார் ரூ.4.5 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. முதலில் ஊட்டுவாழ்மடத்தில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்றன. சுரங்கம் அமைய உள்ள பகுதியில் 4 தண்டவாளங்கள் உள்ளன. இந்த 4 தண்டவாள பகுதிகளிலும் கர்டர் பாலம் அமைக்கப்பட்டது. பின்னர் சுரங்கம் தோண்டும் பணிகள் நடந்தன. கர்டரின் வலது புறம் சுரங்கம் தோண்டப்பட்டு கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதே போல் மறுபுறம் சுரங்கம் அமைக்க குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த டிசம்பரில் மழை காரணமாக இந்த பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது மழை இல்லாததால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விடுமுறை நாளிலும் பணிகள் நடக்கின்றன. வருகிற மே அல்லது ஜூன் மாத்துக்குள் இந்த பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த சுரங்கப்பாதை சுமார் 8 மீட்டர் அகலத்திலும், 4.5 மீட்டர் உயரத்திலும் அமைகிறது. நீளம் சுமார் 80 மீட்டர் இருக்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். சுரங்கப்பாதையில் இரு முனைகளிலும் வேகத்தடை அமைக்கப்படுகிறது. மழை காலத்தில் தண்ணீர் உள்ளே வராத வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களும் செல்ல முடியும். பகலில் மின் விளக்குகள் தேவையில்லாத வகையில், போதிய வெளிச்சம் வரும் தன்மையுடன் சுரங்கப்பாதை அமைக்கப்பட இருக்கிறது. குறைந்த பட்சம் 6 மாதங்களில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. மழை உள்ளிட்ட இயற்கை சீற்றம் காரணமாகவே பணிகள் தாமதம் ஆனதாக அதிகாரிகள் கூறினர்.

The post நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தில் சுரங்கப்பாதை பணிகள் ஜூன் மாதத்தில் முடியும்: அதிகாரிகள் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagercoil Ootujimadam ,Nagercoil ,Ootujimadam ,Nagercoil Junction ,Karupuk Kotte ,Illuphaiyadi ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...